Breaking News

தீ விபத்துகளில் குற்றநோக்கம் எதுவும் இல்லை

நிர்வாகி
0
கவனக்குறைவால் தீ விபத்து நிகழ்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் அண்மையில் 16 கிராமங்களில் ஏற்பட்ட தீ விபத்தில், 309 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
எனவே தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை, தீ அணைப்புத் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
தீ விபத்தில பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனுக்குடன் நிவாரணம் வழங்கப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
சமையல் கூடங்களில் இருந்து அஜாக்கிரதை காரணமாக தீ விபத்து ஏற்படுகிறது. இவ்விபத்துகளில் எவ்வித குற்ற நோக்கமும் இல்லை.
தீ விபத்தைத் தடுக்கும் பொருட்டு, கீழ்காணும் விதிமுறைகளைக் கையாள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எளிதில் தீப்பற்றக் கூடிய வைக்கோல், புல் கொண்டு மேற்கூரை வேய்வதைத் தவிர்க்க வேண்டும். இரு வீடுகளுக்கு அருகே வைக்கோல் போர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வயல் வெளிகளில் வைக்கோல் போர்களை அமைக்க வேண்டும். மூங்கில்களைப் பயன்படுத்தும் போது, அவற்றை இணைக்க ஆணிகளுக்குப் பதில் நார்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஆணிகள் வெப்பம் அதிகரிக்கும் போது வெடித்துச் சிதறி, பல மீட்டர் தூரத்துக்கு அப்பாலுள்ள வீடுகளுக்கும் தீ பரவி விடுகிறது.
மின் பாதைகளுக்கு இடையூறு செய்யும் மரக் கிளைகளை வெட்ட வேண்டும். வீட்டைச் சுற்றி உள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும்.
சில வீடுகளில் சிறுவர்கள் கவனக்குறைவாக சமையலில் ஈடுபடுவதாலும், சமையல் செய்யும் இடத்துக்கு அருகே துணிகளை தொங்க விடுவதாலும் தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும்.
சமையல் செய்து விட்டு நெருப்பை அணைக்காமல் விடுவதாலும் தீ விபத்து ஏற்படுகிறது. எனவே இனி வருங்காலங்களில் கவனக் குறைவால் தீ விபத்து ஏற்பட்டால், தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Tags: தீ விபத்து

Share this