வானம் வசப்படட்டும்!
எனக்கு தெரிந்த மொழியில் என் சமூகத்தின் கண்ணீரை எழுதுகிறேன் இந்த பதிவைப் போல அந்த கண்ணீரும் நெடியது நான்கு வரிகள் மட்டுமே போதும் என்பவர்கள் அந்த கண்ணீரைப் பார்க்கலாம், ஆனால் எப்படி புரிவது? அறிவது? துடைப்பது?
உலகின் மிகக் கொடூரமான பிரச்சினையாக கொரோனா உருவெடுத்துள்ளது, ஒவ்வொரு உலகநாடுகளும் தங்கள் மக்களைக் காப்பதற்கு அறிவியல் பூர்வமான விசயங்களைச் செய்து வருகின்றது. எந்த நாட்டிலும் இந்த நோய் மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ, பார்க்கப்படவில்லை, எத்தனையோ வெளிநாட்டு தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலாவிற்கு வந்த பயணிகள் என அந்தந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் எப்படிப் பாதுகாப்பது என்பதில் தான் தீவிரமாகக் அந்த நாடுகள் கவனத்தைச் செலுத்தி வருகிறது.
ஆனால், துரதிஸ்டவசமாக இந்தியாவில் மட்டும் இந்த நோய்த்தொற்று ஒரு இன அழிப்பிற்கான கருவியாகச் சிலரால் சிலர்மீது ஏவப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பக்கம் அரசு மருத்துவச் சிகிச்சை மூலம் குணப்படுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனாவை விட மிக மோசமான ஒரு வைரஸ் போல ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைத்துப் பரப்பப்படும் விஷ வதந்தியால் ஏற்கனவே இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள், பழமை வாதிகள் என சித்தரித்தும் எழுதியும் உலகமுழுவதும் பரவிய இஸ்லாமோபோவிஃபியாவிற்கு பிறகு சமூகம் வாழ்வாதாரத்திற்காய் கடும் சவாலைச் சந்தித்து வரும் நிலையில் இன்னும் இது போன்ற வதந்திகள் மேலும் மெல்லமெல்ல பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அப்பாவி இஸ்லாமியர்கள் தங்கள் தோள்களில் காலம் முழுதும் வலி சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குச் சிலரால் திட்டமிட்டுத் தள்ளப்பட்டு வருகிறது.
எங்கோ யாராலோ பரப்பப்படும் வதந்தியால் இஸ்லாமியச் சமூகத்தில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க மறுக்கப் படுகிறது.
தன்னை காணொளி எடுத்துப் பரப்பியதால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு கறிக்கடைக்காரர் அடித்தே கொலை இப்படி செய்திகள் நாள்தோறும், இஸ்லாமியர்கள் இந்த வெறுப்பு கனலில் வேகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மதவாதமும், ஆத்திரமும், ஆவேசமும் இங்கே புதிதல்ல மதவாதத்தை ஒரு கருவியாக்கி அரசியல் மற்றும் சமூக நலன்களை அபகரித்துக்கொள்ள ஒரு சிலரால் திட்டமிடப்பட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளைத்த் திசைதிருப்ப மத உணர்வுகளை ஊட்டி உசுப்பேற்றி பிரச்சினைகளைத் அரங்கேற்றப்படுகின்றன.
ஒரே இரவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொருளாதார சேதம் என அனைத்தையும் இழந்து சிறுபான்மை சமூகம் கண்ணீரோடு தெருவில் நிற்கிறது. இப்படி தொடரும் நிகழ்வுகளால் தொடர்ந்து இந்த சமூகத்தை இரு கூறுகளாகப் பிரித்து வைக்க ஒட்டுமொத்த ஊடகங்களையும் கையில் வைத்துக்கொண்டு அசுர பலத்துடன் பாசிச சக்திகள் நஞ்களை பரப்பும் வேளையில் இறங்கி உள்ளது. என்ன செய்யப்போகிறோம்?
எல்லோருக்கும் இருக்கும் அச்சமும், பயமும், துயரும், பெருவலியும் தொண்டைக்குள் வைத்து அடக்கிக்கொண்டு விம்மிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு இன்னல்களைத்தாண்டித்தான் அது வளர்ந்து நிற்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு சமூகமும் எதாவது பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றிகண்டுள்ளதை வரலாறு எழுதி வைத்துள்ளது.
நிச்சயமாக அவர்கள் குறிவைப்பது வெகுஜன மக்களிடமிருந்து நம்மை ஒதுக்குவது அல்லது வெறுக்க வைப்பது. இத்தைதான் தெய்வபக்தி அல்லது தேசபக்தி என்ற போர்வையில் இன மத துவேசங்களைச் சிலர் பரப்புகிறார்கள். இதை எதிர்கொள்வது அவ்வளவு எளிதும் அல்ல! இந்தியாவில் நமக்குக் கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு ஜனநாயகம், மற்றும் கருத்துச் சுதந்திரம் என்ற வாய்ப்புகளைக் கொண்டு அந்த இனவெருப்பு வைரசை கொளுத்தியாக வேண்டும்.
முதல் கட்டமாக ஜனநாயகத்தின் வழிநின்று சட்ட திட்டங்களின் வரைமுறைக்குள் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற வழிகளை நோக்குவது.
