Breaking News

தாமதமாய் சொன்னாலும் "மெய்" பொய்யாகாது.

நிர்வாகி
0
இந்தூர், ஆக. 25: பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா மதச்சார்பற்றவர் என்று ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார்.

முகமது அலி ஜின்னாவை தனது புத்தகத்தில் புகழ்ந்து எழுதியதற்காக பாஜக-விலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பாஜகவின் முக்கிய அங்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் இத்தகவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் லோகமான்ய திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க அவர் பாடுபட்டார் என்றும் சுதர்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஜின்னாவுக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. வரலாற்றை சரியாக படித்தால் அவர் திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாக பாடுபட்டது தெரியும்.

மகாத்மா காந்தி வலியுறுத்தியிருந்தால் பாகிஸ்தான் பிரிவினையைக்கூட ஜின்னா கைவிட்டிருப்பார். ஜின்னா மிகச் சிறந்த மதச்சார்பற்றவர் என்று சுதர்சன் குறிப்பிட்டார்.

துருக்கியில் காலிப் ஆட்சியை, பிரிட்டிஷார் கலைத்ததைக் கண்டித்து அலி சகோதரர்கள் இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.

பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட கிலாஃபத் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமை வலுவடையும் என காந்திஜி கருதினார். ஆனால் இதற்கு ஜின்னா எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால் அவரது வாதத்தை எவரும் ஏற்கவில்லை. இது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. இதனால் அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்ற அவர் 1927-ம் ஆண்டுதான் மீண்டும் இந்தியா திரும்பினார் என்றும் சுதர்சன் குறிப்பிட்டார்.

பாஜக-விலிருந்து ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டது அக்கட்சியின் உள் விவகாரம் என்றார்.பாகிஸ்தான் குறித்து அத்வானி கருத்து தெரிவித்தபோது அதற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனால் அத்வானி உரிய விளக்கத்தை அளித்தார். அதைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் சுதர்சன் கூறினார்.இதனிடையே சுதர்சன் அளித்த பேட்டி குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், இந்தூரில் அளித்த பேட்டியின்போது பிரிவினைவாத வரலாறு குறித்து மட்டுமே சுதர்சன் பேசியதாகக் குறிப்பிட்டார்

Share this