பாப்ரி மஸ்ஜித்:துயர நினைவலைகளின் பதினெட்டாவது ஆண்டு
பக்கர்Brothers.kollumedu
0
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மத சகிப்புத் தன்மையின் மார்பை பிளந்து இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும் இறையில்லமுமான பாப்ரி மஸ்ஜிதின் குவிமாடங்களை ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இடித்துத் தள்ளிய இருளான நினைவலைகளுக்கு இன்று பதினெட்டாவது ஆண்டு.
பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் மஸ்ஜிதை அது நிலைப்பெற்றிருந்த இடத்திலேயே கட்டுவோம் என்ற மத்திய அரசின் வாக்குறுதி இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு சங்க்பரிவார தலைவர்கள்தான் காரணம் என லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்த பிறகு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பாப்ரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில் நீண்டகாலமாக காத்திருப்பிற்கு பின் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்போ வரலாற்று உண்மைகளை நிராகரித்துவிட்டு ஆதாரங்களுக்கு பதிலாக புராணங்களுக்கும், புரட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த சந்தேகங்களை தேசத்திற்கு அளித்தது.
வரலாற்றின் மீது சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்தும் அத்துமீறல்களுடன் ஆட்சியாளர்கள் மற்றும் நீதிபீடத்தில் வீற்றிருப்போரின் குற்றகரமான பாரபட்ச முடிவுகளும் பாப்ரி மஸ்ஜித் குறித்த நினைவுகளை வேதனைக்குரியதாக மாற்றுகிறது.
நீண்ட 60 ஆண்டுகால காத்திருப்பின் இறுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வெளியிட்ட 'பாகப் பிரிவினை தீர்ப்பு' இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் உறுதிச்செய்கின்றன.
தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான நடவடிக்கைகள் ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைமையில் நடந்துவருகிறது.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் எனக்கோரி போராட்டங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன முஸ்லிம் அமைப்புகள்.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் வழக்கம்போல் இன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தவுள்ள நிலையில்,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 4 அன்று மிகப்பெரும் மக்கள் சக்தியை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
கொள்ளுமேடுxpress