மஹல்லா ஜமாஅத் சமூகத்தின் உயிர் நாடி..!
இஸ்லாமியக் கலாச்சாரத்தின் பள்ளிவாசல்கள் ஆரம்ப பள்ளிகளாக இருக்கின்றன. பள்ளிவாசல்களை மையப் புள்ளியாக வைத்து, மஹல்லாக்கள் உருவாகின்றன. மஹல்லாக்களை மையமாக வைத்து ஊரின் நிறை,குரைத் தன்மைகள் கணக்கிடப்படுகிறன.
திருமணங்கள் செய்து வைத்தல்,சொத்து பிரச்சினைகளைத் தீர்த்தல்,கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளைக் களைதல். இது மட்டுமே மஹல்லா ஜமாத்தின் பொறுப்புகள் என்றெண்ணி, சமுகம் சார்ந்த முக்கிய பொறுப்புகளை புறம் தள்ளி விட முடியாது. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திற்கும் பல முக்கிய பொறுப்புகள் அணி வகுத்து நிற்கின்றன.
சமூகத்தை சீர்படுத்துதலில், பள்ளி வாசல் இமாம்களின் பங்கு இன்றியமையாத காரணிகளாகமாறுகிறது.இமாம்களின் களப்பணிகளே, சமூகம் ஆரோக்கிய காற்றை சுவாசிக்க வழிவகுக்கும்.
மஹல்லா பொறுப்பாளர்களுடன் இமாம்களும் கை கோர்த்துச் செயல்பட்டால்!, சமூகத்தின் முன்னேற்றம் இமாலய வெற்றி அடையும்.
கிலாஃபத் என்ற பதம் தலைமைத்துவத்தை அடையாளப்படுத்தும். கிலாஃபதை இரண்டுவகைகளாக பிரித்துப் பார்க்கப்படும். கிலாஃபத் குப்ரா (பெரிய கிலாஃபத்) . கிலாஃபத் சுக்ரா (சிறிய கிலாஃபத்)
1). அரசு ரீதியான தலைமைகளின் குறியீடு கிலாஃபத் குப்ரா. 2), மஹல்லா இமாம்களின் குறியீடு கிலாஃபத் சுக்ரா. யார் எந்த மஹல்லாவில் தொழுகை நடந்த
பொறுப்பெடுத்தார்களோ அவர்கள் தான் அந்த மஹல்லாவின் சிற்றரசர்கள் ஆவார்கள். இமாம்கள்தான் அந்த பகுதிக்கு பிரதான தலைவர்கள்.மஹால்லாவின்
அனைத்திற்கும், அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இருபத்தி நான்கு மணிநேரமும் மக்களின் சேவைமையாமாக பயன்பட வேண்டிய பள்ளிவாசல்கள்,ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறன.இந்த நிலையே சமூகம் முன்னேற்றக் காற்றை சுவாசிக்க
முடியாமல் போனதின் முக்கிய காரணங்களின் ஒன்றாகும்.
நபி (ஸல்)அவர்கள் காலத்தில் கல்விகற்றுக்கொடுத்தல்,முக்கியமான முடிவு
எடுத்தல்,சமூக முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்கள் பள்ளிவாசல்களில்
நடைபெற்றன.சமூகம் மெம்மேலும் உயர நபி (ஸல்) அவர்களின் காலத்தை
மீண்டும் உயிர் பெறச் செய்வது அவசியமாகும். பள்ளிவாசல்களுக்கு பூட்டுப்போட்டு அடைத்து வைக்காமல், சமூகம் சார்ந்த விஷயங்களுக்காக பள்ளிவாசல்களை பயன்படுத்த சில வழிமுறைகள் இருக்கின்றன.அவைகளை, சரிவர நடைமுறை செய்து வந்தால் சமூக மாற்றம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்.
மார்க்க கல்வி, உலக கல்வி என்று பிரித்து விவாதத்தில் இறங்காமல், எந்த கல்வி மார்க்கத்திற்கும்,சமூகத்திற்கும் பயனாக மாறுகிறதோ அந்த கல்வியை கற்கச்
செய்வதில், நம் பார்வை அழுத்தமாக இருக்க வேண்டும். மதரஸா சென்று படிக்க
வாய்ப்புகள் எல்லோருக்கும் மிகக் குறைவு. மஹல்லா பள்ளிவாசலில், மதரஸாவில்
கற்றுக்கொடுக்கும் பாடங்களில் முக்கியமான அடிப்படை மாஸாயில்கள் இடம் பெற வேண்டும்.இதனால், மிக எளிதாக வெகுஜன மக்களுக்கு இஸ்லாமியச் சட்டக் கல்வி எளிதாகசெல்லும்.
தங்களது மஹல்லாவில் எத்தனை நபர்கள் கல்வியாளர்கள் ,எத்தனை நபர்கள் கல்லாதவர்கள் என்ற கணக்கெடுக்க வேண்டும். கல்லாதவர்களுக்குப் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்றவர்களுக்கு மேற்படிப்புக்கான வழிக் காட்டல் செய்ய வேண்டும். பொதுத் தேர்வை சந்திக்கத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கு, பகுதி நேர வகுப்புகள் இலவசமாக நடத்த வேண்டும்.
தங்களது மஹல்லாவில் வசிக்கும் ஏழைகளின் துயரைத் துடைக்க அந்த மஹல்லா சார்பில் பைத்துல்மால்கள் ஏற்படுத்தி, ஜாகாத், சதக்கா வசூல் செய்து தேவைப்படும் மக்களுக்கு உதவிசெய்தலால்! ஏழைகள் இல்லாத மஹல்லாவாக உருவாக்கமுடியும்.
முதியோர் உதவிபணம்,ஊனமுற்றோர் உதவி பணம்விதவைகள் உதவி பணம் என்று அரசு தரப்பில் வரும் உதவிகள் நம்மில் பலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றன.அதனை,எளிதாக பெரும் வகையில் பள்ளிவாசல்களில் ஆலோசனை
மையங்கள் அமைக்க வேண்டும். அதைப்போன்று, பொய் வழக்குகள்,விசாரணை என்ற பெயரில் அதிகமாக இஸலாமிய இளைஞர்கள் பாதிக்கப் படுவதால், வழக்கறிஞர்கள் கொண்ட சட்ட ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும்.
ஏழைகள் இல்லாத மஹல்லா....
ஆலோசனை மையங்கள்....
பகுதி நேர வகுப்புகள்
மஹல்லா பொறுப்பாளர்கள் தாங்கள் பதவியைப் பெருமைக்காகப் பயன்படுத்தாமல்,ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்தும் தங்களது மஹல்லா மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்..
சமூகத்தின் உயிர்நாடியான, மஹல்லா ஜாமாதின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு,பொறுப்பாளர்களுடன், நாமும் இணைந்து, சீர்திருத்தம் செய்து அதனை பின்பற்றுவது நம் அனைவருக்கும் கடமையாகும்.
A.H.யாசிர அரபாத் ஹசனி
Tags: கட்டுரை