இதுவும் கடந்து போகும்…
இயல்பாகச் சென்று கொண்டிருந்த மக்களின் வாழ்க்கைகளில் திடீரென சில இடர்பாடுகள் ஏற்பட்டன... அதில் சில நெருக்கடிகளும் அடங்கிப் போய்ன!.. சில நெகிழ்ச்சிகளும் நீண்டுப் போய்ன! இதற்கெல்லாம் முன்னுரை எழுதி, தற்போது முடிவுரைக்குக் காத்திருக்கும் கொரோனா தொற்று முதன்மை காரணமாக இருக்கின்றது. சீனாவின் தவறான உணவு பழகங்ளால் 2019 _ ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற வைரஸ் உருவானது. இந்தத் தொற்று மெல்ல மெல்லத் தனது ஆக்டோபஸ் கைகளால் உலகை தன் கட்டுப்பாட்டறைக்குள் கொண்டுவந்தது.
ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மனிதன் செய்த தவறு கொரோனவாக உருமாற்றம் பெற்றுச் செல்லும் பாதையில் கிடைக்கும் மக்களையெல்லாம் கோரப் பிடியில் பிடித்துக் கொள்கிறது. நாம் சந்திக்கும் பிரச்சனைகள் நம் கரங்கள் செய்த வினைகள் பயிர்களாக வளர்ந்து நம் கண் முன் நிற்குமென்பதற்குக் கொரானா முன்னுதாரணம். இதைத் திருக் குர்ஆனும் கோடிட்டுக் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில் முழு வீரியம் பெற்று கொரோனா கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகள் போல் பார்க்கும் மக்களையெல்லாம் முட்டி சாய்த்தது. எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாதென்று மார்தட்டிக் கொள்ளும் உலக நாட்டாமை அமெரிக்கா ஏகாதிபத்தியமே கொரோனாவை விட்டு விடுபட முடியாமல் பாலைவன நடுப்பகுதியில் சிக்கியவன் போல் வழித் தேடி அங்குமிங்கும் ஓடியது.அன்பு, அரவணைப்பு பாசம் பரிவு இவைகளை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஓரம் வைத்து விட்டு உலகை வலம் வருகிறது கோரோனா!.
உலகத்தை உலுக்கிய கோரோனா தமிழகத்திலும் அதன் விஷத்தைக் கக்கத் துவங்கியது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, உலகம் முழுக்க பொது முடக்கங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன. இந்தியா உட்பட உலக நாடுகளில் அனைத்து வழிப்பாட்டு தளங்களும் மூடப்பட்டன. எதிர்பாராத புதிய தோற்று நோயால் மக்களின் அன்றாட வாழ்க்கை அலைகளில் சிக்கிய இலை போன்று செய்வதறியாமல் தடுமாறிப் போனது.
உலகமே காவல் துறை கட்டுப்பாட்டிற்குள் சென்றதால் ஐந்து வேளை தொழுகை, வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை ஏதும் நடைபெறாமல் பள்ளிவாசல் வெறிச்சோடி காய்ந்த ரோஜா போல் மனமில்லாமல் போனது. கோயில்களில் பூஜைகள் இல்லாமல் நடைகள் சாத்தப்பட்டன..சர்ச்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடை பெறாமல் நிசப்த்தம் காணப்பட்டன.. இஸ்லாமிய மக்களுக்குச் சந்தோஷங்களை அள்ளிக் கொண்டு வரும் ரமலான் மாதம். ஆனால்,2020 -ஆம் ஆண்டு ரமலானில் பள்ளிவாசலில் இரவு சிறப்புத் தராவீஹ் தொழுகை நடை பெறவில்லை. இந்த வருடம் வழக்கமான ரமலானாக இல்லாமல் சென்றது பல இஸ்லாமிய மக்களுக்கு வாடாத வருத்தங்களை மனதில் ஆணி அடித்து மாட்டிவிட்டது போலானது.
