Breaking News

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

நிர்வாகி
0
அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“பருவ மழை பொத்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச் சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 676. அங்கு கர்ப்பிணிகளுக்குப் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாததால், ஒவ்வொரு நாலு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்தே பிறக்கிறது. தப்பிப் பிழைக்கும் குழந்தைகளில் 14 சதவீதம், தங்களது ஆறு வயதிற்குள் மடிந்து போகின்றன. ஊட்டச் சத்தின்மையால் வாடும் குழந்தைகளின் சதவீதம் 45-இல் இருந்து 60-ஆக இப்போது உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தில் கிராமங்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கொழிந்து, பசியின் கொடுமையால் அண்மையில் இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அழைக்கும் வழக்கம் உருவாகி உள்ளது. அவற்றை “ஆறு பிள்ளைகளின் கிராமம்” என்றும் “பத்து பிள்ளைகளின் கிராமம்” என்றும் அழைப்பதைக் கேட்கவே கொடுமையாக உள்ளது. அந்தக் கிராமங்களில் உள்ள குழந்தைகள், உப்பிய வயிறோடும் வதங்கிய கை-கால்களோடும் பிதுங்கிய விழிகளோடும் அவை மனிதக் குழந்தைகள்தானா என்று சந்தேகம் எழும் அளவு பட்டினியால் ஒடுங்கிப் போக் காணப்படுகின்றன.
இவ்வாறு குழந்தைகள் பட்டினியால் சாவது குறித்து அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான கணேஷ் சிங், “எதற்கெடுத்தாலும் அரசாங்கம்தான் வர வேண்டுமென இந்த மக்கள் ஏன் எதிர்பார்க்கிறார்கள்?”, “தன் கையே தனக்குதவி என இருப்பவர்களுக்குத்தான் அரசு உதவும்” என திமிரோடு கூறுகிறான்.
கணேஷ் சிங்கின் தொகுதியைச் சேர்ந்த மக்கள், எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்திருப்பவர்களும் அல்லர். கிராமங்கள் மீது எவ்வித அக்கறையுமில்லாத அரசு, விவசாயம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்ட பிறகு, சொத்துக்கே வழியில்லாத மக்கள் தங்களது நிலங்களை முதலில் அடமானம் வைத்தார்கள். வேறு வேலையும் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் மொத்த கிராமமுமே கடனில் மூழ்கி, பசிப் பிணியால் குழந்தைகள் செத்து மடியும் சூழல். அப்போதுதான் வேறுவழியின்றி அரசின் உதவியை அம்மக்கள் நாடினர். மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுவோரோ அம்மக்களைப் பிச்சைக்காரர்களைப் போலச் சித்தரிக்கின்றனர்.
“உணவுக்கான உரிமை” என்ற பிரச்சார குழுவைச் சேர்ந்த சச்சின் ஜெயின், “இனம், மொழி, நிற பேதமின்றி அனைத்து தேசங்களிலும், குழந்தைகளுக்கு உணவளிப்பதைத்தான் தமது முதல் கடமையாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர். இங்கே குழந்தைகள் பஞ்சத்தில் மடிகிறார்கள் எனில், அதுதான் பஞ்சத்தின் உச்சம். இங்கு ஒட்டுமொத்த சமூகமே உணவின்றி வாடுகிறது என்று பொருள்” என்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் உள்ளன. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டோம், நமது கிடங்குகளில் உள்ள தானிய மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் நிலவுக்கே கூட போய் வரலாம் எனப் பொருளாதார மேதைகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, திசைகள் எங்கும் பட்டினிக் கொடுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நெல்லின் பிறப்பிடமான ஒரிசாதான் இந்தியாவிலேயே பட்டினிக் கொடுமையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் ஒரிசாவின் காலகந்தி ஆகும் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 140 பேர் செத்துப் போகிறார்கள்). பட்டினிக் கொடுமையின் இறுதி நிகழ்வான வயிற்றுப் போக்கால் இங்கு மக்கள் மடிந்து போவது வழமையாக உள்ளது. “இந்த கிராமத்தில் ஒருவன் நோயில் படுத்தால் அவன் செத்து போக வேண்டியதுதான்” என்கிறார், தனது மனைவியையும், குழந்தையையும் அடுத்தடுத்து பறிகொடுத்த மதன் நாயக் என்பவர். இவ்வாறு பட்டினியால் மக்கள் சாகும் காலகந்தி-போலன்கிர்-கோராபுட் பகுதியில் இருந்துதான் ஏழு கோடீஸ்வர வேட்பாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர் என்பது முரண்நகை.
