சிதம்பரத்தில் மாணவர் இந்தியா நடத்திய காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம்..!
ஜனவரி 31
காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை கடந்த 8 வருடங்களாக மாணவர் இந்தியா பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடித்து வருகிறது.
அதே போல் இவ்வருடமும் காந்தி படுகொலை நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் ஜாவித் ஜாபர் தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கின் நோக்கம் குறித்து மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமியா அவர்கள் விளக்கி பேசினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தோழர் கனகராஜ் அவர்கள் பேசியதாவது;
“காந்தி படுகொலையை ஒரு மனிதப் படுகொலையாக மட்டும் நினைக்கக் கூடாது. இந்தியாவை ஒன்றாக்க வேண்டும் என நாடு முழுவதும் 685-க்கும் மேற்பட்ட சிறுசிறு சமாஸ்தானங்கள் இணைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என நீண்ட நெடிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மதச்சார்பின்மை ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், பொருளாதார சீர்திருத்தம், சமூக நீதியென நான்கு அம்சங்களும் விடுதலை பெற்ற இந்தியாவில் நான்கு தூண்களாக இருக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.
வேற்றுமையில் ஒற்றுமை; உணவு, உடை கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காந்தியடிகள் மேற்கத்திய கலாச்சாரம் அண்ட விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் நேரு மேற்கத்திய கலாச்சாரத்தின் படி இருந்தார். அப்படி உள்ளவரை இந்தியாவின் பிரதமராக நேருவை காந்தி வர வேண்டும் என்றார். அதற்கு ஒரே காரணம் அவர் மதச்சார்பின்மை உடன் நடந்து கொண்டது தான்.
காந்தியை கொன்றவருக்கு காந்தி அல்ல பிரச்சனை. இந்த மதச்சார்பின்மைதான் பிரச்சனை, இரண்டாவதாகக் கூட்டாட்சியை சிதைப்பதற்காக இந்தியாவில் பொது வெளியை வலது சாரி தத்துவம் ஆக்கிரமித்து விட்டார்கள். இதனைத் தடுப்பதற்கு சுதந்திரப்போரில் அரசியல் அல்லாத இயக்கங்கள் ஒன்று கூடியது போல் ஒரே இயக்கமாக ஒன்று கூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமா? ஒரே நாடாக இருக்க வேண்டுமா? இந்தியாவாகவே இருக்க வேண்டுமா என்பதுதான் மதச்சார்பின்மையை நிரூபிக்கப் போகிறது. காந்தி படுகொலை, ஆர்.எஸ்.எஸ்., சங்க் பரிவார கருத்துக்களை சாதாரண மக்கள் வரை அம்பலப்படுத்த உரையாடுவது அவசியமாகிறது” என்று அவர் பேசினார்.
பின்னர் பேசிய, விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் MLA அவர்கள் அம்பேத்கருக்கும், காந்திக்குமான முரண்பாடுகளை கூறி, இவ்விஷயத்தில் காந்திக்கு ஆதரவாக நிற்போம் என கூறினர்.
பின்னர் பேசிய திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்கள் "பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் பெரியார் பயங்கரவாதங்களை எப்படி எல்லாம் எதிர்த்தார் என்பதையும் சுட்டிக் காட்டி பேசினார்.
இறுதியாக பேசிய மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள்,
“மதவெறியால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியும், கோட்சேவும் பக்திமிக்க இந்துக்கள். ராமராஜ்யத்தை விரும்பியவர்கள்.
காந்தி விரும்பிய ராமராஜ்யத்தில் அனைவருக்கும் இடமிருந்தது. கோட்சே கூறிய ராமராஜ்யத்தில் அதற்கு இடமில்லை. எனவே தான் காந்தி படுகொலைக்கு நாதுராம்கோட்சே தலைமை தாங்கினார் .
இதை அழுத்தமாக் நாட்டுமக்களுக்கு சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற கருத்தரங்கு மூலம் ஜனநாயக வழியில் அதை செய்து வருகிறோம் என்றார்.
மேலும் அவர்கள் காந்தியை கொல்ல பலமுறை முயற்சித்ததையும்,நேருவையும் கொல்ல திட்டமிட்டிருந்ததையும் கூறினார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் காந்தி நினைவு நாளில் உறுதிமொழி எடுத்தபோது கோட்சே பெயரைச் சொல்லக் கூடாது என்று காவல் அதிகாரி மற்றும் காவலர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழக முதல்வர் தமிழகத்தில் கோட்சேவின் கொள்கைகளை அனுமதிக்கமாட்டோம் என்று கருத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறையினர் காந்தியை கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி உள்ளிட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பேசினார்.
இறுதியாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை மாணவர் இந்தியா நிர்வாகிகள் வழங்கினர்.
மஜக மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ் நெய்வேலி இப்ராஹிம் ஆகியோரும் பங்கேற்றனர்.
மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் பிர்தௌஸ், மஜக மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் நவீன், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் பைசல், மாணவர் இந்தியா நகர செயலாளர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா நகர பொருளாளர் பாருக் , தேனி மாவட்ட செயலாளர் அஷ்ரஃப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: செய்திகள்