கொரோன தொற்றுச் சந்தேகங்களின் காரணமாக ஊரின் சில தெருக்கள் காவல்துறையால் அடைக்கப்பட்டன. அண்டை வீட்டுக்காரரையும் அன்புகளைச் சுருட்டி மடித்து பீரோவில் வைக்கத் தூண்டியது கொரோனா. முகம் பார்த்துப் புன்னகை செய்வது,கை குலுக்கி நலம் விசாரிப்பது,உதவிக் கரம் நீட்டுதல் மொத்தத்தில் உலகில் மனிதத்தை மறிக்க செய்தது இந்தத் தொற்று. மரணித்தவர்களுக்குகான இறுதிச் சடங்குகள் ஒவ்வொரு மதங்களுக்கும் வேறுபடுகின்றன. மகன்கள் அல்லது சொந்த பந்தங்கள் இறுதிச் சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்வது வழக்கம். மத வழக்கங்களையெல்லாம் தூரத் தூக்கிப் போட்டு பல மக்களை அனாதை பிணங்களாக அடக்கம் செய்தது கொரோனா.
கடினமான சூழ்நிலைகளிலும் மனிதம் கருகாமலிருக்க, சொந்த பந்தங்கள் ஓடி ஒழிந்து கொண்டாலும் அரசு அனுமதிப் பெற்று தமுமுக, SDPI போன்ற பல தன்னார்வலர் அமைப்புகள் ஜாதி,மதம் பாராமல் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் மத வழக்கப்படி அடக்கம் செய்த நிகழ்வுகளை நாளிதழ்கள் முதன்மைச் செய்திகளாகப் பதிவு செய்தன.
இந்த நோயின் தாக்கங்களால் உலகம் முழுவதும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாட்டில் பணி செய்யும் பலருக்கும் தங்களது வாழ்க்கையை அமாவாசை இரவு போன்று இருள் சூழத் தொடங்கியதோ! என்ற எண்ணவோட்டங்கள் பயங்கள் கலந்து ஓடத் தொடங்கியன. அத்தனை நாடுகளும் காலவரையற்ற பொது முடக்கங்களை அறிவிக்கத் தொடங்கின. ஐக்கிய அரபு அமிரகத்திலும் பொது முடக்கம் அமலுக்கு வந்தது.
வருமானங்கள் இல்லாமல் வணிகம் சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்கள் இப்படியாகப் பல சிறு தொழில்கள் பொது முடக்கத்தில் நஷ்டங்களைச் சந்திக்கத் தொடங்கின. இதனால், தங்களிடம் பணி புரியும் மக்களின் ஊதியங்களைப் பல நிறுவனங்கள் குறைத்தன. மறு அறிவிப்பு வரும் வரை ஊதியமில்லா விடுமுறையில் விடுதியில் தங்க அறிவிப்புகள் அறிக்கைகளாகப் பறந்தன. சில நிறுவனங்கள் எந்த முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்தன. விடுமுறைக்காகச் சொந்த நாட்டிற்குச் சென்றவர்களையும் பணி நீக்கம் செய்தன. இப்படியாக, அயல்நாட்டில் வாழும் மக்களின் நிலைகள் பிடிமானமில்லாமல் கயிற்றில் நடப்பது போன்றாக மாறிப்போயின. இது ஒரு பக்கம் வலியாக இருந்த போதும், வேலையின்மை காரணமாக சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆசைப்பட்டாலும், விமான நிலையங்களின் மூடல் பலருக்கும் பெரும் இடியாக மடியில் இறங்கியது. எத்தனையோ மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல், உணவில்லாமல் தவித்த தவிப்பு சொல்லில் அடங்காது.
உள்நாட்டில் வேலை கிடைக்காமல் சொந்த பந்தங்கள்,மனைவி,மக்கள் அனைவரையும் விட்டு, அயல் நாட்டில் வசித்து வந்த போதும் பணி, ஊதியம், தங்குமிடம், உணவு ஏதும் இல்லாமல் சாலைகளில் மற்றும் பேருந்து நிலையங்களில் சில மக்கள் உறங்கிய செய்திகளால் பலரது கண்ணங்களை இரத்தக் கண்ணீர்கள் பாதையாக்கிக் கொண்டன. தங்களது வேதனைகளைக் கூறி தங்களைச் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல பாதிக்கப்பட்ட மக்கள் காணொளிகளை வெளியிட்டு கோரிக்கைகளாக முன் வைத்தார்கள்..
