ஜாமிஆ மில்லியாவுக்கு வயது 100
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சான்றோர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ஜாமிஆ மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததுதான் ஜாமிஆ மில்லியாவின் வரலாறும். அதனால்தானோ என்னவோ இன்றைக்கும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்த்து ஜாமிஆ மாணவர்கள்தாம் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். இந்தச் சூழலில் ஜாமிஆ மில்லியா தன் 100 ஆண்டுகளை முழுமையாக்கியுள்ளது.
1920 அக்டோபர் 29இல் அலீகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலில்தான் முதன்முதலாக ஜாமிஆ மில்லியா தொடங்கப்பட்டது. அதன் முதல் துணைவேந்தராக மௌலானா முஹம்மதலி ஜவ்ஹர் இருந்தார். 1925 இல் டெல்லியிலுள்ள கரோல்பாகிலும் தர்யாகஞ்சிலும் இந்த நிறுவனம் இடம் மாறியது.
1935இல் இருந்துதான் இப்போதுள்ள ஹோக்லா வளாகத்தில் ஜாமிஆ மில்லியா செயல்படத் தொடங்கியது. 39 துறைகளுடன் ஏராளமான ஆய்வுப் படிப்புகளையும் வழங்கி வருகிறது ஜாமிஆ. இன்று சற்றொப்ப 21,000 மாணவர்கள் படிக்கிறார்கள்.
ஜாமிஆ மில்லியாவின் நூற்றாண்டு நிறைவுக்கு பிரியங்கா காந்தி உட்பட தலைவர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஜாமிஆ மில்லியா இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருந்து அறிவுத்தளத்தில் சிறப்புடன் இயங்க இறையருள் துணை நிற்கட்டும்.
Tags: சமுதாய செய்திகள்