Breaking News

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

நிர்வாகி
0
தண்ணீரை திறந்து விடுகிறார் கோட்டாட்சியர் (பொறுப்பு) சி.மீனாட்சி (வலமிருந்து 2வது).
சிதம்பரம், ஆக. 26: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியிலிருந்து வேளாண் பாசனத்துக்கு புதன்கிழமை 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 45,685 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூலை 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கல்லணையில் ஆகஸ்ட் 1-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. கீழணையிலிருந்து ஆகஸ்ட் 3-ம் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
புதன்கிழமை நிலவரப்படி ஏரியில் 43.45 அடி நீர் உள்ளது (மொத்தக் கொள்ளளவு 47.50 அடி). சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 57 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. ஏரிக்கு வடவாறு மூலமாக 100 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க வீராணம் ஏரியிலிருந்து ராதா மதகு உள்ளிட்ட 28 மதகுகளிலிருந்து புதன்கிழமை வேளாண் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏரிக்கரையில் உள்ள ராதா மதகிலிருந்து புதன்கிழமை காலை சிதம்பரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) சி.மீனாட்சி 200 கனஅடி தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வீரபாண்டியன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், விவசாயிகள் சங்கத் தலைவர் வி.கண்ணன் பிள்ளை, விஜயகுமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விதைப்புக்கும் தாமதம்

வீராணம் ஏரியிலிருந்து எப்போதும் வேளாண் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதியே தண்ணீர் விடப்படுவது வழக்கம். நாங்கள் முன்னதாக விதை விட்டிருப்போம். ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பவதில் ஆர்வம் காட்டினார்களே தவிர வேளாண் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.
தற்போது தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி விதை விடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதியே விவசாய பாசனத்துக்கு ஏரியிலிருந்து நீர் திறந்து விட வேண்டும். மேலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் பொதுப்பணித் துறையினரால் ஆறு, வாய்க்கால்கள் சரிவர தூர்வாரவில்லை என விவசாயி ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

ராயல்டி வழங்கக் கோரிக்கை

புதிய வீராணம் திட்டம் மூலம் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதனால் சென்னை குடிநீர் வாரியம் வீராணம் பாசன மேம்பாடுக்காக ஆண்டுதோறும் ராயல்டி வழங்க வேண்டும். அந்த தொகையைக் கொண்டு ஆண்டு தோறும் வீராணம் ஏரியை தூர்வாருதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு கொள்ளளவை உயர்த்த வேண்டும் என வெட்டுவாய்க்கால் பாசன சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் அனுப்பவதில் ஆர்வம் காட்டும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வீராணம் ஏரியின் கொள்ளளவை உயர்த்துவதிலும், விவசாயிகள் பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்தும் ஆர்வம் காட்டவில்லை என கே.வி.இளங்கீரன் வருத்தம் தெரிவித்தார்.

குறுகிய கால நெல் பயிரிட ஆர்வம்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் பொன்மணி ரக நெல்லை பயிரிட்டு வந்த விவசாயிகள் தற்போது பிபிடி ரக குறுகிய கால (90 நாள்கள்) பயிரை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொன்மணி ரக நெல் மூட்டைக்கு ரூ.550-தான் விற்பனையாகிறது. ஆனால் குறுகிய கால பயிரான பிபிடி (ஆந்திரா பொன்னி) ரக நெல்லை விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனர். பிபிடி ரக நெல் ரூ.1000 விலை போவதால் விவசாயிகள் பிபிடி ரக நெல்லையே பயிரிடுகின்றனர் என கண்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் தெரிவித்தார்.

Tags: லால்பேட்டை வீராணம்

Share this