Breaking News

ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் கசிவு-சிபிஐ

நிர்வாகி
0
டெல்லி: 2005ம் ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் அடங்கிய 'டெம்ப்ளேட்' (template) வெளியில் கசிந்துவிட்டதால் தான் 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகரித்துவிட்டதாக என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு அதிகரித்து வருவது குறித்து சிபிஐ, வருவாய் புலனாய்வுப் பிரிவினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மத்திய தடயவியல் ஆய்வக அதிகாரிகள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தியது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்போது அதில் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் சங்கேத குறியீடு, வடிவமைப்பு ரகசியங்கள் அடங்கிய 'டெம்பிளேட்' கள்ள நோட்டு அச்சிடும் கும்பல்களின் கையில் எப்படியோ போய்ச் சேர்ந்துள்ளது.இதைக் கொண்டு தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்தக் கும்பல்கள் அச்சிட்டு வெளியிட ஆரம்பித்துள்ளன.

கள்ள நோட்டுகள் அச்சடிப்போருக்கு அது எந்த காகிதத்தில் அச்சடிக்கப்படுகிறது, அதற்கு எந்த வகை மை பயன்படுத்தப்படுகிறது, அது எங்கு கிடைக்கும், நோட்டுகளின் மையத்தில் உள்ள சில்வர் பார், வாட்டர் மார்க் வடிவமைபபு போன்ற தகவல்கள் எளிதாகக் கிடைத்து வருகின்றன என்றும் சிபிஐ கூறியுள்ளது.

மேலும் எந்த வகையான மையை, எந்தெந்த அளவில் பயன்படுத்தினால் உண்மையான நோட்டுகளுக்கு நிகராக தன்மையைக் கொண்டு வர முடியும் போன்ற விவரங்களையும் இந்தக் கும்பல்கள் அறிந்து வைத்துள்ளன என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த ரகசியம் வெளியில் கசிந்ததில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கக் கூடும் என்று சந்தேகி்க்கப்படுகிறது.

நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் வரை ரூ. 1,69,000 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

Share this