இறைவன் அனுப்பிய அரேபியாவின் பேரொளி..!
அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைப்படுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும், பண்பாட்டையும், உயரிய ஒழுக்க விழுமியங்களையுமே உலகிற்குப் போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவற்றை முதலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள்.
உலக முஸ்லீம்களின் உன்னதத் தலைவர். ஒரு சிலையோ, அடையாளமோ இவ்வுலகில் எங்கும் இல்லை; எதுவுமில்லை; இருந்தும் அவர் தான் எல்லோருக்கும் உயிர். இது எப்படிச் சாத்தியம்..? என உலக அறிஞர்கள் வியந்து ஆராய்ந்தார்கள். அதன் ஆராய்ச்சி முடிவு ஒன்றை மட்டுமே உணர்த்தியது. அவர் கொண்ட ஒரிறைக் கொள்கை, அதன் கோட்பாடு, அதன் தத்துவம், அதன் நேர் வழி என்று..!அதை வெறும் நாவினால் போதித்துவிட்டு மட்டுமே செல்லாமல், தானே அதற்குச் சான்றாய் வாழ்ந்து காட்டியதுதான் என முடிவில் தெரிந்து கொண்டார்கள்.
நபிகள் நாயகம் ((ஸல் ) உலகில் புதிய புரட்சியைத் தோற்றுவித்த பெரும் புரட்சியாளர். புதுமையான கருத்துக்களையும் வாழ்க்கை நெறிக்கான தத்துவக் கோட்பாடுகளையும் மக்களுக்குப் புகட்டி, தாமே சான்றாய் வாழ்ந்து காட்டியவர்கள். சொல்லும் செயலும் ஒன்றாய் ஒழுகி, இணைந்து முன்மாதிரியாக நின்றவர்கள். அன்பிலும், பண்பிலும் உறவுப் பாசத்திலும், தேசத்தின் பற்றிலும், போரிலும், அமைதியிலும், நட்பிலும், சகோதரத்துவத்திலும், இணக்கத்திலும், சமூகத்தை இணக்கமாக்கி ஒற்றுமைப் படுத்துவதிலும், சமூகத்தில் சச்சரவுகளைத் தீர்ப்பதிலும், குடும்ப உறவுகளைப் பேணுவதிலும், அரசாட்சியிலும், தீர்ப்பிலும், நீதியிலும், நெறியிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.
உற்றார், உறவினர், அயலார் பிற சமயத்தார் என வெறுப்பு கொள்ளாமல் நேசக்கரம் நீட்டி அன்பைப் பொழிந்து அனைவரையும் ஒன்றிணைத்து புதியதோர் அரசை உருவாக்கியவர். பொதுச் சொத்தை நிர்வகிப்பது எவ்வாறு என ஒரு புதிய சூத்திரத்தைப் போட்டு தந்தவர் பெருமானார் அவர்கள்.
"உன் தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது" என்று மொழிந்து தாயின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியவர். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்குச் சொத்துரிமையைத் தந்து, பெண் இனத்தைப் போற்றி அவர்களுக்குக் கண்ணியத்தைப் பெற்றுத் தந்தவர்கள். பணி செய்தவனின் வியர்வை காயும் முன்னே அவன் கூலியைக் கொடுத்து விடுங்கள் என இதமாகக் கூறி உழைப்பாளர்களின் தோழனாகவும் நின்றவர்கள். அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க, நாம் மட்டும் உணவு உண்பது தடுக்கப்பட வேண்டியது எனவும் நீங்கள் கொடுக்கும் விருந்தில் ஏழைகளுக்கு இல்லாததது, இறைவனுக்கு உவப்பாகாது எனக்கூறி வறுமையை ஒழிக்கவும், பட்டினிகளைத் தடுக்கவும், உண்ணும் உணவில் கூட மனிதநேயத்தை உணர்த்தியவர்கள்.
போரில் பெரும் வெற்றி கொண்டபோதும் எதிரிகளை மன்னித்து உலகில் புதியதோர் நாகரீகத்தையும், பண்பாட்டையும் உருவாக்கியவர்கள்.
அடிமை விலங்கினை உடைத்தெறிந்து இவ்வுலகில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், நிறவெறி, மதவெறி என்று மனிதனுக்குள் எதுவுமில்லை என்று புதிய சட்டங்களை உருவாக்கியவர் எங்கள் பெருமானார்..! .
மனித இனத்தை மாண்போடும், கண்ணியத்தோடும், ஒழுக்கத்தோடும், இரக்கத்தோடும், மனிதர்கள் மேல் அன்போடும், ஆதரவோடும் வாழ எங்களுக்கு இறையையும் அவன் தந்த திருக்குரான் என்ற மறையையும் கொடுத்துச் சென்ற மாமனிதர். அதனால் அவர் எங்களுக்கு உயிருக்கும் மேலானவராகத் திகழ்கிறார்.
B.ரஹமத்துல்லா
லால்பேட்டை