தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்க நவாஸ்கனி எம்பி வலியுறுத்தல்.!
இந்தி திணிப்பிற்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க கோரியும் *நவாஸ்கனி எம்பி* நள்ளிரவு 12.15 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் வலியுறுத்தல். -- நேற்றைய நாடாளுமன்ற மக்களவை நள்ளிரவு வரை நடைபெற்றது.
அதில் நள்ளிரவு 12:15 மணியளவில் தமிழகம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற கொறடாவுமான நவாஸ்கனி எம்பி உரையாற்றியபோது,
ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும், ஓமன் நாட்டில் தூதரகம் சார்பாக நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ் மொழியை சேர்க்கவும் வலியுறுத்தினார். அவர் ஆற்றிய உரை பின்வருமாறு., நன்றி மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,
இந்த நள்ளிரவு நேரத்திலும் அவையை நடத்தி நள்ளிரவு 12.15 மணிக்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
1949 களிலேயே ஆட்சி மொழி குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்தபோது, இந்திய அரசியல் நிர்ணய சபையில், பன்முகத்தன்மை கொண்ட இந்திய தாய்த் திருநாட்டில் ஒரு மொழி ஆட்சி மொழியாக அமையும் என்றால் அது எம் தாய்மொழி தமிழே என்று ஓங்கி முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக ஒரு முக்கிய பிரச்சினையை இந்த சபைக்கு கொண்டுவர விரும்புகின்றேன். தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு தளங்களில், மக்கள் எதிர்த்து வருகின்றார்கள். அதிலும் தற்போதைய புதிய கல்விக் கொள்கை மொழித் திணிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தமிழகக் கல்வியாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
எனவே எத்தகைய மொழியையும் திணிக்கக்கூடாது, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதிலும் பல நூற்றாண்டுகள் கடந்து இலக்கிய, இலக்கணத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் தாய்மொழி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவேண்டும். யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், இதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களின் விருப்பம் இல்லாது எந்த ஒரு மொழியையும் திணிப்பது கண்டிக்கத்தக்கது. நம்முடைய பிரதமரின் உரைகளில் மட்டும் தமிழ் மொழியின் மேன்மையும், பெருமையும் கலந்து இருக்கின்றது ஆனால் செயல்பாடுகளில் அத்தகையது இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதியை காட்டிலும் தமிழுக்கு வழங்கப்படும் நிதி குறைவு என்பது அதனை பிரதிபலிக்கின்றது. எனவே மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஓமன் நாட்டில் இந்திய தூதரகத்தின் சார்பாக செயல்படக்கூடிய பள்ளியில் தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்படவில்லை, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுவதுபோல தமிழ்வழிக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ் கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை செய்பவர்களாக, தொழில் நிமித்தமாக அங்கேயே வசித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாயகம் திரும்பும் போதும், தொடர்ந்து தமிழ்வழிக் கல்வியே படிப்பதற்கு, அங்கேயும் தமிழ்வழிக் கல்வியை படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
Tags: செய்திகள்