Breaking News

பொது வாழ்வில் பொன்விழா காணும் மௌலானா தளபதிக்கு காயிதெமில்​லத் விருது!

நிர்வாகி
0
அன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் முதற்கொண்டு இன்றைய முஸ்லிம் லீக் கடைசி தொண்டன் வரை மௌலானா தளபதி அல்ஹாஜ் ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .
நாடு விடுதலைக்கு முன்னர் முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் நவாப்களும்(சிற்றரசுகள் ) ,பொருளாதார மேதைகளும் , உலக வணிகப் பிரமுகர்களும் ,அறிவுலக மேதைகளும் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் தலைவர்களாகவும் ,நிர்வாகிகளாகவும் பொறுப்பேற்றிருந்தனர்.நாடு விடுதலைக்கு பின்னர் "முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் இயக்கம் நடத்தலாமா? முஸ்லிம் லீக் என்ற பெயரில் செயல்படலாமா " என்ற சோதனையான காலக்கட்டத்தில் "முஸ்லிம் லீக் இயக்கத்தை கலைத்து விடலாம் "என்றும் மௌலானா மொஹானி போன்ற முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர்களே சொல்லி வந்தார்கள் .அன்றைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து முஸ்லிம் லீக் கலைக்கப்பட வேண்டும் என்று கருத்துச் சொன்னபோது " ஈமான் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் இருக்கின்ற வரையில் முஸ்லிம் லீக் இருந்தே தீரும் " என்று ஈமானின் குரலில் முழக்கமிட்டவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களாகும் .முஸ்லிம் லீக் இயக்கத்தை நடத்தியே தீர வேண்டும்.அதற்க்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று காயிதே மில்லத் அவர்கள் நாடெங்கும் பட்டிதொட்டிகளிலெல்லாம் தன் சகாக்களுடன் சுற்றுப்பயணம் செய்து முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்து முஸ்லிம் லீக் கிளைகளை துவக்கிவைத்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் 1958 ஜனவரியில் திருச்சி மாநகரில் மாநிலம் தழுவிய மாபெரும் முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு நடைப்பெற்றது.
1958 ஜூன் மாதத்தில் லால்பேட்டையில்(தெற்குத் தோப்பு -புதுநகரில்) திப்பு நகர் என்று பெயரிட்டு மாபெரும் தெ.ஆ.மாவட்ட முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு நடைப்பெற்றது அந்த மாநாட்டிற்கு பெருந்ததலைவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் ,மார்க்க மேதை ஷைகுல் மில்லத் அல்லாமா அமானி ஹஜ்ரத் மற்றும் நாடெங்குமுள்ள முஸ்லிம் லீக் தலைவர்கள் பலரும் பங்கேற்றார்கள் இந்த மாநாட்டில் தொண்டராய் இருந்து பணியாற்றியவர் மௌலானா தளபதி.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் .

இந்த இரு மாநாடுகளும் இந்திய அரசியலில் முஸ்லிம் லீக் என்ற இயக்கம் செயல்பட்டே ஆக வேண்டும் -என்ற ஒரு உறுதிப்பாட்டை முஸ்லிம்களிடையே ஏற்ப்படுத்தியது .அப்பொழுது லால்பேட்டையில் 10 வயது 11 ,12 வயது சிறுவர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து லால்பேட்டை நகரிலும்,ஆயங்குடியிலும் தெ.ஆ.மாவட்ட முஸ்லிம் லீக் சிறுவர் மாநாட்டை நடத்திய பெருமை மௌலானா தளபதி.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை சாரும்.
சிறுவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து அதிகாலையில் பைத்துகளை ஓதி தெருவெல்லாம் சென்று தொழுகைக்காக அழைத்த சிறப்பும் இவரைச்சாரும் .

10 வயதிலிருந்தே அத்தகைய அரசியல்-மார்க்க சேவையாற்றிய மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை முஸ்லிம் லீக் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் " தளபதி " என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் அதுமுதல் அறிவுலக மேதை அல்லாமா அமானி ஹஜ்ரத் அவர்களும்,அன்றைய லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவர் முத்தவல்லி மௌலவி .அப்துல் பாஸித் அவர்களும் " தளபதி " என்று இவரை அன்புடன் அழைக்கத்துவங்கினர்.

லால்பேட்டை நகரிலும்,மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடைபெற்றுவந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு மற்றும் பொதுக் கூட்டங்களிலும் இவரை " தளபதி " என்று அழைத்து காயிதே மில்லத் அவர்கள் பேச வைத்தார்கள் அந்த துஆவின் பரக்கத்தால் எல்லோரும் இன்று வரை தளபதி என்றே அன்போடு அழைத்து வருகின்றனர்.

