Breaking News

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்துடெல்லியில் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. உண்ணாவிரதம்

நிர்வாகி
0


புதுடெல்லி, செப்.30-

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து டெல்லியில் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கி வருவதைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, இளைஞர்அணி செயலாளர் சுதீஷ் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கண்துடைப்பு

உண்ணாவிரதத்தின்போது, விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் இதுவரை மத்திய-மாநில அரசுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்றுவரை சுமார் 200 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன? தமிழக மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கைக்கு இந்திய எம்.பி.க்கள் குழு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது ஒரு கண்துடைப்பு நாடகம். இவற்றை எல்லாம் விளக்குவதற்காக தான் நாங்கள் டெல்லியில் போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள்

உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு இருந்த பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத்தர வேண்டும். மீனவர்களுக்கு எதிரான கடலோர மேலாண்மை திட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.

மீன் பிடிப்பதற்கு பைபர் படகுகள் மீதான தடையை திரும்பப் பெற வேண்டும். மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்.

அரசு வேலை

கடலில் மீனவர்கள் இறந்து போனால் வழங்கப்படும் ரூ.1 லட்சம் இழப்பீடு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையோ அல்லது மீண்டும் தொழில் செய்ய இலவச முதலீடோ வழங்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். சிங்கள கடற்படையால் மீனவர்கள் வேலை இழந்து தவிக்கும் நாட்களில் அந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அரசு நிதிஉதவி வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கு இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடல் அட்டையை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: உ‌ண்ணா‌விரத‌ம் தே.மு.தி.க.

Share this