Breaking News

கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்க! பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா

நிர்வாகி
0

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

மருந்து மாத்திரைகளுக்குப் பிறகு தங்களது கனிவான கவனிப்பால் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளைக் குணப்படுத்தி அவர்கள் வீடுதிரும்பக் காரணமாக இருந்தவர்கள் செவிலியர்கள்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு பக்கத்துணையாக இருந்து நோயாளிகளைக் காக்கும் செவிலியர்கள் தற்போது தங்களது உரிமைகளுக்காகப் போராடி வருகின்றார்கள்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும், தற்காலிக பணியில் இருக்கும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடிவரும் செவிலியர்களைத் தமிழக அரசு கண்டுங்காணாமல் இருப்பது வேதனையளிக்கிறது. கொரோனா பெருந்தோற்று காலத்தில் தங்களது உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவையாற்றிய முன்களப்பணியார்களில் செவிலியர்களின் பங்கு முதன்மையானது.

கொரோனா காலத்தில் செவிலியர்கள் செய்த சேவையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்றும் மேலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை நிரந்தமாக்கி அவர்களுக்கு பணிப்பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Tags: செய்திகள்

Share this