Breaking News

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

நிர்வாகி
0
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 1ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் திருத்தி வருகிறது. இதன் அடிப்படையில், 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, இந்த ஆண்டு ஜனவரி 1ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதில், புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர், பெயரை நீக்க விரும்புவோர், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர், விண்ணப்பங்களை கொடுத்து தங்களது கோரிக்கையை தெரிவித்திருந்தார்கள்.

அந்த மனுக்களைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலை பரிசீலித்த தேர்தல் ஆணையம், வாக்காளர் வரைவு பட்டியலை ஜுலை 1 ந் தேதி, பொதுமக்கள் பார்வைக்கு வைத்தது. அதில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள, அது தொடர்பான மனுக்களை சமர்ப்பிக்க ஜுலை 16 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது மக்கள் கோரிக்கையை ஏற்று, காலக்கெடு ஜுலை 26 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஜுலை 16 ந் தேதி வரை பெயர் சேர்ப்புக்காக 27 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஜுலை 16 முதல் 26 ந் தேதி வரை மேலும் 4 லட்சம் பேர் பெயர் சேர்ப்புக்காக மனு செய்திருந்தார்கள். இதனை தேர்தல் ஆணையம் கவனமாக பரிசீலித்தது.

இந்த முறை, வாக்காளர் பட்டியல் சேர்க்க தகுதி இல்லாதவர்கள் பெயர்களை நீக்கும்போது, அவ்வாறு நீக்கப்படுவோரின் விவரங்களையும் கம்ப்ழூட்டரில் தேர்தல் ஆணையம் பதிவு செய்தது. பெயர் ஏன் நீக்கப்பட்டது என்று பின்னர் பிரச்சினை செய்தால் அது பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கவே இந்த ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில், பெயர் சேர்ப்புக்காக மொத்தம் 31 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இதில், சுமார் 27 லட்சம் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 4 லட்சம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலை பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பார்க்கலாம். இதுதவிர தேர்தல் ஆணைய இணையதளத்திலும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படவுள்ளது.

Share this