முத்துராம லிங்கத் தேவர் அவர்களும் ஜமால் முஹம்மது குடும்பத்தினரும் பங்காளி உறவுகள் - பேராசிரியர் காதர் மொகிதீன்
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா அக்டோபர் 30-ல் அரசு விழாவாகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. தேவர் திருமகனாரின் பிறந்த நாளும் அக்டோபர் 30 - அவர் மறைந்த நாளும் அதுவே! தேவர் அவர்களின் பிறந்த நாளுக்கு தேவர் ஜெயந்தி எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காந்தி ஜெயந்தி என்பதுபோல, தேவர் ஜெயந்தியும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
முஸ்லிம் சமுதாயத்தவரோ, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களோ தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ளவில்லை என்பதால் முஸ்லிம்களுக்கும் - தேவர் திருமகனார் அவர்களுக்கும் எவ்விதத் தொடர்போ சம்பந்தமோ இல்லை என்று யாரும் கருதிவிடக் கூடாது.
இஸ்லாமிய மார்க்கத்தில் சிலைக்கு மாலையிட்டும் மரியாதை செலுத்தி - பூஜித்து - வணங்கி வழிபடுதல் தடுக்கப்பட்டிருக்கிறது. வணங்குவதற்குரியவன், ஏக இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரும் எதுவும் இல்லை என்று உளமாற நம்பி - மொழியால் பிரகடனம் செய்து செயலால் நடைமுறைப்படுத்துவதற்குப் பெயர்தான் ஏகத்துவ இறைக் கோட்பாடு ஆகும்.
ஏகத்துவ இறைக்கோட்பாட்டில் உறுதியோடு இருக்கின்ற உலக முஸ்லிம்கள் எவரும் சிலைகளுக்கு வணக்கம் தெரிவிப்பது இல்லை. அந்த அடிப்படையில் தான் தேவர் ஜெயந்தி விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்க வில்லையே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.
ஆனால், உண்மையில் தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவதற்கு தமிழக முஸ்லிம்கள் எல்லா, வகையிலும் சம்பந்தமுடையவர்களாவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேவர் அவர்கள் ஜனனம் எடுத்தபோது, அவரின் அருமை அன்னையார் மறைவு எய்திவிட்டார்.
பச்சிளம் பாலகனுக்குப் பாலமுது ஊட்டும் பாக்கியவதி மறைந்து விட்டார். அத்தருணத்தில்ஆயிஷா என்னும் பெயருடைய முஸ்லிம் மாது, தேவருக்குப் பாலூட்டினார் - பாலூட்டி வளர்த்தார் என்று சரித்திரம் கூறுகிறது. நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தேவரின மக்கள் பல இடங்களில்இஸ்லாமிய நெறியை ஏற்றனர். இதனால் தென் தமிழகத்தில் தேவர் இன மக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும், இடையில் சகோதரத்துவப் பாசம் வேரூன்றி வளர்ந்தது என்று தமிழக வரலாற்று நிபுணர்கள் குறித்திருக்கிறார்கள்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் பெயரில் ~ஜமால் முஹம்மது இருக்கிறது. இவரின் முன்னோர்கள் பசும்பொன்னுக்குப் பக்கத்தில் உள்ள நரிக்குடியைச் சேர்ந்த தேவர்கள் என்றும், பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் அவர்களுக்கும் ஜமால் முஹம்மது குடும்பத்தினருக்கும் பங்களாளி உறவுகள் உண்டு என்றும் ஆடுதுறை ஜமால் முகைதீன் பாப்பா அவர்கள் அடிக்கடி கூறி வந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.
தேவரின மக்கள் இஸ்லாமிய நெறியை ஏற்றனர் என்பதற்கு அந்தச் சமுதாயத்தில் இன்றளவும் நீடித்து வரும் ஒரு சமுதாயப் பழக்கத்தை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாகும். தென் தமிழகத்தில் உள்ள தேவர்களில் சில குடும்பத் தினர், தங்களின் ஆண் குழந்தைகளுக்கு இன்றளவும் ~கவறெடுப்பு விழா நடத்துகிறார்கள். கவறெடுப்பு என்பது முஸ்லிம்கள் தங்களின் ஆண் குழந்தைகளுக்கு செய்கின்ற சுன்னத் கல்யாணமாகும்., இதனை மார்க்கக் கல்யாணம் - விருத்தசேதன விழா என்றெல்லாம் கூறுகின்றனர். முஸ்லிம்களாக மாறிய தேவர்கள் காலப் போக்கில் இஸ்லாமிய வாழ்வு முறையை விட்டு பழைய நிலையிலேயே வாழத் தலைப்பட்டுள்ளனர். இருப்பினும் சுன்னத் கல்யாணம் மட்டும் இன்றளவும் கவறெடுப்பு என்னும் பெயரில் தேவர்கள் மத்தியில் பின்பற்றப்படு கின்றது என்று சமூக இயல் அறிஞர்கள் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறார்கள்.
தேவர் திருமகனார் எல்லா மதத்தவருக்கும் எல்லா சாதியினருக்கும பாடுபட்டுள்ள பண்பாடுமிக்கப் பெருந் தலைவராகத் திகழ்ந்தவர். சமுக நல்லிணக்கத்தைத் தமிழகத்தில் வளர்ப்பதற்கு தேவர் ஜெயந்தி பயன்பட வேண்டும். அரசும் அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகத்துக்குரிய நல்லிணக்கம் உருவாக்குவதற்கு இந்த விழா மூலம் பாடுபட வேண்டும். அதற்கு தமிழக முஸ்லிம் சமுதாய மக்கள் என்றென்றும் துணை நிற்பர்.
-பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன். தலைவர், தேசிய தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
Tags: செய்திகள்