Breaking News

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் மங்கி வருகிறது-ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சத்தியநாராயணன்

நிர்வாகி
0
இப்படித்தான் வாழவேண்டும் என்பது இறைச்சட்டம்; எப்படியும் வாழலாம் என்பது மனிதர்களின் சட்டம். மனிதனை படைத்த இறைவன் மனிதனின் பலம்-பலவீனங்களை அறிந்த இறைவன் மட்டுமே மனிதனின் வாழ்க்கைக்கு ஏற்ற சட்டத்தை வழங்கமுடியும். அந்த வகையில் ஆண்கள் தமக்கு தேவையென்றால், அதற்குரிய சக்தி பெற்றிருந்தால் நான்கு திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டத்தை அவ்வப்போது முற்போக்காளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் சிலர் விமர்சிப்பதுண்டு. இஸ்லாம் எதற்காக நான்கு திருமணம்வரை ஆண்களுக்கு அனுமதித்தது எனில்,ஆண்களை பொறுத்தவரை அவன் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் தன்னை யோக்கியனாக நிலைநிறுத்தமுடியும் பெண் விஷயத்தை தவிர. தன் மனைவியை தவிர மற்ற பெண்களை ஏறெடுத்து அல்ல நினைத்துக்கூட பார்க்காத ஆண்களை அதிசயப்பிறவியாகத்தான் காணவேண்டியுள்ளது. என்னதான் அழகான மனைவி தனக்காக இருந்தாலும் அந்நியப்பெண்ணிற்கு அதுவும் அடுத்தவன் பொண்டாட்டிக்கு வலைவீசுபவர்களும் ஆண்களில் உண்டு. தன் மனைவி அருகில் இருக்கும் பொது ஏகபத்தினி விரதனாக இருப்பவன் மனைவி பிரசவத்திற்கோ, அலது வேறு வேலை நிமித்தமாக வெளியூர் சென்றாலோ அல்லது இவனுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு அமைந்தாலோ அங்கே இவன் வேறு கிளையில் இளைப்பாறுவதையும் கேள்விப்படுகிறோம். அட! விபச்சாரம் அளவுக்கு செல்லாவிட்டாலும் ஒரு இச்சையோடு அந்நிய பெண்ணின் மீது ஒரு பார்வை வீசுபவனும், குறைந்த பட்சம் மனதளவிலாவது ஆசை கொள்பவனும் ஆண்களில் இல்லாமல் இல்லை. ஆக இதெல்லாம் உணர்த்துவதென்ன? அங்கே ஒருவனுக்கு ஒருத்தி என்பது போதுமானதாக இல்லை என்பதுதானே! மேற்கண்ட பலவீனங்களின் காரணத்தால் விபச்சாரம் போன்ற தவறை செய்து, அதனால் தானும் எயிட்ஸை பெற்று ஒன்றுமறியா அப்பாவி மனைவி-மக்களுக்கும் அந்த நோயை வழங்கி வாழ்நாளை எண்ணிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, உனக்கு சக்தியிருக்கிறதா? இன்னொரு பெண்ணை முறையாக மணந்து கவுரவமாக வாழு என்று சொல்லும் இந்த இறை சட்டத்தை மெய்ப்பிக்கும் வகையில்,சென்னையில் சென்னை நகர போலீசாருக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நேற்று முதல் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாநில எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சத்தியநாராயணன் கூறியதாக பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியில்,தமிழக போலீசில் 107 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது. அவர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதை டி.ஜி.பி.க்கு கூட சொல்லமாட்டோம். எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக உண்மையை சொல்லுங்கள். அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதை கட்டுப்படுத்த ஏ.ஆர்.டி. என்ற கூட்டு சிகிச்சை முறை உள்ளது. அதன்மூலம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தி நீண்டநாள் உயிர் வாழலாம்.திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள். அதை யாரும் கேட்கவில்லை. திருமணத்திற்கு பின்பு மனைவியோடு மட்டும் உடலுறவு வையுங்கள் என்று சொன்னார்கள். அதுவும் யார் காதிலும் விழவில்லை. இதேபோல ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தையும் மறந்து வருகிறார்கள். இதனால் நாங்கள் இப்போது பிரசாரம் செய்வது என்னவென்றால் எப்படியும் வாழுங்கள், ஜாக்கிரதையாக வாழுங்கள். தவறான உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக காண்டம் அணிந்து கொள்ளுங்கள் என்று தான் பிரசாரம் செய்கிறோம்.மற்ற துறைகளைவிட போலீஸ் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தவறு செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. மனைவிமார்களை பிரிந்து பாதுகாப்பு பணிக்காக போலீசார் நீண்டநாள் வெளியூர்களில் தங்க நேரிடும். அதுவும் ஆயுதப்படை போலீசாருக்கு இதுபோன்ற சந்தர்ப்பம் அதிகமாக வரும். அப்போது தவறு செய்ய நேரிடும். எனவே ஜாக்கிரதையாக உங்கள் உறவை வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் .ஒய்வு பெற்ற சூப்பிரண்டு அவர்களின் கூற்றுப்படி, விபச்சாரத்தை தடுக்கும் காவலர்களுக்கே எயிட்ஸ் எனில் சாமான்யர்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதோடு காவலர்களை எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள் என்றும்,தவறான உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக 'காண்டம்' அணியுங்கள் என்றும் அற்புதமான[?] யோசனையையும் வழங்கியுள்ளார். அதோடு காவலர்கள் இத்தகைய தவறை செய்வதற்கு காரணமாக அவர்கள் மனையை பிரிந்திருக்க வேண்டிய நிலை உள்ளதுதான் என்றும் கூறியுள்ளார். ஒரே திருமணத்தை கொண்டு திருப்தியாக வாழும் முஸ்லீம் ஆண்களும்-வளைகுடாவிலும் வேறுபல நாடுகளிலும் பல ஆண்டுகள் மனைவியை பிரிந்து வாழும் முஸ்லிம்களில் பலரும் அன்னியப்பென்னை நாடுவதில்லை. தவறான உறவுக்கு செல்வதில்லை. காரணம் மனித சட்டத்திற்கு பயந்து அல்ல. இறைவனின் சட்டத்திற்கு பயந்து!எனவே காவலர்கள் மட்டுமன்றி எவராக இருந்தாலும், அவசியமுள்ளவர்களுக்கு பலதார மனம் செய்வதற்கு அனுமதியளிப்பதே எயிட்ஸை ஒழிக்கும். அதோடு முறையற்ற உறவுகளையும்- இன்ஷியலில்லா குழந்தை பேற்றையும் தடுக்கும். புரிந்துகொண்டால் சரி!

Tags: கலாசாரம்

Share this