Breaking News

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்க்கு பொது மன்னிப்பு

நிர்வாகி
0
சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. செப்டம்பர் 25, 2010 முதல் மார்ச் 23, 2011 வரை 6 மாதங்களுக்கான கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டுள்ளதாக சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி, “சவூதி பிரஸ் ஏஜென்ஸி” தெரிவிக்கின்றது


உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா போன்ற விசாக்களில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து, விசா காலாவதியான பிறகும், சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டினர், அருகிலுள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் (வாஃபிதீன்) பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறலாம் என அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

விசா காலாவதியாகியுள்ள வெளிநாட்டவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வெளியேற வேண்டும் என்றும், இந்த பொதுமன்னிப்பு காலக்கெடு முடிந்தும் வெளியேறாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். மேலும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவதோடு, அபராதம், சிறை தண்டனை, வாகனங்கள் பறிமுதல் முதலிய நடவடிக்கைகளோடு, அவர்களது படங்களும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

செப்டம்பர் 23 ஆம் தேதி, சவூதி அரேபியாவின் தேசிய நாள் கொண்டாடப்படுவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில் சிறிய குற்றங்கள் செய்து சிறைச்சாலைகளில் வாடி வரும் சவூதி மற்றும் வெளிநாட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படுவர்.

ஏறக்குறைய 30 இலட்சம் வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதர வளைகுடா நாடுகள் சிலவற்றை பின்பற்றி சவூதி அரேபியாவும் இந்த பொது மன்னிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Share this