Breaking News

பன்றிக் காய்ச்சலைவிட வேகமாகப் பரவி வரும் பீதி!

Unknown
0
பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் மூவர் பலி. இந்தியா முழுவதும் இதுவரை 10 பேர் அதற்கு இரையானார்கள். தமிழகத்தில் சிறுவன் ஒருவன் பலியானான். இந்தியா முழுக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960 ஆக உயர்வு. நாட்டின் தலைநகரான டில்லியில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 1462 பேர் பலி.

சென்னை, வேலூரைத் தொடர்ந்து மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை மையங்களை தமிழக அரசு தொடங்கியது. பன்றிக் காய்ச்சல் எதிரொலியால் சென்னைப் பள்ளிகள் மூடல்.

அப்பப்பா… பன்றிக் காய்ச்சலை விட மிகவேகமாகப் பரவி வருவது பயமும் பதட்டமும் தான்.
ஒரு விஷயம் தெரியுமா, பயம் ஏற்பட்டால் தானாகவே மன உளைச்சல் ஏற்படுகிறது. மன உளைச்சல் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. எதிர்ப்புச் சக்தி குறையும்போது பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான எச்1என்1 வைரஸ் மட்டுமல்ல பல நோய்களுக்குக் காரணமான பல்வேறு கிருமிகளுக்கு கொண்டாட்டம்தான். அவை எளிதாக நம் உடலில் நுழைந்துவிடும். அதனால் பதறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
ஸ்வைன் ஃப்ளூ மட்டுமல்லாது பல்வேறு நோய்களை 6 வழிகளில் தடுத்து நிறுத்தலாம்.

குறைந்தபட்சம் 7 மணி நேர நல்ல உறக்கம்(8மணி நேரத்துக்கு அதிகமான தூக்கமும் ஆளை (மெதுவாகக்) கொல்லும்)), தினசரி உடற்பயிற்சி, மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளல், நம் உயரத்திற்கு ஏற்ற எடையை மட்டும் வைத்துக்கொண்டு மீதிளை கரைத்தல், சர்க்கரை பயன்பாட்டை குறைத்தல், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை தவிர்த்தல் இந்த ஆறு வழி முறைகளை நம் வாழ்நாள் முழுக்க கடைப்பிடித்து வந்தாலே போதும் நோய்களுக்கும் நமக்குமான தூரம் பெருகி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமாக, நன்றாகக் கை கழுவுங்கள். மற்றவர்களை அல்ல, உங்கள் கைகளை.
தொடர்ச்சியாக எதையும் செய்வது என்றாலும் நமக்கு கசப்பு என்பதால்தான் நாம் அடிக்கடி கசப்பு மருந்துகளையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கிறது.

நீங்களும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்தாதீர்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஸ்வைன் ஃப்ளூ பற்றி உணர்த்துங்கள் பயமுறுத்தாதீர்கள்.

இது விழித்துக்கொள்ளும் தருணம். பயந்துபோய் குழிப்பறித்துக்கொள்ளும் நேரமல்ல.
ஸ்வைன் ஃப்ளு குறித்து அனைத்து தகவல்களையும் பெற www.swineflu-india.org யை க்ளிக்குங்கள்

Share this