Breaking News

அப்துல் நாசர் மதானி கைது - அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை

நிர்வாகி
0
அப்துல் நாசர் மதானி கைது - அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை-தமுமுக தலைவர் கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை

கேரளா மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும் இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அப்துல் நாசர் மதானியை அரசியல் காழ்புணர்ச்சியோடு கைது செய்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

பெங்களூரு குண்டுவெடிப்பில் அப்துல் நாசர் மதானிக்கு தொடர்பு இருப்பதாக ஒரு நபர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் 31 வது குற்றவாளியாக சேர்த்து கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதன் உண்மை நிலையை ஆய்வு செய்யாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த கைது நடந்திருக்கிறது.

மும்பையில் 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணமான (1992-1993) மும்பை கலவரத்தின் சூத்திரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்களால் விசாரணைக் கமிஷன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட பால்தாக்கரே இதுவரை கைது செய்யப்படவில்லை.

குஜராத்தில் ஆயிரக்காணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும் லட்சக்கணக்கானோர் சொந்த நாட்டில் அகதிகளாவதற்கும் காரணமான நரேந்திர மோடியை உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கண்டனம் செய்த பிறகும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாபர் மஸ்ஜிதை முன் நின்று இடித்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால் உள்ளிட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறிருக்க, ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முறையாக எந்த விசாரணையும் நடத்தாமல் கேரள மக்களின் பேராதரவு பெற்ற ஒரு அரசியல் தலைவரை கர்நாடக பா.ஜ.க. அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வஞ்சமாக சிக்கவைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடி சித்திரவதைப்பட்டு உடல்நலம் சிதைந்து சிகிச்சை பெற்று வரும் மதானியை மனிதநேயமற்ற முறையில் மறுபடியும் கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் வக்கிர குணத்தைக் காட்டுகின்றது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அப்துல் நாசர் மதானியை கைது செய்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசையும் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட கேரளா அரசையும் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.

ரெட்டி சகோதரர்களின் ஊழல் காரணமாக சந்தி சிரித்து நிற்கும் கர்நாடக பா.ஜ.க. அரசு மக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காகவே மதானி கைது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. இதற்கு துணை நின்றுள்ளத கேரள மாநில இடதுசாரி அரசு.

பெங்களூரு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள மதானி குஜராத் வழக்கு ஒன்றிலும் சேர்க்கப்பட்டு குஜராத் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிய வருகின்றது. கர்நாடகம் மற்றும் குஜராத் பா.ஜ.க. அரசுகளின் இந்த சதித்திட்டங்களுக்கு துணைப் போகும் வகையில் கேரளவை ஆளும் இடதுசாரி அரசும் மதானி கைதுச் செய்யப்படுவதற்கு துணை நின்றிப்பது வெட்ககேடானதாகும்.

Share this