காலகந்திக்கு அருகிலே உள்ள காசிப்பூர் பகுதியில் விவசாயம் பொத்துப் போனதால், உணவுக்கு வழியின்றி மக்கள் அல்லாடுகின்றனர். ஒரு காலத்தில் தமக்கென சொந்தமாக நிலம் வைத்திருந்த பழங்குடியினரும், சிறு விவசாயிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பெரு விவசாயிகளிடம் அற்ப விலைக்குத் தமது நிலங்களை விற்று விட்டு விவசாயக் கூலிகளாக மாறிப்போயுள்ளனர். விவசாயம் பொத்துப் போகும் போது உணவுக்கு வழியின்றி மாங்கொட்டைகளை அரைத்து உண்கின்றனர். பூஞ்சை படர்ந்து நஞ்சாகிப் போன மாங்கொட்டைகளை உட்கொண்டதால் 2001-இல் இந்தப் பகுதியில் 54 பேர் வாந்தி-பேதிக்கு பலியானார்கள்.
கடந்த சில வருடங்களில், இதுவரை 540 பேர் வரை பட்டினியால் மடிந்து போனது குறித்து ஒரிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிடம் கேட்ட பொழுது “இங்கு பட்டினிச்சாவே இல்லை” என்று ஒரே வரியில் கூறி மழுப்பிவிட்டார். ஆனால் ஒரிசாவின் பழங்குடியினரும், விவசாயிகளும் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களுக்குப் படையெடுக்கும் காட்சியோ, அவர் கூறுவது முற்றிலும் பொ என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் அந்நகரங்களில் கூலி வேலை பார்த்து சம்பாதிப்பதில் 70 சதவீதத்தை அந்நகரங்களில் செலவழித்தது போக, மிஞ்சும் அற்பத் தொகைதான் ஒரிசாவிலுள்ள அவர்களது குடும்பத்திற்கு உணவுக்குச் செலவிடப்படுகிறது.
நிலச் சீர்திருத்தத்தை முறையாகச் செய்த ஒரே மாநிலம் என சி.பி.எம். கட்சியினர் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் மேற்கு வங்கத்தின், மேற்கு மித்னாபூரில் உள்ள அம்லாசோல் கிராமத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. மேற்கு வங்க போலி கம்யூனிஸ்டு அரசு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கதையளந்தாலும், இன்றும் அம்லாசோல் அதே நிலைமையில்தான் உள்ளது. பட்டினிச் சாவுகளை வெளிக் கொணர்ந்த அம்லாசோல்-ஐச் சேர்ந்த சி.பி.எம். கட்சி உறுப்பினரான கைலாஷ் முண்டா என்பவர், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார் என்ற ஒரேயொரு மாற்றம் தவிர்த்து, எதுவும் மாறிவிடவில்லை. அதேபோல, லால்கரை ஒட்டிய பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையும், குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாமல் தவிப்பதும் நிரந்தரமாக நிலவுகிறது.
இம்மூன்று மாநிலங்களில் மட்டுமல்லாது இன்னும் பிற மாநிலங்களிலும் விவசாயக் கூலிகளும் அவர்களது குழந்தைகளும் பட்டினியால் மரணமடைந்து வருகின்றனர். விஷம் போல ஏறும் விலைவாசி அவர்களது மரணத்தைத் துரிதப்படுத்திவருகிறது. இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றிவருவதாக ஆளும் வர்க்கம் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் “மக்களின் வாழ்கைத் தரத்திலும், சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்திலும் இந்தியா பஞ்சத்தில் அடிபட்ட ஆப்பிரிக்காவின் சஹாராப் பாலைவனப் பிரதேசங்களைப் போன்று நலிவுற்று உள்ளது” என நோபல் பரிசு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அமர்த்யா சென் கூறியுள்ளார். இதுதான் வல்லரசுக் கனவுகளோடு நோஞ்சான் தலைமுறையை அடைகாக்கும் இந்தியாவின் நிலைமை. வயிற்றை நிரப்ப உணவின்றிப் பச்சிளங்குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்போது நாட்டை வல்லரசாக்குவதையும், சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதையும் பற்றி மேதாவிகள் அளந்து கொண்டிருக்கின்றனர். கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

Share this