மண்ணின் ரசிகன்.... யாசிர் அரபாத் ஹசனி,
இயற்கை தத்தெடுத்த அழகிய கிராமமது! பார்வைகளைப் பற்றிக் கொள்ளுமளவிற்குப் பசுமைகள் போர்த்திய கிராமம். விண்ணுக்கு ஏணிகளாய் பனை மரங்களும், தென்னை மரங்களும் சோப்பில் நட்டு வைத்த ஊசிபோல் அழகழகாய் காட்சியளிக்கின்றன.
தினந்தோறும் கதிரவன் காலை எழுவதால்! அசதியில் உறங்கினாலும் உறங்கிவிடும். ஆனால், அதிகாலை சூரியனின் ஒளி பூமியைத் தொட்டு முகம் பார்க்கும் முன்னெழுந்து விவசாயத்திற்குச் சென்று விடுவது இந்த கிராமவாசிகளின் அன்றாட வழக்கங்களில் ஒன்று.
ராஜாவும்,அன்பும் வகுப்புத் தோழர்கள் என்பதால், வண்டி பூட்டியது போல் எப்போதும் கை கோர்த்து ஊரில் வலம் வருவார்கள்! இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஒரே மண்ணில் விளையாடியவர்கள்!.
கிராமம் அவ்வளவாக ராஜாவிற்குப் பிடிக்காது... அவன் ஆசைப் போல் பெரிய சம்பளத்தில் சென்னையில் வேலைக்குச் சேர்ந்தான். சினிமாவில் வரும் காட்சிகள் போல் ! நொடிக்கு, நொடி ராஜாவின் வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன... "ஊர் மக்கள் மூக்கில் விரல் வைத்துப் பார்க்குமளவிற்குப் பெரிய வீட்டைக் கட்டி அழகுபடுத்தினான்". "ஊர் மக்களின் கண்கள் ஈக்கள் போல் அந்த வீட்டையே மொய்த்தன. " "
அவன் பணி செய்யும் கம்பேனி அவனுக்கு கார் ஒன்றை கொடுத்து அவனின் பெருமைக்கு பெட்ரோல் ஊற்றி வேகத்தை அதிகப்படுத்தியது". பெயருக்கு ஏற்றால் போல், டிப் டாப்பாக டிரெஸ் அணிந்து ராஜா ஊர் திரும்பும் நேரமெல்லாம்! ஊர் மக்களின் கண்ணெல்லாம் பிள்ளை மேல்தான் விழுந்து விட்டது என்று கருதி, காய்ந்த மிளகாய்களை வைத்து சுத்திப் போடுவது வழக்கம். பணக்காரத் திமிர் பார்வையில் ஊர் மக்களை ராஜாவின் அம்மா.. எரித்துவிடுவாள். "
அவனது வேலையும், சம்பளமும் தலைக் கால் புரியாமல் ருத்ரதாண்டவம் ஆடச் சொல்ல.. அவனும் அதற்கேற்ப ஆடினான்".....
"தன் மகனின் நண்பனல்லவா ராஜா ! ஜெட் வேகத்தில் நகரும் ராஜாவின் வாழ்வும், ஆமை போன்று நகரும் அன்பின் வாழ்விற்கும் வானம், பூமிக்கான வித்தியாசமாகத் தெரிந்தது அன்பின் அப்பாவிற்கு". ராஜாவின் கார், அவனின் ஆடை, அவனின் பேச்சு... அன்பின் அப்பாவிற்குக் கண்ணில் விழுந்தச் சீயக்காய் போன்று தினந்தோறும் உறுத்தத் தொடங்கின!
"அன்பின் அப்பாவின் தொழில் விவசாயம் என்றாலும், விவசாயம் தன்னோடு போகட்டுமென்று, விவசாயத்தின் மீது வெறுப்புகளை உமிழ்ந்து தன் மகனைப் பட்டணத்தில் படிக்க வைத்தார்". "
ராஜா போன்று, அன்பும் நன்கு படிக்கக் கூடியவன்".. நகரம் சென்று வேலை செய்து கார்,பங்களா என்று வாழ்வானென்ற அவரது எதிர் பார்ப்பில், அன்பின் முடிவு இடியாய் விழுந்தது. "அன்பும் , ராஜா போலேவேத்தான் படித்திருக்கின்றான். நல்ல திறமையானவன்... எடுத்த காரியத்தை அழகாக முடிப்பவன்... படித்த வேலைக்குச் சென்றிருந்தால்! ராஜா போல், இவனும் காரில் வந்து இறங்கியிருப்பான்! மகனைப் பார்க்க ஊர்மக்கள் நம் வீட்டிற்கு முன் தேனீக்கள் போல் கூடியிருப்பார்கள். சொல் பேச்சைக் கேட்க மாற்றானென்று அன்பின் அப்பா, சாய்வு நாற்காலியில்.. பீடி இழுத்தவாறு புலம்பித் தீர்த்தார்".
