Breaking News

உலமா நலவாரியம் அமைத்த முதல்வர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத்தினர் திரண்டுவர பேராசிரியர் வேண்டுகோள்!

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0

வரும் அக்டோபர் 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவில், உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பும், முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கைக் குரிய உலமா பெருமக்களும், பள்ளிவாசல், மத்ரஸா, தர்கா பணியாளர்களும், மஹல்லா ஜமாஅத்தினரும் திரண்டுவர பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அழைப்பில் தெரிவித்துள்ளதாவது:

வரும் அக்டோபர் 4-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துல் சமது சாஹிபின் 84-வது பிறந்த தின விழா-சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவாகவும், உலமாக்கள்-பணியாளர்கள் நலவாரியம் அமைத்துத்தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது.

இந்த இனிய விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி விழா பேருரை நிகழ்த்திட உள்ளார்.

தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கமும்-மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) காலந்தொட்டு நம் உயரிய கலாச்சாரத் தன்மையை நிலை நாட்டுவதில் பெரும் பங்காற்றி வருவது கண்கூடாகும்.

அதன் அடிப்படையில் ஜனநாயக அரசியலில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பெறுவதில் நாம் கையாண்ட அணுகுமுறைகள் மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளன.

மேலும், சிறுபான்மையினர் நல ஆணையம், சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழக வக்ஃபு வாரியம், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவித்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நாம் எடுத்துரைத்த கோரிக்கைகளை தமிழக அரசு செவிமடுத்து நம்பிக்கை தரும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

மேலும் மணிவிழா மாநில மாநாட்டில் நாம் வைத்த கோரிக்கைகளை ஏற்று முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ததும், உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்துத் தந்ததும் செயற்கூறிய செயல்களாகும்.

மேலும் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்திட மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை அழைத்து மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டினை நாம் நடத்தினோம். அதன் பலனாக அரசியல் கலப்படமற்ற-முழுக்க முழுக்க உலமாக்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட-அதிலும் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்துப் பெருமைபடுத்தியுள்ளது சிறப்புக்குரியதாகும்.

மேலும் சென்ற வாரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உலமாக்கள்-பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களை முறையாக சேர்க்கும் பணியை துணை முதல்வர் அவர்கள் விரைவு படுத்திட நடவடிக்கை எடுத்துள்ளது நினைவில் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் நன்றி சொல்லும் முகமாகவும், மேலும் நம் உரிமைகளைப் பெற வேண்டியும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவுள்ள விழா அமைந்திட வேண்டும்.

இதற்காக இம்மாநாட்டில் சங்கைமிகு உலமாக்கள், பள்ளிவாசல் இமாம்கள், மதரஸா பேராசிரியர்கள், பள்ளிவாசல் தர்கா பணியாளர்கள், மஹல்லா ஜமாஅத்தினர் பெருமளவில் பங்கு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கண்ணியத்திற்குரிய ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகளும், பள்ளிவாசல்-மதரஸா நிர்வாகிகளும், ஜமாஅத் தலைவர்களும், சங்கைமிகு உலமாக்களும் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்து முழு ஒத்துழைப்பை தருவதோடு வரும் 2-ம் தேதி ஜும்ஆவின் போது இது பற்றிய அறிவிப்பையும் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

Tags: உலமாக்கள் நல வாரியம் நன்றி அறிவிப்பு பணியாளர் முஸ்லிம் லீக்

Share this