Breaking News

தமுமுக இணைய வழி வெள்ளி விழா மாநாடு!

நிர்வாகி
0

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மாநாடு! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:

1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய்ப் பரவல் காரணமாகவும், பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும் இணையம் வழியாகவே இம்மாநாட்டை நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

இரண்டு அமர்வாக நடைபெறவிருக்கும் இந்த இணைய வழி வெள்ளி விழா மாநாட்டில், மாலை 7 முதல் 10 மணி வரை தமுமுக தலைவர் பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறவுள்ள எழுச்சி அரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின், இலங்கையின் முன்னாள் மத்திய அமைச்சரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழ் புலிகள் இயக்கத் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் சிறைப்புரையாற்ற உள்ளனர்.

அதேபோல் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா தலைமையில் காலை10.30 முதல் 1 மணி வரை நடைபெறவுள்ள முதல் அமர்வில் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எம். பஷீர் அஹ்மது, மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஜமாத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ரூஹீல் ஹக், பேரா. அ.மார்க்ஸ், பேரா. அருணன், மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில தலைவர் மவ்லவி ஹனிபா, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மேஜர் சையத் சஹாபுதீன், ஊடகவியலாளர்கள் வீரபாண்டியன், ஜென்ராம், ஆர்.நூருல்லா, டி.எஸ்.எஸ். மணி மற்றும் தோழமை இயக்கத்தின் இயக்குநர் அ.தேவநேயன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வை www.tmmk.in என்ற இணையதளத்திலும், TMMK MEDIA என்ற பெயரில் உள்ள யூடியூப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேரலை செய்யப்படும்.

Tags: சமுதாய செய்திகள்

Share this