கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாம்!
கத்தாரில் கடலூர் மாவட்டம் லால்பேட்டையை சார்ந்த சகோதரர்களை ஒன்றினைத்து கத்தார் வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள தனது ஊர் மற்றும் வெளியூர் மக்களுக்காக கல்வி, திருமணம்,மருத்துவம்,வேலைவாய்ப்பு,பொதுநலன் போன்ற பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் அமைப்பான “கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின்” மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் தோஹாவில் உள்ள ஹமாத் மருத்துவமனை வளாகத்தில் 13-03-2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை சிறப்பான முறையில் நடைபெற்றது.
இரத்த வங்கி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முகாமில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 60க்கும் அதிகமானோர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி ஜமாஅத் நிர்வாகிகள் கூறும் போது, 'யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்' என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி, முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் என்பதால் இது போன்ற பணிகளை செய்து வருவதாக கூறினர். இந்த முகாமில் தமிழகத்தை சார்ந்த பல்வேறு மாவட்டத்தை சார்ந்த தமிழின உறவுகள், பல்வேறு ஊர் ஜமாஅத் பிரநிதிகள்,சமுதாய சேவையாளர்கள்,சமுதாய அமைப்பை சார்ந்தவர்கள் என பலர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
Tags: உலக செய்திகள் லால்பேட்டை