நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!
நிர்வாகி
0
நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!
(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)
மாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலான் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.
தம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும்? அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.
மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது!. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.
நாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. "யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.
சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக "நாவு" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.
மொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். "சொல்லாதே செய்" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.
"தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள். பிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே? என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து "ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.
பிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. புனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்!
Tags: கட்டுரை மெளலவிகீழை ஜஹாங்கீர் அரூஸி