Breaking News

வெள்ள அபாயத்தில் சிதம்பரம் நகரம்

நிர்வாகி
0
சிதம்பரம் நகரைச் சுற்றிலும் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் ஏறக்குறைய காணாமல் போய்விட்டன. இதனால் வரும் மழைக்காலத்தில் சிதம்பரம் நகரத்தை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு உடனடித் தீர்வை எட்ட வேண்டும் என சிதம்பரம் நகர மக்களின் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக பெருமாள் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு சோழன் டெப்போ அருகில் உள்ள வாய்க்கால் வழியாக வெளியேறுகிறது. ஆனால், இந்த வாய்க்காலின் மேற்கு பகுதி முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. மேலும் பாசிமுத்தான்ஓடை, கான்சாகீப் வாய்க்கால், பாலமான், சிவசக்திநகர் வாய்க்கால், வெள்ளந்தாங்கி அம்மன் ஆலயம் அருகே உள்ள வாய்க்கால் ஆகியவை தூர்ந்து போய் உள்ளன.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் பல்வேறு காட்டாறுகள் மூலமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாறு, கொள்ளிடம் ஆகியவற்றின் மூலமாக கடலில் கலக்கிறது. இந்த இரு ஆறுகளும் சிதம்பரம் நகரின் வடக்கு, தெற்கு ஆகிய இருதிசைகளிலும் உள்ளன.
சிதம்பரம் நகரைச் சுற்றி உள்ள வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளதாலும், ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும் நீர் வடிய வாய்ப்பில்லாமல் நகரைச்சுற்றிலும் ஆண்டு தோறும் வெள்ளம் சூழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. அந்த ஆண்டு வெள்ள அபாயத்திலிருந்து சிதம்பரம் நகரம் தப்பியது.
எனவே, இந்த ஆண்டு மழைக் காலத்துக்கு முன்பு கடலூர் மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் பொது நிதியிலிருந்து அவசர, அவசியம் கருதி நிதி ஒதுக்கீடு செய்து நகரைச் சுற்றியுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர் மு.ராஜலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: சிதம்பரம் வெள்ளம்

Share this