Breaking News

உன்னைத்தான் அழைக்கிறேன்! உனக்குத்தான் அறிவிக்கிறேன்! கே.எம்.கே

J.நூருல்அமீன்
0
தமிழக முஸ்லிம் லீகின் சமீப காலத் திட்டம் மாநிலம் முழுவதிலும் குறைந்தபட்சம் பத்து லட்சம் உறுப்பி னர்களைச் சேர்ப்பதாகும் என்பதை எல்லோரும் அறிவர்.
ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம் லீகும் புதிய உறுப்பினர் சேர்ப்புப் பணியில் ரமளான் மாதத்திலும் தீவிரங்காட்டுவதை அறிய மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டச் செயலாளர் ஜனாப் அப்துஸ் ஸ{க்கூர் தொலை பேசியில் மகிழ்ச்சியோடு ஒன்றைக் கூறினார். தன்னந் தனியாகத் தானே சென்று இதுவரை இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த் துள்ளார் என்று தெரிவித்தார். கடலூர் மாவட்ட பிற நிர்வாகிகளும் இந்தப் பெரும் பணியில் முனைப்புக் காட்டுவதாகவும் கூறி மகிழ்ந்தார். இதுபோன்ற நற் செய்தி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தொடர்ந்து தலைமை நிலையத்துக்கு வரவேண்டும். அவ்வப்போது மாவட்ட நிர்வாகிகள் நற்செய்திகளைத் தர வேண்டும். ஒரு காலத்தில் குறிப்பிட்டுச் சொல்வதானால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பிரைமரி முஸ்லிம் லீக் கூட இல்லாதிருந்தது. தம்பி ஷேக் தாவ+து மாவட்ட அமைப்பாளர் பொறுப்பேற்ற பின்னர் மாவட்டச் செயலாளராகி இன்றைக்கு காஞ்சி மாவட்டத்தில் 93-வது கிளையை உருவாக்கியுள்ளார். இன்னும் ஒரு சில ஊர்களில் மட்டுமே முஸ்லிம் லீக் கிளை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்னும் நிலையை உருவாக்கியிருக்கிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு உற்ற துணையாகவும், உந்து சக்தியாகவும் திகழும் வகையில் மண்டல அமைப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின் றார்கள்.
சென்னை மண்டலத்தில் ஜனாப் அப்ஸல், கோவை மண்டலத்தில் ஜனாப் சையது முஸ்தபா, நெல்லை மண்டலத்தில் ஜனாப் மில்லத் இஸ்மாயில், தஞ்சை மண்டலத்தில் அதிரை நசுருத்தீன் ஆகியோரின் தீவிரப் பணிகள் குறித்து தினமும் உற்சாகமூட்டும் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.
தமிழகத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு அதற்குரிய வரலாற்றுரீதியிலான அரசியல் அங்கீகாரம் பெற வேண்டுமெனில், இந்த இயக்கத்துக்கு அந்த அந்தஸ்தைத் தர வேண்டுமெனில், உறுப்பினர் சேர்ப்புப் பணியில் எல்லோரும் தீவிரமாக தமிழகத்தில் சுதநதிரத்துக்குப் பிறகு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் அரங்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இயக்கமாக வளர்ச்சி பெற்று 1967 பொதுத் தேர்தலிலும், அதற்குப் பிறகு நடந்த 1971, 1977, 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. 1984க்குப் பிறகு முஸ்லிம் லீகின் தேர்தல் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு, கூட்ட ணிக்குத் தலைமை வகிக்கும் அரசியல் கட்சியின் சின்னத்தில் முஸ்லிம் லீக் போட்டியிடத் தொடங்கியது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சின்னங்களில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு வெற்றியும், தோல்வியும் பெற்று வந்ததால் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு உரிய அரசியல் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தில் இல்லாமல் ஆகி விட்டது. இதே நிலைமையை இனியும் தொடரக் கூடாது என்பதில் பெரும்பாலான முஸ்லிம் லீகர்கள் இன்றைக்கு வன்மையான எண்ணங் கொண்டு வருகிறார்கள். இத்தகைய சிந்தனையாளர்கள் சமுதாயத்திலும் பரவலாகி உருவாகி வருகிறார்கள். சமுதாய மக்களு டைய எண்ணங்களை நிறைவேற்றவும், முஸ்லிம் லீகின் பழைய அரசியல் பாரம்பரியத்தைத் தேர்தல் களத்தில் தொடரவும் வேண்டுமெனில் அதற்கு அடிப்படை வேலை, உறுப்பினர்களைப் பெருக்குவது தான்.
முஸ்லிம் லீகின் வரலாறு படித்தவர்களுக்கு தெரியும். 1906-ல் உருவான அகில இந்திய முஸ்லிம் லீக் 1935 வரையிலும் ஒரு சங்கம் போலவே செயல்பட்டு வந்தது. ஆண்டுதோறும் முஸ்லிம் லீக் பெயரில் கூடி, ஆங்கிலேய அரசுக்குத் தீர்மானங்களை அனுப்பி வந்த நிலையே நீடித்தது. இந்தக் காலக் கட்டத்தில் 1919-1924 வரை இந்தியாவில் எழுச்சியோடு நடைபெற்ற கிலாபத் இயக்கம், மகாத்மா காந்தியையும், அலி சகோதரர் களையும் உலகிற்கு அறிமுகம் செய்தது. இந்தக் கிலாபத் இயக்கம்கூட முஸ்லிம்களின் எழுச்சி இயக்கமாக இருந்ததே தவிர, முஸ்லிம் லீகின் எழுச்சி இயக்கமாக இருக்கவில்லை. ஏனெனில் இந்தக் காலக் கட்டத்திலும் முஸ்லிம் லீகிற்கு பொது மக்களை உறுப்பினர் ஆக்கும் நிலைமை உருவாக வில்லை.