"... அன்பென்று ...கோபத்துடன் அப்பாவின் குரல் ஒலித்தது ,... திடுக்கிட்டுத் திரும்பி பார்த்தான். ராஜா வந்திருக்கிறான் அவனைப் பார்த்தாயா? என்றது அவர் குரல். பார்த்தேனென்பதை அவன் முகம் கூறியது. அவனைப் போலே உன்னைப் பட்டணத்தில் வேலை செய்யத்தான் படிக்க வைத்தேன். இந்த கிராமத்தைக் கட்டி அழுதுகிட்டிருக்கே? என்று மீண்டும் கோபம் கொப்பளித்து அந்த குரல்.. எதிரொலித்தது". "நகரத்தில் இன்னொருத்தன் கிட்ட வேலை செய்வதை விட நமது கிராமத்தில், நமது இடத்தில் வேலை பார்ப்பதுதான் நமக்கான அடையாளமாக எண்ணுவதை தன் கொள்கையெனப் பதிவு செய்தான் அன்பு .. "தாய் மண்ணில் வேலை பார்ப்பது மகிழ்ச்சிகளை அள்ளிக் கொடுக்குமென்று உரமேற்றியக் கொள்கையை உறுதியாய் முன்வைத்தான்." " விவசாயம் அவனைப் போல், ஒரு நாள் என்னை உயர்த்துமென்று வயல் பக்கம் சென்றான் கம்பிரமாய் ". "கோட் சூட் போட்டு, பேனா கையில் வைத்துக் கொண்டு,ஏசி ரூமில் அன்பு உட்காருவதுதான் அப்பாவின் எதிர்பார்ப்பின் மூலமாக இருந்தது". "கலப்பை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றவுடன், அவரின் எதிர்பார்ப்பு நிலவில்லாத வானமாய் மாறிப் போனது". காலங்கள் பட்டங்களாய் பறந்தன.....
" படித்த படிப்பை முழுமையாக விவசாயத்தில் செலுத்த முடிவுகள் செய்து, அரசு காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றி விவசாயத்தில் முழுமூச்சாக இறங்கினான்”.
“நச்சு கலந்த உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கையான உரங்களை அவனே தயாரிக்கத் தொடங்கினான்.. அதற்கான மூலக்கூறுகளைத் தேடித் தேடிப் படித்தான்".
இயற்கையான உரங்களைத் தயாரித்து விற்பனை செய்து, அதன் மூலம் வருமானங்கள் குவியத் தொடங்கின. மாவட்டம் கடந்து நாடு முழுக்க இவனின் இயற்கை உரங்கள் பேச்சுப் பொருளாக மாறின.
அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை விதமான காய்கறிகளையும் பயிர் செய்யத் தொடங்கினான். " அன்பின் வீடு தேடி அருகிலிருக்கும் ஊரில் உள்ள மக்கள், வந்து வாங்கி செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்". "ராஜாவும் அவ்வப்போது விடுமுறையில் ஊர் திரும்பி, அன்பின் அப்பாவின் கோவத்திற்கு எரிவாய் நிரப்பிச் சென்று கொண்டிருந்தான்". வருடங்கள்... வான் மேகங்களாய்.. கரைந்துப் போய்ன.
"நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கியது....நாடே பொது முடக்கத்தில் முடங்கிப் போனது.. பெரிய நிறுவனங்கள் நிலை தடுமாறின. எந்தவொரு பரபரப்பில்லாமல் தன் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தான் அன்பு ". "வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால், சுற்றியுள்ள கிராம மக்கள் இவனை நாடி வரத் தொடங்கினார்கள். பொது முடக்கக் காலங்களில் இவனுடைய காய்கறிகளின் வியாபாரம் பன்மடங்காக உயர்ந்தது".
" மக்களின் தேவைகளை மனதில் வைத்து தன் உற்பத்திகளை அதிகப்படுத்தினான். மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை மனதில் வைத்து விலைகளைக் குறைத்துக் கொடுக்கலானான்".
"விவசாயம் மூலம் வருமானங்கள் பெருகியவுடன், அப்பாவின் நீண்ட நாள் ஆசையான கார் வாங்குவதை நிறைவேற்ற முடிவு செய்தான்"... சென்னை செல்ல இருக்கும் திட்டத்தை அப்பாவிடம் தெரிவித்தான்...
"சென்னைக்கா? ராஜா போல் வேலைக்குச் செல்ல போகிறாயா? என்று தனது ஏக்கங்களை கேள்விகளாக வெளிப்படுத்தினார்".
