Breaking News

செயல்பாட்டுக்குக் கட்டணமா?

நிர்வாகி
0
ஒரே நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 154 கிளைகளையும் 1,540 தானியங்கிப் பணப்பட்டுவாடா மையங்களையும் திறந்திருக்கிறது "பாரத ஸ்டேட் வங்கி'. விழா அழைப்பிதழில் அந்த வங்கியே குறிப்பிட்டுள்ளதுபோல, ""உலகில் இதைச் செய்யவல்ல ஒரே வங்கி'' இப்போதைக்கு "பாரத ஸ்டேட் வங்கி' மட்டுமே. உலகெங்கும் பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டுவரும் நிலையில், நாட்டின் மிகப் பெரிய வங்கியின் இந்த வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவும் பொதுத்துறை வங்கி என்பதாலேயே நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

இந்தியாவைப் பொருத்த அளவில் ஓர் ஊரில் புதிதாக வங்கிக் கிளை திறப்பது என்பது சம்பிரதாயமானதல்ல. அது வெறும் பணப் பரிமாற்றத்தை மட்டுமே மேற்கொள்வதற்கானதுமல்ல. சேவை நோக்கத்தை மையமாகக் கொண்டே இந்திய வங்கித் துறையின் அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய பொருளாதாரக் கொள்கையின் அமலாக்கத்துக்குப் பிறகு இந்திய வங்கித் துறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, வெளிநாட்டு மூலதனத்தைக் கொண்ட வங்கிகளின் வருகை வங்கித் துறையில் கடும் போட்டியையும் புதிய போக்குகளையும் ஏற்படுத்தியது. இந்தப் புதிய சூழலை வியாபார அடிப்படையில் பார்த்தால், இந்திய வங்கிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன என்றே சொல்ல வேண்டும்.

அதேநேரத்தில், இந்திய வங்கியியலின் அடிப்படை நோக்கத்தை நம் வங்கிகள் கொஞ்சம்கொஞ்சமாக இழந்துவருகின்றன என்பதுதான் வேதனை தரும் விஷயம். மக்களுக்கான வங்கிச் சேவை என்பது கொஞ்சம்கொஞ்சமாக லாபத்துக்காக மட்டுமே என்றாகிவிட்ட வங்கித் தொழிலாக மாறி வருகிறது. சாமானிய மக்கள் வங்கியில் கடன் பெறுவது என்பது இப்போதும் எளிதான விஷயமாக இல்லை.

வங்கியாளர்கள் பணத்தின் பாதுகாப்பு கருதி சில நடைமுறைகளைக் கையாள்வதாகக் கூறினாலும் வாராக்கடன் பட்டியல்கள் எப்போதுமே அவர்கள் கூற்றுக்குச் சாதகமானதாக இருந்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன் "இந்தியன் வங்கி' திவாலாகும் நிலைக்கு வந்தபோது வங்கிகளை ஏமாற்றுபவர்கள் சாமானியர்களா, பண முதலைகளா என்பது வெட்டவெளிச்சமானது.

சாமானிய மக்கள் தங்கள் அவசரத் தேவைக்காக கடன் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கும் ஒரே கதவு நகைக் கடன் மட்டும்தான். இந்தியாவில் 53,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ள நிலையில், நகைக்கடன் அளிக்கப்படும் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 10 பேர் நகைக்கடன் வாங்குவதாக மதிப்பிடப்படுகிறது.
எனினும், வங்கிகளைவிடவும் லேவாதேவிக்காரர்களே இந்தச் சந்தையைக் காலங்காலமாகக் கட்டுப்படுத்துகின்றனர்; வங்கிகளிலுள்ள நடைமுறைத் தாமதம் ஏதுமின்றி கடன் தொகையை இவர்கள் உடனே வழங்கிவிடுவதுதான் காரணம்.
வட்டிவிகிதம் அதிகம் என்பதால், இந்த நகைகள் பெரும்பாலும் மீட்கப்படுவதில்லை. இதனால், ஏழைகளின் வாழ்நாள் சேகரிப்பு கடன் வாங்கிய அடுத்த சில மாதங்களில் லேவாதேவிக்காரர்களுக்கு உரித்தானதாகிவிடும்.

இந்தத் துயரக் கடனுடன் ஒப்பிடுகையில் - ஏராளமான குறைபாடுகள் இருந்தாலும் - வங்கி நகைக் கடன் நல்ல மாற்றாக இதுவரை இருந்தது.

ஆனால், "பாரத ஸ்டேட் வங்கி' நிர்வாகம் இப்போது எடுத்திருக்கும் ஒரு நடவடிக்கை சாமானிய மக்களை மீண்டும் லேவாதேவிக்காரர்களை நோக்கித் தள்ளுவதாக அமைந்திருக்கிறது. அதாவது, நகைக்கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ. 1,000 என்று அந்த வங்கி நிர்ணயித்திருக்கிறது. இதனால், ரூ. 5,000 நகைக் கடன் பெறுபவர்கூட ரூ. 1,000 செயல்பாட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, இந்திய வங்கிகளில் நகைக் கடனாளிகளிடம் செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, நகை மதிப்பீட்டாளருக்கான கட்டணமாக கடன் தொகையில் 0.5 சதம் முதல் 1 சதம் வரை வசூலிக்கப்படுவதுண்டு. அதுவும்கூட சில வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இந்தக் கட்டணம் மிகாது.

"பாரத ஸ்டேட் வங்கி'யில் நகை மதிப்பீட்டாளர்கள் கிடையாது. அதனால், செயல்பாட்டுக் கட்டணமாக 0.5 சதத் தொகையை இதுவரை அந்த வங்கி வசூலித்துவந்தது.

இந்நிலையில், தனியார் வங்கிகள்கூட தயங்கும் ஒரு நடவடிக்கையை "பாரத ஸ்டேட் வங்கி' மேற்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏறத்தாழ நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பகுதி வங்கிக் கிளைகள் அந்த வங்கியைச் சார்ந்தவை. தவிர, இந்தியாவில் "வங்கிகளின் வங்கி'யாகவும் "பாரத ஸ்டேட் வங்கி' செயல்படுகிறது. ஆகையால், இந்த நடவடிக்கை எல்லா வங்கிகளுக்கும் பரவினால், எளியோர் யாருமே நகைக் கடனுக்காக வங்கிப் படிக்கட்டுகளில் ஏற முடியாது.

பணக்காரர்களுக்காகவும், மேல்தட்டு வர்க்கத்தினருக்காகவும், தொழிலதிபர்களுக்காகவும் மட்டும்தான் வங்கிச் சேவை என்கிற நிலைமை வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். 70 சதவிகிதத்துக்கும் மேலானோர், மத்தியதர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் நலனை முன்னிறுத்தித்தான் வங்கிச் சேவை அமைய வேண்டும்.

சேவைக்கு வரி! செயல்பாட்டுக்குக் கட்டணம்!! இது என்ன விபரீதம்?

Share this