இந்தியாவின் தடைக் கற்கள் ..!
விவசாயம் பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வோடு தொடர்புள்ளது. விவசாயமில்லா வாழ்வை நினைத்துக் கூட பார்க்க இயலாது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்க்கை பயணத்தைப் பயணிக்கின்றன.
விவசாயம் அழிந்தால் உலகம் தன் இயல்பு நிலையை இழக்க நேரிடும். இந்தியா செல்ல செழிப்பான நாடு. இங்கு உழைக்கும் மக்கள் அதிகமாக உள்ளார்கள். அவர்களை நல்லமுறையில் பார்த்துக்கொள் என்று முகலாய மன்னர் பாபர் மரணிக்கும் நேரத்தில் தனது மகன் ஹூமாயூனிடம் கூறிய விஷயம் இது. ஆம். இந்தியா செல்வ செழிப்புடன் உள்ள நாடு இதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் முதுகெலும்பென்று வர்ணிக்கப்படும் விவசாயம் மெதுவாகக் கொல்லும் விஷத்தைச் சாப்பிட்டது போல் கொஞ்சம், கொஞ்சமாக மரணத்தின் வாயிலை நெருங்கிக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்மை ஆளுபவர்கள் என்றால் மிகையாகாது.
விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்கள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன?
மொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, 3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. . அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும், சேமித்து வைக்கவும் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதை இந்த சட்டம் கூறுகிறது.
இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வரும் முன்பே அத்துயாவசியப் பொருட்களின் விலைகள், தங்க விலையை விட அதிகரித்து வருகிறது.. பதுக்கல் எதிர்ப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே சில வணிகர்கள் இக்கட்டான நிலையில் பதுக்கி, பொது மக்களுக்கு விலை அதிகமாக விற்பனை செய்வார்கள். பதுக்கினாலும் அரசு கண்டிக்காது என்ற வகையில் சட்டங்கள் இயற்றினால்! வியாபாரியின் எண்ணப் படி விலைகள் தாறுமாறாக ஏற்றம் காணும்.இதன் விளைவு சாமானிய மக்களின் வாழ்வைச் சிதைத்துவிடுமே?..
வியாபார ரீதியாக இஸ்லாம் கூறும் சட்டத் திட்டங்களில் பதுக்கலைக் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பதுக்கல் செய்பவன் பாவியாவான்” இன்னொரு அறிவிப்பில் “பாவியைத் தவிர வேறெவனும் பதுக்கமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இந்தியாவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த முகலாயர்கள் போர்க்காலங்களில் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படாமல் போர் செய்த வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. அவர்கள் காத்த விவசாயத்தைத் தற்கால அரசு அழிக்க நினைக்கிறது.
முகலாய மன்னர்களில் ஒருவரான அக்பருக்கு முன்னோடி என்று கூறக்கூடிய சூர் வம்சத்தைச் சேர்ந்த சேர்கான் (1540- 1545). இவர், தன் ஆட்சிக் காலங்களில் வேளாண் நிலங்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டிருந்தார்." "விவசாயம் அழிந்தால் அரசன் சீரழிந்து போய்விடுவான்" என்ற தத்துவத்தை முன்னிறுத்தி விவசாய நிலங்களைப் பாதுகாத்தார். போர்க்காலங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
விலைவாசி ஏற்றம் கண்டு பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக "சஹானா இ மண்டி", என்ற பெயரில் அதிகாரிகளின் குழுவை கில்ஜி வம்சத்தைச் சார்ந்த அலாவுதின் கில்ஜி (1296-1316) நியமித்தார். அதே போல், "முன்ஷியான்கள்" என்ற பெயரில் ஒரு குழு அமைத்து விலைவாசி ஏறாமல் கண்காணிக்கச் செய்தார்.அளவு குறைப்பு விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொண்டார்.
யாரேனும் 100 கிராம் அளவையில் குறைபாடு செய்தால் அந்த வியாபாரியை அழைத்து வந்து அவரின் உடலில் 100 கிராம் அளவு சதையை வெட்டி எறிந்தார்.
பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். அரசன் என்பவன் அனைத்து மக்களுக்காக இருக்க வேண்டும். அப்படித்தான் முகலாயர்களும் ஆட்சி செய்தார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்தியர்கள், சுல்தான்களையும், முகலாயர்களையும் எதிர்க்கவில்லை என்பதே அவர்களின் நல்லாட்சிகளுக்குச் சான்று.
"தன்னை ஏழை மகனென்று பிரகடனம் செய்துக் கொண்டு, சாமானிய மக்களின் வாழ்வை கார்பரேட் முதலாளிகளின் கையில் கொடுக்கின்றது மத்திய அரசு".
தற்போது இயற்றப்பட்ட மசோதா விவசாயத்தை அழிக்கும்.விலைவாசி நாளுக்கு நாள் அதிகரிக்கும். விவசாயம் செய்தவனைச் சோற்றுக்குக் கெஞ்சவைக்கும். நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கும்.கார்பரேட் முதலாளிகளின் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும்.
அரசு தான் செய்ய வேண்டியவைகளை பல துறைகளைத் தனியார்களிடம் கொடுத்து , தன் பொறுப்புகளைத் தட்டி கழித்துவிட்டு, இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையை அரசு வேலையாகப் பார்த்து வருகிறது ஆளும் மத்திய அரசு.இவர்கள்தான், இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தடைக் கற்கள். இவர்களை அகற்றினால் இந்தியா உலக அரங்கில் மிளிரும். A.H.யாசிர் ஹசனி லால்பேட்டை
Tags: கட்டுரை
copy no
பதிலளிநீக்குOk
பதிலளிநீக்கு