புதிய கார் வாங்கச் செல்வதாக அவன் செய்திக்கு வலு கூட்டினான். என்ன கார் வாங்க வா"! ஆச்சரியத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவனைப் பார்த்து எழுந்து நின்றார். "காய்ந்த மண்ணில் மழை பெய்ததுபோல் மனதில் சந்தோஷங்களின் மொக்குகள் விடத் தொடங்கின". "முகத்தில் பொங்கிய சந்தோஷங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்"... "விவசாயம் பார்க்கிற உன்னிடம் கார் வாங்க பணமேது? என்று விவசாயத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். "பல மாதங்கள் நாடே முடங்கிப் போனது மக்கள் வாழ்வாதாரம் இழந்து போனார்கள். ஆனால், நான் ரசிக்கும் மண் என்னைக் கைவிடவில்லை. விவசாயம்தான் தனக்கு கைகொடுத்தென்பதை அப்பா முன்பு முன்வைத்தான்". "தன்னிலை மறந்து, அன்பின் முகத்தைப் பார்க்க முடியாமல் பார்த்தார்". "
நாமும்தான் விவசாயம் செய்தோம்! அது குடும்பம் நடந்தவே சரியா போனது. இவன் என்னா? கார் வாங்க போறேன் என்கிறான் . நாம் தான் சரியா விவசாயம் செய்யவில்லையோயென்று? தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டார்." "நல்லவிதமாகச் சென்று வாவென்று மகனை வழியனுப்பி வைத்தார். மகனின் வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்தார்". "தன்னை அறியாமல் வடியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்"... தன் நண்பன் அழகனை அழைத்துக்கொண்டு, சென்னை நோக்கிப் புறப்பட்டான்.
சென்னை செல்லும் பஸ்ஸில் ரிஜிஸ்டர் செய்த சீட்டில் அமர்ந்து தலை சாய்த்தான். "அப்பா விவசாயத்தை வெறுக்கிறார். நானும் ராஜா போல் ஆடம்பரமான வாழ்வு வாழ அவர் ஆசை கொண்டிருக்கிறார். அவர் ஆசைளை நிறைவேற்றச் சரியான நேரமிது தான் என்பதையும் தன் மனதில் உள்ள கவலைகளை நண்பனிடம் கொட்டியவாறு பயணம் செய்தான்." "விவசாயத்தின் மீது அப்பாவின் வெறுப்பிற்கு சரியான காரணம் தெரியாமல் தூண்டிலில் சிக்கிய மீன்போல் துடித்தான்". " மண்ணின் உயிர் நாடி விவசாயம் மட்டும் தான். விவசாயம் இல்லையேல்! மண் மரணித்துப் போகுமோன்பதை அப்பா எப்போது புரிந்து கொள்ளப் போகிறார் என்பது? அன்பிற்கு விடைத் தெரியாத புதிராகவே இருந்தது". அப்பாவின் மனநிலை ஒருநாள் மாறும்... உன்னைத் தலைமேல் வைத்துக் கொண்டாட நேரம் வருமென்று ஆறுதல் வார்த்தைகளை நண்பன் தெரிவித்தான்.
"இருவரின் கலந்துரையாடல்களை காதில் கேளாமல் அமைதியாகச் சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து". அதிகாலை சூரியன் முகத்தைத் தட்டி இருவரையும் எழுப்பியது.. சென்னை வந்ததை உறுதிப்படுத்தி கண்டக்டர் அறிவிப்பு செய்தார்.. ஜன்னல் வழியே பார்த்து மறுபடியும் உறுதிப் படுத்திக் கொண்டு இருவரும் பஸ்ஸிலிருந்து கீழ் இறங்கி... ரெஸ்ட் ரூம் சென்று உடைகள் மாற்றி ..காலை டிஃபனை முடித்து விட்டு. " கார் ஷோரூம் சென்று தனக்குப் பிடித்தச் சாம்பல் நிறத்தில் கார் வாங்கினான்". "கடவுளை வேண்டிக்கிட்டு காரை ஸ்டார்ட் செய்து.. தனது ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள் நண்பர்கள் இருவரும்". திடீரென ..!.
காரை நிறுத்து..டா..! என்று கூச்சலிட்ட அழகன் சப்தம் கேட்டு..ஏதனேனும் பிரச்சினையோ! என்று காரை ஓரம் கட்டிவிட்டு என்னவென்று கேட்டான்.
