இதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்
பேரிடர் கால முன்னேற்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு நிர்வாகம் செயல்படுவதற்கு முன்பாக இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் போட்டிபோட்டுக் கொண்டு களத்தில் குதிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
முஸ்லிம்கள் சீக்கியர்கள் தவிர்த்து நாட்டில் வேறு எந்த சமூகமும் அமைப்பும் இப்படி சேவையாற்றுவது கிடையாது.வேறு எந்த சித்தாந்தங்களும் இந்த சேவைகளை ஒரு வணக்கம் என்று போதிப்பதும் கிடையாது.
சீக்கியர்களின் சேவைகள் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் சேவைகள் பலமுகப்படுத்தப் பட்டுள்ளன. அதனால் புயல் காலத்தில் செய்யப்பட்ட சேவைகளின் நன்மதிப்பை முகநூலில் செய்யப்பட்ட விளம்பரங்கள் மிகைத்துவிட்டது. அவசியம் இல்லாத இடங்களில் கூட சேவை என்ற பெயரில் வலிய சென்று திணித்தது போன்ற ஒரு தோற்றத்தை பொதுத்தளங்களில் உண்டாக்கிவிட்டது. முஸ்லிம்கள் கவனம் செலுத்தவேண்டியது இந்த அடிப்படையான களப்பணிகளில் மட்டும் அல்ல.
இனி புயல் வெள்ளம் வறட்சி போன்ற பேரிடர்கள் தவிர்க்க இயலாதது என்ற நிலைக்கு இந்த பூமியை கொண்டுவந்து நிறுத்திவிட்டனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. தமிழக கடற்கரை மாவட்டங்கள் தான் இனி அதிகமான பாதிப்புகளை சந்திக்கப் போகின்றன.
இதன் காரணமாகத் தான் மத்திய மாநில அரசுகள் பேரிடர் மேலாண்மைப் பணிகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்குகின்றனர்
மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதி ஆகிய இரண்டும் சேர்ந்து இந்த ஆண்டு ஏறக்குறைய இரண்டாயிரம் கோடி ரூபாயை தமிழகத்தில் ஏற்படும் புயல் வெள்ளம் தொடர்பான பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளனர்.
இதல்லாமல் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) போன்ற சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவி சென்னையின் புயல் வெள்ள பாதுகாப்பிற்காக கோரப்பட்டுள்ளது.
நமது சொந்த பொருளாதாராத்தை இந்தப்பணிகளுக்கு செலவழிப்பது நன்மையான காரியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கான தேவைகள் தமிழகத்தில் இல்லை என்பதை அறிவுள்ள சமூகம் புரிந்து கொள்ளும்.
மட்டுமல்ல முதல்வர் முதல் தலையாரி (கிராம உதவியாளர்) வரை ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இன்னும் உள்ளாட்சி அமைப்புகளும் பேரிடர் மேலாண்மையில் ஈடுபடுகின்றன. அதனால் முன்னேற்பாடுகள் செய்யப்படாத இடங்களில் மட்டுமே தன்னார்வ களப்பணியாளர்கள் தேவை என்பதையும் தயவு கூர்ந்து சமுதாய அமைப்புகள் உணர வேண்டும். (எதிர்பாராத இடர்பாடுகள் ஏற்படும் இடங்கள் தவிர்த்து) முஸ்லிம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பொறுப்புகள் காத்துக்கிடக்கின்றன. புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றங்கள், மழைக்காடுகள் அழிக்கப்படுவது,நீராதாரங்களை நாசப்படுத்துவது, நிலத்தடி நீரை உறிஞ்சி கழிவு நீராக மாற்றுவது,பிளாஸ்டிக் மற்றும் இரசாயன கழிவுகளை கடலில் கொட்டுவது போன்று இந்த பூமிக்கு உலகளவில் உண்டாக்கப்படும் அழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தப் பேரழிவுகள் தொடர்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அதேநேரம் நாடுகளின் வளர்ச்சிக்கான மாற்று வழிகளை முன்னிறுத்த வேண்டும்.அதற்கான நுண்ணறிவுமிக்க சூழலியல் விஞ்ஞானிகளாக நமது இளைஞர்களை மாணவர்களை உருவாக்குவது தான் மிகசிறந்த பேரிடர் மேலாண்மைப் பணி.
அமைப்பும் ஆண்டுதோறும் தகுதிமிக்க 25 மாணவர்களை தேர்வு செய்து அடுத்த 10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் குறித்த கொள்கை முடிவெடுக்கும் கீழ்கண்ட உலக நிறுவனங்களில் ஆளுமை செலுத்தும் விஞ்ஞானிளாக நீங்கள் உருவாக வேண்டும் என்ற இலக்கை கொடுத்து அதற்காக செலவழிக்க வேண்டும்.
பேரிடர் பணிகளுக்காக கையில் கோடிகளை வைத்துக் கொண்டு காத்திருக்கும் அரசின் வேலையை நம் தலையில் போட்டுக்கொள்ள வேண்டியத் தேவை இல்லை. ·
Earth System Governance Project (ESGP) ·
Fridays for Future & School strike for climate (FFF) ·
Global Green Growth Institute (GGGI) ·
Intergovernmental Panel on Climate Change (IPCC) ·
International Union for Conservation of Nature (IUCN) ·
United Nations Environment Programme (UNEP) ·
European Environment Agency (EEA) ·
Partnerships in Environmental Management for the Seas of East Asia (PEMSEA)
இந்த நிறுவனங்களில் தற்போது பணியாற்றிவரும் விஞ்ஞானிகள் அனைவரும் பூமியின் இயற்கை அழகில் மயங்கியவர்கள். அதோடு மனித சமூகத்தின் இருப்பின் மீது அக்கறையுடையவர்கள் அவ்வளவுதான். அதற்காகத் தான் பூமியை பாதுகாக்க போராடுகிறார்கள். ஆனால் முஸ்லிம் அமைப்புகளோடு சித்தாந்த தொடர்புடைய, நிவர் புயல் பேரிடர் பணிகளில் தன்முனைப்போடு இன்று களத்தில் நிற்கும் இளைஞர்கள் சூழலியல் விஞ்ஞானிகளாக உருவானால் பூமியை அல்லாஹ்வின் அமானிதமாக கருதுவார்கள். பூமியின் சமநிலையை பாதுகாத்து அதை வளப்படுத்தி அடுத்த தலைமுறையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கும் இறைவனுடைய பிரதிநிதிகள் நாங்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கும்.
இவர்கள் அதிகரித்து வரும் புயல் வெள்ளம் வெப்பம் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படுவதை குறைக்கும் அசாதாரன முயற்சியில் ஈடுபடுவார்கள்.மேலும் கரையோர நாடுகள் கடலில் மூல்குவதையும் ஏழை நாடுகள் வறுமையில் தள்ளப்படும் பாதிப்புகளையும் குறைப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரே ஒரு சகோதரனை உருவாக்க முயற்சிப்போம். உலக மக்கள் அனைவரும் அவரை நேசிப்பார்கள். இல்லை இல்லை அவரை இயக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை நேசிப்பார்கள். இதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் வேறெதுவும் இல்லை.
Tags: கட்டுரை