Breaking News

குணங்குடி அனீபா மீதான வழக்கில் உடனடியாக தீர்ப்பை வெளியிடக் கோரி த.மு.மு.க உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி!

நிர்வாகி
0
குணங்குடி அனீபா தொடர்பான வழக்கில் தொடர்ந்து தாமதப்படுத்தப்படும் தீர்ப்பை உடனடியாக வழங்கக் கோரியும், நீதித்துறையின் மெத்தனத்தை கண்டித்தும் உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி ஒன்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதனன்று (மே 5, 2010) நடத்தியது. பேரணியின் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான ஒரு குழு கோரிக்கை மனுவை அளித்தது.




பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் மாநிலப் பொருளாளரும், த.மு.மு.கவின் நிறுவனர்களில், ஒருவருமான குணங்குடி அனீபா அவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 15 1998 அன்று அனுமந்தக்குடி எனும் ஊரில் தனது மகளின் திருமணத்தன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


சிறையில் அடைக்கப்பட்ட குணங்குடி அனீபா மீது 1997, டிசம்பர் 6, அன்று தமிழகம் மற்றும் கேரளாவில் நடைபெற்ற மூன்று இரயில் குண்டு வெடிப்புகளின் சதி ஆலோசனையில் பங்கு பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின் இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2001 ஆம் வருடம் பூந்தமல்லி குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இரயில் குண்டு வெடிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. குணங்குடி அனீபாவுடன், இவ்வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு 1998 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவ்வழக்கில் தங்களை பிணையில் விடுதலை செய்யக்கோரி குணங்குடி அனிபா தரப்பில் சிறப்பு நீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிணை மறுக்கப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹீன் வெல்பேர் அசோஷியேசன் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், ''விசாரணைக் கைதிகளை ஏழு வருடங்களுக்கு மேலாக பிணை அளிக்காமல் தாமதிப்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21க்கு எதிரானது'' என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஏராளமான வழக்குகளில் விசாரணைக் கைதிகளை நீண்டகாலம் பிணை அளிக்காமல் இருப்பதைக் கண்டித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இறுதியாக இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து அரசுத் தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பிலுமான வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிவடைந்து விட்டன. இதையடுத்து கடந்த 31.03.2010 அன்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப் போவதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். ஆனால் அன்றைய தேதியில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் 7.4.2010 அன்று இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது, பின்னர் 9.4.2010, 23.4.2010 என்று தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட இவ்வழக்கு மீண்டும் 30.4.2010 அன்று ஒத்திவைக்கப்பட்டது.

30.4.2010 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று நினைத்த நேரத்தில், ''இவ்வழக்கில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்'' என்று கூறி வரும் 10.5.2010 அன்று இவ்வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை, வழக்கறிஞர்களது வாதங்கள் அனைத்தும் முடிவுற்று இரு மாதங்கள் கழிந்த பின்பும் இவ்வழக்கில் தீர்ப்பை வழங்குவதைத் தொடர்ந்து தாமதப்படுத்துவது மிகவும் மோசமான பாதிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கில் கடந்த 12 வருடங்களாக பிணையின்றி குணங்குடி அனிபா உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் இருந்து வழக்காடி வருவதை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. குறிப்பாக இவ்வழக்கில் குணங்குடி அனீபாவுக்கு எதிரான அரசுத் தரப்பு சாட்சிகள் மொத்தமே இரண்டு நபர்கள் தான். அவர்களும் பிறழ்சாட்சிகளாகி சில வருடங்களாகியும் இவ்வழக்கில் குணங்குடி, அனீபாவுக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வருகிறது. குணங்குடி அனிபா ரயில் வெடித்த குண்டுகளைத் தயாரித்தார் என்றோ அல்லது குண்டு வைத்தவர்களுக்கு உதவியாக செயல்பட்டார் என்றோ குற்றஞ்சாட்டப்படவில்லை. மாறாக குண்டு வெடிப்பு தொடர்பான சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது மட்டுமே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். இதற்கு காவல்துறை தரப்பில் சாட்சிகளாக நிறுத்தப்பட்ட இருவரும் பிறழ் சாட்சியங்கள் அளித்த பிறகும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சதி ஆலோசனையில் ஈடுபட்டார் என்று சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயேந்திரர் சரஸ்வதி சாமிகளுக்கு வழக்கு விசாரணைத் தொடங்குவதற்கு முன்பே பிணை வழங்கப்பட்டது. ஜெயேந்திரருக்கு ஒரு நீதி, முஸ்லிம் சமுகத்தின் தலைவர் ஹனீபாவிற்கு ஒரு நீதி என்பது பாரபட்சமில்லையா?


தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். எனவே நீதி மறுக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள குணங்குடி அனீபா உள்ளிட்டவர்களின் வழக்கில் உடனடியாக தீர்ப்பை அறிவிக்க கோரியும் நீதியை பெற்றுக் தரக்கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உயர்நீதிமன்றம் நோக்கி நீதி கோரும் பேரணியை நடத்தியது. த.மு.மு.க தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் துறைமுகம் தொலைப்பேசி இணைப்பகம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்றவர்கள் ராசாசி சாலையில் உள்ள இந்திய வங்கி அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர், பின்னர் தமுமுக தலைவர் தலைமையில் பிரதிநிதகள் குழு சென்னை உயர;நீதிமன்றம் சென்று பதிவாளரிடம் மனு ஒன்றை சமர்பித்தனர். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது, பொருளாளர் எஸ்.எஸ் ஹாருன் ரஷீத் துணைப் பொதுச் செயலாளர் எம் தமீமுன் அன்சாரி உட்பட இப்பேரணியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அணிவகுத்தனர்.


இந்நிலையில் பேரணியின் முடிவில் கைதாவதற்கு முன் தமுமுக தலைவரின் தலைமையில் நிர்வாகிகள் குழு உயர்நீதிமன்ற பதிவாளரை நேரில் சந்தித்து விரைவான தீர்ப்பு கோரி மனு கொடுத்தது. இது சம்மந்தமாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பூந்தமல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி பிரேம் குமாரை நேரில் வருமாறு அழைத்திருப்பதாகவும், அப்போது இந்த மனுவை வைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவான தீர்ப்பை பற்றி பேசப் போவதாகவும் பதிவாளர் தெரிவித்தார்.

Tags: தமுமுக பேரணி

Share this