Breaking News

ராசல்கைமாவில் நடைபெற்ற மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு

நிர்வாகி
0
முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ராசல்கைமா மண்டலம் சார்பாக 28.08.2009 அன்று வெள்ளிக் கிழமை இரவுத் தொழுகைக்கு பின்பு திருக்குர்ஆன் மாநாடு மு.மு.க அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி இஸ்மாயில்ஷா மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதி மிக அருமையான விளக்கவுரையாற்றினார். மண்டல பொருளாளர் கடியச்சை ஹாஜா முகையதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். மண்டலத் தலைவர் ஜாஃபர் சாதிக் முன்னிலை வகித்தார்.
ஷார்ஜா மண்டல முமுக முன்னாள் நிர்வாகியும், இஸ்லாமிய அழைப்பாளருமான திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் ரமலானில் நாம் எடுக்கும் பயிற்சி நமக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும், குர்ஆன் ஹதிதை பின்பற்றி அனைவரும் நடக்க வேண்டுமெனவும், திருமறைக் குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டுமெனவும், அழைப்புப் பணி அனைவரின் மீதும் உள்ள கடமை என்றும் வலியுறுத்தி சிறந்ததொரு உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து பேசிய முமுக-வின் அமீரக அலுவலகச் செயலாளர் சகோதரர் ஹசன் எண்ணத்தின் அடிப்படையில் அல்லாஹ் கூலி வழங்குகின்றான், எண்ணத்தில் இருக்கும் தூய்மைக்கு தகுந்த சிறந்த பரிசை அல்லாஹ் வழங்குவான் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
இறுதியாக சிறப்புரையாற்றிய தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை ஜாஹிர் அவர்கள் மறுமை,மண்ணறை குறித்து பேசுகையில், நபி (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக அறிவித்த பின்பும் அவர் அல்லாஹ்வை அதிகமதிகம் நின்று வணங்கி அல்லாஹ{க்கு நன்றி செலுத்தியது போன்ற பல விஷயங்களை எடுத்துக் கூறி உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு சிறந்த உரையாற்றினார்கள். மாநாட்டில் திரளாக கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும் கண்ணீர் மல்க அவரது உரையை செவிமடுத்தார்கள்.

மண்டலச் செயலாளர் பொதக்குடி முஹம்மது ஷாஜஹான் அவர்கள் நன்றிவுரை கூறி துவா ஓதி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இது போன்ற மாநாடுகள், இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இந்த பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கலந்துக் கொண்டவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். மக்களை ஒருங்கிணைக்கும் பணியை ராக் சிட்டி பகுதியில் பாம்பன் அப்துல்லாஹ் அவர்களும்,ஜூல்ஃபார் கேம்ப் பகுதியில் பஷீர் அவர்களும்,எம்.பி.எம்.கேம்ப் பகுதியில் பீர் முஹம்மது அவர்களும்,ஸ்டார் சிமெண்ட் கேம்ப் பகுதியில் மன்சூர் அவர்களும் திறம்பட செய்திருந்தார்கள்.
திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்தப் புனிதமிகு மாதத்தில் திருக்குர்ஆன் மாநாடு மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதென்றால் அது மிகையில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Tags: திருக்குர்ஆன் மாநாடு

Share this