சிதம்பரத்தில் நடைபாதை சப்கலெக்டர் ஆய்வு!
சிதம்பரம் நடராஜர் கோவிலின் தேரோடும் நான்கு வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து சப் கலெக்டர் மதுபாலன் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு நடந்து சென்று ஆய்வு செய்தார்.
நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைகழகம், பிச்சாவரம் சுற்றுலா தளம் என மிக சிறப்பான பகுதிகளை கொண்ட பாரம்பரியம் மிக்க ஊர் சிதம்பரம். 'சிங்கார சிதம்பரம்' திட்டத்தின் கீழ் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நகரில் தேரோடும் வீதியான கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதிகளில் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் வசதிக்காக பல கோடி மதிப்பில் நடைபாதை அமைத்தனர்.அடுத்தடுத்து சில ஆண்டுகளில் நடைபாதை மட்டும் இருந்ததே தவிர, வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் போனது. இதனால் பொதுமக்கள் மீண்டும் சாலையில் நடக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது வாகனங்கள், மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்கால் நகரில் வீதிகள் அனைத்திலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமானது. பல முயற்சிகள் எடுத்தும் நடைபாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் போனது.சப்கலெக்டர் அதிரடிஇந்நிலையில் சிதம்பரத்தில் புதியதாக பொறுப்பேற்ற சப் கலெக்டர் மதுபாலன் நேற்று நகரப்பகுதிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். கீழவீதியில் ஆய்வை துவக்கி, தெற்குவீதி, மேலவீதி, மேலவீதி மார்க்கெட், வடக்கு வீதிகளில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். நடைபாதை ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். ஒவ்வொறு பகுதியிலும் உள்ள பிரச்னைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். சப் கலெக்டரின் ஆய்வை பார்த்த மக்கள் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து, மீண்டும் நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாசில்தார் ஹரிதாஸ், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கார்த்திக், நகராட்சி பொறியாளர் மகாராஜன், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முதற்கட்டமாக, நகரில் சுற்றித் திரியும் மாடுகளை உரிமையாளர்களே பிடித்துச் செல்ல வேண்டும்.
தவறினால் அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சப்கலெக்டர் உத்தரவிட்டார். இது குறித்து சப் கலெக்டர் மதுபாலன் கூறுகையில், பாரம்பரியம் மிக்க நகரில், நெருக்கடி அதிகரித்து வருகிறது. மக்களின் நலன் கருதி நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றி மக்கள் பன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.
Tags: செய்திகள்