கோரக் கொரோனா தாக்கத்திலிருந்து மானிட சமுதாயம் முழுவதும் விடுபட்டு நல்வாழ்வு திரும்பிடப் பிரார்த்திப்போம் : கே.எம். காதர்மொகிதீன் அறிக்கை
கோரக் கொரோனா தாக்கத்திலிருந்து மானிட சமுதாயம் முழுவதும் விடுபட்டு நல்வாழ்வு திரும்பிடப் பிரார்த்திப்போம் எல்லோருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கை =============================
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வியாழக்கிழமை (31.07.2020) விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : எல்லோருக்கும் ஈது பெருநாள் வாழ்த்துக்கள்
இறைவனை வணங்கியும், இல்லாதோர்க்கு வழங்கியும், எல்லோருடனும் இணங்கியும் வாழும் நன்னெறி நானில மெங்கும் தழைக்குமாக. கோரக் கொரோனா தாக்கத்திலிருந்து மானிட சமுதாயம் முழுவதும் விடுபட்டு, நல்வாழ்வு திரும்பிடப் பிராத்திப்போம். ஊரடஙகு சட்டவிதிகளைப் பின்பற்றி, வீடுகளில் தொழுது, குர்பானி கொடுத்து, ஈது பெருநாள் கொண்டாடும் சூழ்நிலை தான் இந்த ஆண்டு.
ஒரு வடநாட்டு சங்கத்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் குர்பானி பற்றியதொரு வழக்குத் தொடுத்து எந்த ஆண்டு இல்லாத ஒரு புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு மத அனுஷ்டாங்கள் பற்றியும் வழக்கு தொடுப்பது, அதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுப்பது நடை முறையாகுமானால், நாட்டின் நிலை என்ன ஆகும் என்பதை அறிவு ஜீவிகள் சிந்திக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது அவர்களின் மத அடிப்படையிலான உரிமை என தெளிவாக கூறியுள்ளது. குறிப்பாக நாடெங்கிலும் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு முறையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. பிறருக்கு எந்த இடையூறும் இல்லாமல் அமைதி வழியில் குர்பானி கொடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையைப் பின்பற்றும் வகையில் சாந்த சூழ்நிலையில் சகவாழ்வு மிளிர ஈது பெருநாள் கொண்டாடுவோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: சமுதாய செய்திகள்