மல்லிகை உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்தது
நிர்வாகி
0
மல்லிகை பூவின் உற்பத்தி திடீரென குறைந்ததால் அதன் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். நாள்தோறும் சுமார் பத்து முதல் பதினைந்து டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.இவர்கள் உற்பத்தி செய்யும் மல்லிகை பூக்களை சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள விவசாயிகள் மல்லிகை மார்கெட்டில் ஏலம் முறையில் விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மல்லிகை பூ நாள்தோறும் தமிழகத்தில் பல இடங்களுக்கும் கோயமுத்தூரில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பப்படுகிறது.இதுதவிர நாள்தோறும் வேன் மூலம் பெங்களூரு, மைசூர் ஆகிய பகுதிகளுக்கும் சத்தியமங்கலம் மல்லிகை பூ விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த பத்து நாட்களுக்கு முன் கடந்த மாதம் பெய்த பனிக்கட்டி மலையின் எதிரொலியாக சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை உற்பத்தி திடீரென அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ ரூ. 16 க்கு விற்பனையானது. இது பூ பறிக்கும் செலவைவிட குறைந்த விலை என்பதால் மல்லிகை பூவை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர்
தொடர்ந்து ஒரு வாரம் விலையில் உயர்வு இல்லாத காரணத்தால் மல்லிகை பூ விவசாயிகள் பலர் தங்கள் மல்லிகை செடியின் கொழுந்துகளை வெட்டி மீண்டும் விரீயமுடன் வளரசெய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் மல்லிகை பூவின் உற்பத்தி குறைய தொடங்கியது.மல்லிகை உற்பத்தி குறைய தொடங்கியதால் சரிந்து வந்த மல்லிகை விலை தற்போது உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.140 முதல் 170 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவாக உள்ளதால் மல்லிகை பூ மார்கெட்டிற்கு வந்ததும் வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிக்கொள்கின்றனர்.