ஊடகங்களில் கண்களுக்கு எட்டிய தொலைவில் ஒரு சிலர் மட்டுமே எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஆனால் இவ்வளவு வலிமையான நமக்கெதிரான ஊடகப்போரில் வலிமையற்ற குரலாக உள்ளது. வலிமையான ஊடகத்தை உருவாக்குதல், இயக்க பாகுபாடின்றி அனைத்து மக்களுக்காகவும் போய்ச்சேரும் வகையில் தினசரி பத்திரிக்கையை உருவாக்குவது, சமூக ஊடகத்தில் பொறுப்புடன் எழுதுவது சிரிய சிரிய கானொளி நிகழ்ச்சிகள் என நம்முடைய பார்வையைத் தொலைநோக்கோடு கொண்டு செல்ல வேண்டிய சூழலில் உள்ளோம்.
பொதுவாக எங்கேயும் பார்க்கமுடியாத ஒரு பாக்கியம் தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் உரிமைக்கான போராட்ட களங்களாகட்டும், அடக்குமுறைக்கான போராட்டங்களாகட்டும் பெருமளவில் நமக்காகக் குரல் கொடுப்பது நமது இந்து சமுதாய மக்கள். அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட்கள்,அம்பேத்கரிய இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் என அவர்களின் ஒட்டுமொத்த குரலாக எப்போதும் நமக்காக ஒலிக்கிறது, அந்த உரவைத் தொடர்ந்து இன்னும் வலிமையாக்க வேண்டும்.
திட்டமிடப்பட்ட எந்த வதந்திகளுக்காகவும் நாம் எப்போதும் கூனி குறுகத்தேவையில்லை, வாட்சாப்பில் வரும் செய்திகளைக்கொண்டு ஒருவன் நம்மை வெறுக்கிறான் என்றால் அவனைப் பார்த்துக் குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகத் தேவையில்லை, அவர்கள் மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் அவர்களைப்பார்த்து நாம் பரிதாபப்படுவோம். நம்மோடு இன்னும் பல இந்து சமுதாய சொந்தங்கள் தோளோடு தோள் நிற்கிறார்கள் அவர்களின் கரங்களை நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.
குற்ற உணர்ச்சியால் புலம்பிக்கொண்டிருப்பதை விட நாமே நமக்கான கல்வி பொருளாதாரம் குறித்து நாம் ஒரு நெடிய திட்டமிடலைத் துவக்கியாக வேண்டும். கல்வியானது வெறும் பட்டப்படிப்பிற்காக மட்டுமே அல்லாமல் இன்றைய இளைஞர்கள் மிகத்தீவிரமாகக் கல்வி குறித்து ஆராய வேண்டும். தங்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்தி சமூகத்திற்காய் உழைத்தாக வேண்டும். வெளிநாட்டு மோகத்தை குறைத்து இனி இந்த சமூகத்திற்குக் கல்விதான் எல்லாமே என்ற சிந்தனையை மிகத்தீவிரமாக இளைஞர்கள் மத்தியில் விதைத்தாக வேண்டும்.
சட்டம்,பொருளாதாரம், ஊடகம் எனப் பரவலாகச் சென்று நாம் அமரவேண்டும். ஒரு சமூகம் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டுமெனில் பொருளாதாரம் மிக அவசியம். இனி நம்முடைய சமூகசேவை என்பது சோறு கொடுத்தோம்.இரத்தம் கொடுத்தோம் என்று இயக்க பெருமைகளை பாடிக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு ஊரிலும் கல்விக் கடன் மற்றும் சிறு வியாபார கடன்களைப் பெற்றுத்தர வட்டியில்லாத அமைப்பு [பைத்துல்மால்களை] வசதிபடைத்தோர் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் அனைத்துக்கட்சி அமைப்பை உருவாக்கி இந்து முஸ்லீம் கிருத்துவ நண்பர்களைக்கொண்டு சமூக ஒற்றுமைக்கான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தியாக வேண்டும்.
நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளை உச்சரியுங்கள் சிறிய வேற்று மொழி வார்த்தைகள் கூட நமக்கெதிராக திரிக்கப்படுவதை இங்கே பார்க்க முடிகிறது.
அரசியலை அரசியலாக சமூக முன்னேற்றத்திற்கானதாக பாருங்கள் இயக்க வெறிகொண்டு பார்க்காதீர்கள். இங்கே நமக்காக உழைக்கும் தலைவர்கள் அனைவரும் நமக்கானவர்களே என்ற சிந்தனை நம் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியாக வேண்டும்.
அதைவிட வலிமையாக நாம் பலரது மனங்களில் கொண்டு சேர்க்க வேண்டிய சிந்தனை... ஆம் நாங்கள் இந்தியர்கள் ஆம் நாங்கள் முஸ்லிம்கள் முஸ்லீம் என்றால் இறைநம்பிக்கையோடு நற்செயல் புரிபவன்... நேர்மை, நாணயம் மிக்கவன் வாக்குறுதியைக் காப்பவன்... எல்லோரையும் சமமாகப் பார்ப்பவன்.... எனது கைகளாலும், நாவினாலும் சிந்தனையாலும், யாருக்கும் தீங்கு நினைக்காதவன்... மதங்களைக் கடந்து மனிதனை நேசிப்பவன்.... தாராள குணம் படைத்தவன்... எல்லோருக்குமான சமூக சேவை சிந்தனை கொண்டவன்...உழைத்தவனின் உழைப்பின் வியர்வை காயும் முன் கூலிகொடுப்பவன்.... வீணானவற்றின் அருகில் கூட செல்லாதவன்.... அநீதிக்கு எதிராக உரத்த குரல் கொடுப்பவன்... ஆம் நான் இந்தியன் ஒரு இஸ்லாமியன். இன்னும் வரும்... ரஹமத்துல்லா லால்பேட்டை.
Tags: கட்டுரை