முஸ்லிம் லீகில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி துவங்கியபோது, தமிழகத்தில் எப்பேர்க் கொத்த அரசியல் எழுச்சி ஏற்பட்டது என்பதை பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாஹிப் எழுதியுள்ள வரலாற்றைப் படியுங்கள்.
ஹஅகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியை நடத்தும் பொறுப்பு 1935-ம் ஆண்டுவாக்கில் காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னா சாஹிபி டம் ஒப்புவிக்கப்பட்டது. 1937 முதல் 1947 வரை முஸ்லிம் லீகின் தலைமைப் பொறுப்பு அவரிடமே இருந்து வந்தது. இக் காலக் கட்டத் தில் முஸ்லிம் லீகின் வளர்ச்சியும் அபரிமிதமாக அமைந்து விட்டது. அதுவரை பம்பாயிலும் வட மாகாணங்கள் சிலவற்றிலும்தான் முஸ்லிம் லீக் பெயரளவில் செயல்பட்டு கொண்டிருந் தது. ஜின்னா சாஹிப் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னரே, நாடு முழுவதிலும் இக் கட்சி வேரூன்ற ஆரம்பித்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகள் அடங்கிய மதராஸ் ராஜதானியில் முதன்முதலாக 1936-ம் ஆண்டில்தான் முஸ்லிம் லீக் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ராஜதானியில் முஸ்லிம் லீக் இயக்கத்தை ஆரம்பிக்கும் பணியை மதராஸ் ஹாஜி ஜமால் முஹம்மது சாஹிபிடம் ஜின்னா சாஹிப் ஒப்புவித்தார். மாகாண முஸ்லிம் லீக் கன்வீனராக 1936-ம் ஆண்டில் ஜமால் முஹம்மது சாஹிப் நியமனம் செய்யப் பட்டார்.
அதுமுதற்கொண்டு தமிழ்நாட்டிலும், மாகா ணத்தின் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடை பெற்றன. பல ஜில்லாக்களுக்கும் முஸ்லிம் லீக் கன்வீனர்கள் நியமிக்கப்பட்டார்கள். முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கும் பணி துரிதமாக நடைபெற்றது. 1937-க்குள்ளாக மதராஸ் மாகாணத்தில் ஜில்லாக்கள் முறையாக அமைக்கப்பட்டு விட்டன. 1939-ம் ஆண்டிற் குள்ளாக மதராஸ் மாகாண முஸ்லிம் லீக், ஸ்தாபன ரீதியாக செயல்படத் துவங்கி விட்டது. ஹாஜி முஹம்மது சாஹிபே முதலாவது மாகாண முஸ்லிம் லீக் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் மாகாணம் முழுவதும் 183 பிரைமரி லீகுகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றி லுள்ள மொத்த உறுப்பினர்களின் எண் ணிக்கை 43,290 ஆகும். 1940-ம் ஆண்டில் இம் மாகாணத்தில் பிரைமரி லீகின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்து விட்டது. அச் சமயம் மொத்த உறுப்பினர்களின் எண் ணிக்கை 88,333 ஆகும். 1941-ம் ஆண்டில் பிரைமரி களின் எண்ணிக்கை 302 ஆக குறைந்து விட்ட போதிலும் மொத்த உறுப்பினர்களின் எண் ணிக்கை 1,12,078 ஆக உயர்ந்து நின்றது.
1935-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்தின் பிரகாரம் 1937-ம் ஆண்டில் மாகாணப் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. மதராஸ் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கென 28 சட்டமன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கு தனித் தொகுதி மூலமே சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முஸ்லிம் லீக் கட்சி முதன்முதலாக மதராஸ் சட்டசபைத் தேர்தலில் கலந்து போட்டியிட்டது. முஸ்லிம் லீக் கட்சி சார்பாக 11 பேர் 1937-ம் ஆண்டில் மதராஸ் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். (தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு - பக்.260-261.) பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயிப் சாஹி அவர்களின் எழுத்தோவியத்தில் இடம் பெற்றுள்ள சித்திர வரிகளை இங்கே தந்திருக்கிறேன்.
உறுப்பினர் சேர்ப்பு என்பதன் அருத்தம், முஸ்லிம் லீகில் பத்து லட்சம் இதயங்களை ஒன்று சேர்க்கிறோம் என்பதாகும்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் புதிய எழுச்சி வரலாறு துவங்கி விட்டது. ஊர்தோறும் உறுப்பினர் சேர்ப்புப் பணியைத் தீவிரப்படுத்துங்கள்.
அன்புள்ள தம்பீ! இன்றைக்கு நான் சொல்வதைக் கேள். நாளைக்கு நீ சொல்வதை இந்த நாடு கேட்கும்! ஆமாம்! உன்னைத்தான் அழைக்கிறேன்! உனக்குத்தான் அறிவிக்கிறேன்!
இன்றைக்கு இதை நீ கேள்!
நாளைக்கு இந்த நாடு உன்னைக் கேட்கும்

Tags: கட்டுரை கே.எம்.கே முஸ்லிம் லீக்

Share this