பஸ்ஸ்டாப் பக்கம் கை நீட்டி .. அங்கு நிற்கும் ஒருவரைப் பார்த்து ராஜாபோல் உள்ளது என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினான். அங்கு நிற்பது ராஜா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவன் பக்கம் அன்பு நடக்கத் தொடங்கினான். பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தவன், அடிக்கடி பஸ் வரும் திசையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கார் வைத்திருக்கும் ராஜா ஏன் பஸ்ஸுக்காக காத்திருக்க வேண்டும் ? அவன் கார் ஏதேனும் விபத்தில் சிக்கிவிட்டதா! என்று எண்ணிலடங்கா கேள்விகள் இவனுக்குள் ஓடின. .அருகில் சென்று .. நலம் விசாரித்தவுடன்.. திடுக்கிட்டுப் போனான் ராஜா. சுதாரித்துக் கொண்டு இங்கு வந்த காரணத்தைக் கேட்டு தெரிந்துக் கொண்டான். இருவரும்..நலம் விசாரித்துக் கொண்டார்கள். இருவரும் பத்து நிமிடம் பேசிக்கொண்டார்கள்.. ஊருக்குச் செல்லதான் பஸ்ஸூக்காக வைட் செய்திருக்கான் என்பதைத் தெரிந்துக் கொண்டு ..ஊருக்குத் தான் செல்கிறோம் என்று கூறி அழைத்தான். இருவரும் கார் இருக்கும் திசை நோக்கி நடந்தார்கள் . இருவரும் வருவதைக் கண்ட அழகன் ... காரின் முன் பக்கத்திலிருந்து, பின் பக்கம் மாறினான். “ஓ கிட்ட கார் இருக்குமே எங்கே என்று அழகன் கேட்க,முறைத்தபடி பார்த்து கோபத்தைக் காட்டினான்’. "ராஜா ஏதோ பிரச்சனையின் கையில் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான் அன்பு". பல விஷயங்கள் புதிய காரில் பேசியக் கொண்டே... மீண்டும் ஊர் பக்கம் பயணத்தைத் தொடர்ந்தார்கள். "மூன்று நண்பர்களும் ஊர் வந்தடைந்தார்கள்". "அன்பின் கார் விட்டு வாசலில் நின்றவுடன், புதிய காரை வேடிக்கை பார்க்க மக்கள் சூழ்ந்து கொண்டார்கள்". "ராஜா இறங்கியதை கூட மக்கள் கவனிக்கக் கூடவில்லை."
"தன் வீட்டு வாசலில் மக்கள் கூட்டத்தைப் பார்த்த அன்பின் அப்பாவுக்கு ஆனந்தக் கண்ணீர் அவர் அறியாமல் மீண்டும் வந்தது". "மகன் சரியான பாதையில் சென்று சாதித்துவிட்டானென்று மனதுக்குள் மத்தாப்புகள் பூக்க ஆரம்பித்தன". "ராஜா இறங்கிப் போனதை கண்டு.. ராஜா ஏன் இவன் வண்டியில் வரவேண்டும் என்று அவரின் ஆழ் மனதில் கேள்விகள் எழத் தொடங்கின.தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு அன்பிடம் விடைத் தேடினார்". "கொரோனா நேரத்தில்...
அவன் கம்பேனியில் பிஸினஸ் குறைந்து, சம்பளமில்லாமல் போனதை தன்னிடம் கூறியவற்றை அப்பாவிடம் கூறினான்... குறிப்பாக.. "கொடுத்தக் காரை பிடுங்கிக் கொண்டு வேலையிலிருந்து அவன் நீக்கப் பட்டதையும், விவசாயம் செய்ய முடிவு செய்து ஊர் வந்திருக்கும் செய்தியையும் தெரிவித்தான்" .
" தரையில் விழுந்த மீனாய் ஒன்றும் சொல்ல முடியாமல் அப்பா தவித்தார்". "படிப்பு என்பது நமக்கான அறிவு மட்டும்தான் .. அதுதான் நம் வாழ்வைத் தீர்மானிக்கும் என்பது பொய்யன அப்பாவிற்குப் புரியவைத்தான்." "கொரணா போல் எந்த நோய்கள் வந்தாலும்... நமக்கு இந்த மண் கஞ்சி ஊற்றுமென்று வயலுக்குத் தண்ணீர் வைக்கச் சென்றான் அன்பு". எப்போதும் இந்த மண்ணின் ரசிகன் என்பதை பெருமையாக கூறுவேனென்றான்.. “அப்பா தன் தவறை உணர்ந்தும் எதும் சொல்லமுடியாமல் வாயடைத்து போனார்”.
"நானும் வயலுக்கு வருகிறேனென்று கூறிய அப்பாவை , ஓய்வு எடுங்கள்... நான் பார்த்துக் கொள்கிறேனென்று சிரித்துக் கொண்டே சென்றான்.
A.H.யாசிர் அரபாத் ஹசனி,
லால்பேட்டை,
கடலூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 971- 556258851
Mail id : Lptyasir@gmail
Tags: கட்டுரை
அருமை 👌
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு