Breaking News

கவனமும் எச்சரிக்கையும் அவசியம் தேவை..! ஓர் விழிப்புணர்வு பதிவு..!

நிர்வாகி
0

உலகத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் கொரோனா குறித்து நாம் மிகுந்த கவலையும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மரணச்செய்திகளின் புகைப்படங்களை முகநூலில் காணும் போதும் பள்ளிவாசல்களின் வஃபாத் செய்தி அறிவிக்கப்படும் போதும் மனம் நம்ப மறுக்கிறது. இந்த நோய் யாரைத் தாக்கும் யாரைத் தாக்காது என்ற எந்த விதமான சரியான புள்ளி விபரங்கள் இல்லாத சூழலில் தமிழகத்தில் பல இடங்களில் பாதிப்புகள் நடந்த வண்ணமே இருக்கிறது, பல இடங்களில் மரணங்களின் சடலத்தை நம் சகோதரர்கள் தான் எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் அலட்சிய சிரிப்போடும் சரியான பாதுகாப்பு இல்லாமலும் தான் நாம் உலா வருகிறோம்.

தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் இத்தகைய சூழலில் நம் ஊர் மக்கள் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இதை அணுகுதல் அவசியமாகிறது. ஊரில் பல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்புகள் இருந்த வண்ணமே உள்ளது. சாதாரண சளிக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். யாரும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

சத்தான உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு உண்ணக்கொடுங்கள். குழந்தைகள் வெளியில் போய் வந்தால் உடனடியாக கைகால்களைச் சோப்பால் கழுகி சுத்தப்படுத்தி தூய்மையாக்குங்கள். ஆடைகளைத் தினமும் குளித்து மாற்றச் சொல்லுங்கள். கொரோனா விசயத்தில் வாக்சின் மூலம் ஒரு முடிவு எட்டும் வரை ஊரில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கையும் பொறுப்பும் அவசியம் தேவை இருக்கிறது.

ஒரு இக்கட்டான நோய் தாக்குதல் மற்றும் பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் கட்சி, வெவ்வேறு ஜமாத்துகள், தனிநபர்களின் விருப்பு வெறுப்புகள், இறுமாப்பு போன்ற விசயங்கள் இவையனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு ஒரு சமூகமாக ஒரே ஜமாத்தாக இணைந்து கொண்டு அதை எதிர்த்து நிற்க வேண்டியது காலத்தின் அவசியம். ஒரு ஜமாத் என்பது தனிநபர்களின் எண்ணிக்கை அல்ல..! அது நாம் தான் என்ற சிந்தனை எழ வேண்டும், எதன் மீதோ உள்ள கோபத்தை ஜமாத் மீது நாம் கல்லெறிவது அது நம்மிடையே தான் திரும்பி வரும். ஏனென்றால் ஜமாத் என்பதே ஊர் மக்களாகிய நாம் தான். ஒவ்வொரு தனிநபர்களுக்கும் ஊரையும் ஊர் மக்களையும் காக்கும் சிந்தனையும் பொறுப்பும் அவசியம் இருத்தல் வேண்டும்.

சமீபத்தில் மிக அதிகமான காய்ச்சல் ஊரில் பரவுவதால் ஊர் மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க அத்தியாவசிய கடைகள் தவிர்த்து ஊர் ஜமாத்தே நான்கு நாட்கள் லாக்டவுன் அறிவித்துள்ளது பாராட்டப் பட வேண்டியதுதான். இருந்தும் அனைவரும் லாக்டவுன் காலங்களில் கடை வாசலில் கட்சி அலுவலகத்தில் பொது இடங்களில் என உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்காமல் அவசர நிலை தவிர்த்து தேவையற்று ஊர் சுற்றாமல் வீட்டில் அனைவரும் ஓய்வு எடுத்துக்கொள்வது சிறந்தது. காரணம் மற்ற இறப்புகளைவிட கொரோனா கொடியது கடைசி நொடியில் முகத்தைக்கூடப் பார்க்கும் வாய்ப்பை அது தராது. எனக்கெல்லாம் வராது என்ற ஆணவம் யாருக்கும் வேண்டாம் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் உடற் பயிற்சி செய்பவர் கட்டான உடல்வாகை உடையவர் அவருக்கே வந்தது.

இந்த நான்கு நாட்கள் மூடுனா கொரோனா போய்விடுமா என்று சிலருக்கு தோனலாம் நிச்சயமாக இல்லை ஆனால் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அந்த பாதிப்புகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அதைத் தேடுவதுதான் ஒரு ஜமாத்தின் வேலை அதைத்தான் அவர்கள் பொறுப்போடு செய்துள்ளார்கள். அதற்கு ஊர் மக்களும் தங்கள் ஆதரவைத் தந்து உங்களையும் உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களையும் நோய்ப் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

வணிகத்தில் உள்ளவர்களுக்குச் சிலருக்கு வருத்தம் இருக்கலாம் இருந்தும் இது போன்ற இக்கட்டான சூழல்களில் ஜமாத்தோடு உங்களது பங்களிப்பையும் தருவதுதான் சிறந்தது. அதற்கான நற்க்கூலி இறைவனிடத்தில் கிடைக்கும். மீண்டும் சொல்கிறேன் ஜமாத் என்பது யாரோ சில நபர்கள் அல்ல அது நாம் தான். பொறுப்போடு வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்

அக்கறையுடன்

B.ரஹமத்துல்லா

Tags: கட்டுரை

Share this