Breaking News

பொது போக்குவரத்து இயக்கு இ-பாஸ் முறையை ரத்து செய் : எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிக்கை

நிர்வாகி
0

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பல்வேறு வகையான தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்தாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான தளர்வுகளை அளித்துவிட்டு இ-பாஸ் நடைமுறையை தொடர்வதால் பல்வேறு சிக்கல்கள் உருவாக்கியுள்ளன. திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் ஆகியோர் வேறு மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கோ, பணி செய்யும் ஊர்களுக்கோ இ-பாஸ் நடைமுறை சிக்கல் காரணமாக திரும்பிச் செல்ல இயலவில்லை. இதுமட்டுமின்றி மாவட்ட எல்கைகளுக்கு அருகில் உள்ள தினக்கூலி உழைப்பாளிகள், கட்டிடத் தொழிலாளர்கள் கூட இ-பாஸ் முறையால் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு பணிக்குச் செல்ல இயலாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக தொடர்சிகிச்சை பெறும் நாட்பட்ட நோயாளிகள் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதில் இ-பாஸ் காரணமாக மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும், இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கும் இ-பாஸ் முறை என்பது படிக்காத பாமர மக்களுக்கு சாத்திமில்லாத ஒன்று என்பதால், இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே சில நூறுகளை செலவு செய்து இ-பாஸ் பெற வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இது ஏழை-எளிய மக்கள் மீது மிகுந்த பாரத்தை ஏற்றும் நடவடிக்கையாக உள்ளது. பல இடங்களில் போலி இ-பாஸ் மூலமும் மக்கள் ஏமாந்துள்ள செய்திகளும் வெளியாகியுள்ளன.

பல்வேறு மாநில அரசுகள் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துவிட்டன. மத்திய அரசின் தற்போதைய ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் கூட மாவட்டங்களுக்கு இடையில் இ-பாஸ் நடைமுறை இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்துகிறது. ஆகவே இ-பாஸ் நடைமுறையால் ஏற்படுள்ள சிக்கல்கள் மற்றும் பொதுமக்கள் படும் இன்னல்களை உணர்ந்து, தமிழக அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை முழுஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அரசின் நோக்கத்திற்கு மாறாக, ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாட்களிலேயே அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மக்கள் கூட்டமாக வெளியே வருவதை காண முடிகிறது. இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிறது. அது மட்டுமின்றி, அன்றைய தினங்களில் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது. ஆகவே, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்து, மற்ற வழக்கமான நாட்களில் உள்ளது போன்று ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், பொது போக்குவரத்து தடை காரணமாக வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்கள் போக்குவரத்திற்காக தனியார் வாடகை வாகனங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏழை-எளிய மக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி தற்போது நாளுக்கு நாள் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சொந்த வாகனங்களை நெடுந்தூர இடங்களுக்கு பயன்படுத்துவதால், தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வாகனங்களின் எரிபொருளுக்கு செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் பகுதி பகுதியாக பொது போக்குவரத்து இயக்கத்தை தொடர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: செய்திகள்

Share this