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் தொண்டராகவும் ,முஸ்லிம் லீக்கின் தமிழக தலைவர்களான திருச்சி அப்துல் வஹாப் ஜானி பாய் ,சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ.அப்துஸ்ஸமத் சாஹிப் ஆகியோர்களை தொடர்ந்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக செயலாற்றி வருகிறார் .

ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்வாதாரங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் ,ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் விடிவெள்ளியாகவும், இந்திய விடுதலையில் பங்கேற்ற மாபெரும் இயக்கமாகவும் திகழ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களாய் திகழ்ந்த காயிதே மில்லத் ,இப்ராஹிம் சுலைமான் சேட் ,குலாம் முஹமத் பனாத்வாலா சாஹிப் போன்றோர்களின் தன்னலம் கருதா சமுதாய தொண்டுகளால் இன உணர்வு பெற்று அரசியல் வாழ்வில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்
மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள்.

முஸ்லிம் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லாமல்,சகோதர சமுதாய மக்களின் பிரச்சனைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த முஸ்லிம் லீக் தலைவர்களின் சமத்துவ உணர்வால் உந்தப்பட்டு உன்னதமான இயக்கத்தில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்வதில் உளம் மகிழ்ந்தார் .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் மாநிலத் தலைவராக சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ.அப்துஸ்ஸமத் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டபின்னர் ,அவரது பேச்சாற்றலாலும் ,எழுத்தாற்றலாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தளபதி அவர்கள் முழு நேர அரசியலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார் .

சாமானிய மனிதர்களையும் சிந்திக்கத்தூண்டும் சிராஜுல் மில்லத் அவர்களின் வலக்கரமாகவே வலம் வர ஆரம்பித்தார்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியில் மார்க்க கல்வி பயின்று மௌலவி ஆலிம் பட்டம் பெற்று முஸ்லிம் சமுதாய மக்கள் நலனுக்காகவே இயங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வரத் துவங்கினார் .

முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் -என்ற நோக்கோடு மணிச்சுடர் நாளிதழை சிராஜுல் மில்லத் அவர்கள் துவக்கியபோது அதன் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டிருக்கிறார்.ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரர்களை மணிச்சுடர் வாசகராக்கினார்

அரசியல் கட்சி என்றல் ஊருக்கு ஒரு கொடிபறக்கும் தளபதி அவர்கள் இளைஞர்களை ஊக்குவித்து வீதிக்கு ஒரு கொடியை பறக்க வைத்தார் .ஒருமித்த கருத்துக்கொண்ட ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் திறன்படைத்திருக்கும் இவர் தூய உள்ளமும், தொண்டு உள்ளமும் அனைவரையும் அரவணைத்துச்செல்லும் தாய் உள்ளமும் ஒருங்கே பெற்றிருக்கும் தளபதி அவர்கள் அயராத உழைப்பும் ,தளராத முயற்சியும் எண்ணியதை முடிக்கும் திண்ணிய உள்ளமும் அனைவரையும் மதிக்கும் அன்புணர்வும் இன்சொல் பேசும் இயல்பும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் இன்று வரை கொள்கை ரீதியாக எந்த மாறுதலுக்கும் ஆட்படாமல் ஒரே கொடியின் கீழ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திலிருந்து சற்றும் பின்வாங்காமல் அவ்வியக்கத்திற்காக இன்னும் அதிகமாக உழைக்கும் மாண்பாளர் .

இஸ்லாமிய அறிவை ஊட்டுவது மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கு இன உணர்வையும் ஊட்டி வந்த முஸ்லிம் லீக் இயக்கம் நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்து வந்தது
மாற்றம் ஒன்றே மாறாதது-என்பது பரிணாமவியல் தத்துவம் .தளபதி அவர்களின் பரிணாம வியலில் மாற்றம் என்பது "செயல்"ஆகும் செயல் அதுவே முஸ்லிம் லீக் நிலைப்பாடு.செயலின்றி ஒரு நாழிகை இவர் நில்லார் இன்று ஓரிடம் ,நாளை வேறிடம்,எங்கு சென்றாலும் அது முஸ்லிம் லீக் இயக்கம் சம்பந்தமானதாக மட்டுமே இருக்கும் .
ஒன்றை தேடி மற்றொன்றை நழுவவிடும் உலகத்தில் நன்றை தேடும் வானுயர் நாட்டம் கொண்டவர். நல்ல தலைவர்களை காண்பதும் அவரின் நயம்மிக்க சொற்களை செவிமடுத்துக் கேட்பதும் இவரின் சிறந்த குணங்கள்.நல்லோரோடு இணங்கி இருப்பதும்,நல்லவற்றிற்கு வுதவுவதும்,நல்லவைகளை காப்பதும் இவர் வளர்த்துக்கொண்ட பண்பாடு .

