தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி..!
மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க மதம் கடந்த மனிதநேயத்தோடு இலவசமாக இடம்தர முன்வந்துள்ளது நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி.
மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க மதம் கடந்த மனிதநேயத்தோடு இலவசமாக இடம்தர முன்வந்த நீடூர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினருக்கு மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.
நாகை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு நாகை அருகே ஒரத்தூரில் இடம் தேர்வு செய்துள்ள நிலையில், அக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவக்கல்லூரி அமையவேண்டுமானால் சுமார் 20 ஏக்கர் இடவசதி வேண்டும்.
மயிலாடுதுறை உட்கோட்டத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் நீண்டகால கனவான மருத்துவக்கல்லூரி அமைய இடம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கருதிய நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகம் 20 ஏக்கர் நிலத்தை இலவசமாக தர முன்வந்துள்ளது. அதற்கு மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தலைவர் வழக்கறிஞர் ராம.சேயோன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராம.சேயோனிடம் பேசியபோது, ``மயிலாடுதுறை கோட்டத்தில் வசிக்கும் மக்களின் உயிரைக் காப்பதற்காக நீடூர் அரபிக்கல்லூரி முன்வந்தது மனித நேயத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இப்பகுதியில் சாதி, மத இன வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கும், மத நல்லிணக்கத்துக்கும் இதுவே நல்ல அடையாளம். நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகத்தை வரலாறு போற்றும். மேலும், அரசாங்கமும் நீடூர் அரபிக் கல்லூரி நிர்வாகம் இலவசமாய் இடம் தர முன்வந்ததை ஏற்று, உடனடியாக மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மருத்துவக்கல்லூரி அமைய உள்ள 20 ஏக்கர் நிலம் இதுபற்றி ஜே.எம்.எச். நீடூர் அரபிக்கல்லூரி டிரஸ்ட்டின் செயலாளர் எஸ்கொயர்.சாதிக் நம்மிடம், ``நூற்றாண்டைக் கடந்த எங்கள் அரபிக்கல்லூரி சார்பாகவே மருத்துவக்கல்லூரி அமைக்க முயன்றோம். முடியவில்லை.
தற்போது அரசே தொடங்க முன்வருவதாலும், மயிலாடுதுறை அருகே போதுமான இடம் தேவைப்படுவதாலும் எங்க நிர்வாகம் தாமாகவே முன் வந்து மருத்துவக்கல்லூரி அமைய 20 ஏக்கர் இடத்தை நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளோம். அதற்கான அனுமதி கடித்தத்தை இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவுள்ளோம்.
எங்கள் இடத்தை அரசு ஏற்றுக்கொண்டு இப்பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படுமானால் அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்களால் இயன்ற சிறு உதவி செய்த சந்தோஷத்தைப் பெறுவோம்" என்றார்.
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த ஜாமிஆவின் திறன் மிக்க செயலாளர் எஸ்கொயர் சாதிக் அவர்களுக்கும் நிர்வாக கமிட்டியினர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Tags: சமுதாய செய்திகள்