ஒழுக்க சீலராக-நல்லதை பாராட்டும் பேருள்ளத்தவராக பலர் சூழச் செல்லும் பான்மை பெற்றவராக - சொல்ல வரும் கருத்துக்களை முறையாக சிந்தித்து அச்சமின்றி எடுத்துச் சொல்லும் நெஞ்சுருதிமிக்கவராக தளபதி திகழ்ந்துக்கொண்டிருக்கிறார் என்றல் அதற்க்கு காரணம் சமுதாய தொண்டுள்ளம் மட்டும் தான்

எடுப்பான தோற்றம் ,விரைவான நடை ,வெள்ளை உடை மடியாத செயல் வேகம் ,சாதனை புரிய துடிக்கும் உள்ளம் மேகத்திர்க்கிடையே ஒரு மின்னல் கீற்றெனத் தோன்றும் சிரிப்பு இவரின் அடையாளமாகத் திகழ்ந்தாலும் வாழ்வின் செயல்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் அடிப்படையாக அமைவது அன்பு என்ற ஒன்று இவரிடம் இயல்பாக அமைந்துவிட்டதால் மாற்றுக் கருத்துடையவர்கள் கூட அன்பு கலந்த மரியாதையை இவருக்கு அளிக்க தவறுவதில்லை .

இவர் சிறுவராய் திகழ்ந்த போது முஸ்லிம் லீக் சிறுவர் அணி செயலாளராகவும் ,லால்பேட்டை நகர இளைஞர் அணி செயலாளராகவும் திகழ்ந்து மாநில துனைப் பொதுச் செயலாளராக பணியாற்றி தற்போது மாநில செயலாளர்களில் ஒருவராக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார் .லால்பேட்டை ஜமாத்துல் உலமா செயலாளர் ,மாவட்ட ஜமாத்துல் உலமா கௌரவ செயலாளர் ,மாநில ஜமாத்துல் உலமா துணைச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்த இவர் .லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி நிர்வாக சபை உறுப்பினராகவும்,தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை பொதுக்குழு உறுப்பினராகவும்,திகழ்ந்து தற்போது லால்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராகவும் திகழ்ந்துக்கொண்டு இருக்கிறார் .ஹஜ் சம்பந்தப்பட்ட பல்வேறு சேவை அமைப்புகளிலும் பணியாற்றி தொடர்ந்து 37 ஆண்டுகளுக்கு மேலாக புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகிறார் .
அன்புக்கு ஓர் இலக்கணமாய்-அரவணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழும் இவருக்கு எதிரிகள் என யாரும் இருக்க முடியாது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரிடமும் கண்ணியத்தோடும்,அவர்களுக்கே உரிய தனி மரியாதையுடனும் இவர் நடந்துக்கொள்வதால் எல்லோராலும் விரும்பத்தக்கவராக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

அரசியல் பற்று-மார்க்கப் பற்று இரண்டையும் தன் இருக் கண்களாக பாவித்து செயலாற்றும் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளராகவும் திகழ்கிறார்.
பொது வாழ்வில் தூய்மையுடன் ஈடுபட்டு,பொதுத் தொண்டில் பொன்விழா கண்ட தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள்,முஸ்லிம் சமுதாயத்திற்க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்- என்றால் அது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் அமைந்த பெரும் பாக்கியம்.

இந்த சேவையாளருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்க இருக்கும் செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தளபதியாரை உள்ளன்போடு வாழ்த்தி,அவரின் சமுதாய சேவை தொடர்ந்து சமுதாயத்திற்க்கு கிடைத்துக் கொண்டிருக்க நீடித்த ஆயுளுக்காகவும் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கின்றோம்.

இவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தாய்ச் சபை முஸ்லிம் லீக் தலைமையின் சார்பில் காயிதெமில்லத் விருது வழங்கி கெளரவிப்பதற்கு எங்களின் நெஞ்சம் கனிந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
வாழ்த்துவதில் பெருமிதம் கொள்ளும் லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணைய தளம்

Tags: வாழ்த்துக்கள்

Share this