அயல் நாடுகளில் சிக்கிய மக்களை தாய் நாட்டுக்கு அழைத்து வரும் பணியை அதிரடியாக அமீரக,சௌதி அரேபியா,கத்தார் காயிதே மில்லத் பேரவை உறுப்பினர்கள் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, அயல் நாடுகளில் சிக்கிய மக்களைத் தாய் நாடு திரும்ப வழிவகை செய்தனர். பல நாடுகளில் சிக்கித் தவித்த மக்களை நலமுடன் தாய்நாடு திரும்ப இந்த அமைப்பு வழிவகை செய்தது. இப்படியாக, மக்களின் நிம்மதிகளை முழுவதுமாக சுரண்டி எடுத்தது கொரானா. தலைவலி, காய்ச்சலென்று சின்ன, சின்ன உடல் உபாதைகளுக்காக மருத்துவ மனை நிரம்பி வழிவதை நாம் அன்றாடம் காணும் காட்சிகளில் ஒன்று. ஆனால், பொது முடக்கம் அறிவித்த நாள் முதல் மருத்துவமனைகள் மூடப்பட்டதால் இயற்கையான முறையில் வீட்டில் மருத்துவம் பார்த்துப் பல நோய்கள் குணமடைந்தது என்பதுதான் யதார்த்தமான உண்மை. பாட்டி வைத்தியமும் நம் நோய் குணமாக எப்போதும் கை கொடுக்கும் என்பதை நம் பொதுப் புத்திக்குச் சாட்டையால் அடித்துப் பதியச் செய்து விட்டது இந்த கொரானா தொற்று கர்ப்பமான நாள் முதல், குழந்தை பிறக்கும்வரை ஒவ்வொரு மாதமும் ஸ்கேன் எடுக்கவும், மாத்திரைகள் சாப்பிடவும் பல ஆண்டுகளாக மருத்துவர்களால் பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அறிவுரைகளை முழுமையாகப் பின்பற்றும் கர்ப்பிணிகளுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லாமல் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைகள் மக்கள் மூளைக்குள் பசை வைத்து ஒட்டப்பட்டுள்ளன.
அதே போல், இயற்கையான முறையில் குழந்தை பிறப்பு என்பது கின்னஸ் சாதனையில் இணைந்து விட்டதோ! என்ற சந்தேகம் எழுமளவிற்கு அறுவைசிகிச்சையில் அதிகமாகக் குழந்தைகள் பிறந்தன... இந்த நிகழ்வுகள் அனைத்தையும் தலைகீழ் மாற்றிய பெருமை கொரோனாவை மட்டுமே சாரும். ஏனெனில், பொது முடக்கம் தருணங்களில் கர்ப்பமான பெண்கள் மாத, மாதம் டெஸ்ட் என்ற பெயரில் மருத்துவமனைகளுக்குச் செல்லவில்லை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஸ்கேன் எடுக்கவில்லை. முதல் மாதம் எழுதிய மருந்து,மாத்திரைகள் நான்கு, ஐந்து மாதங்கள் சாப்பிட்ட அறிய நிகழ்வுகள் நடந்தேறின. அறுவைசிகிச்சைகளின்றி பல மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் அழுகைகள் கேட்டன. இப்படியாக, சின்ன, சின்ன உபாதைகளுக்கு மருத்துவமனை அவசியமில்லை. கத்தியில்லாமல் குழந்தை பிறக்க நூறு சதவீதம் சாத்திய கூறுகள் உள்ளன என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நோய் தொற்றிவிடும் என்று பயத்தில் நம்மை நெருங்கப் பயந்த சமயங்களில் தனது குடும்பம், தனது வாழ்க்கை எதுவும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலன் காப்பதே முதல் கடமையென்று முன்வந்து தன் கடமைகளைச் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.. அனைவருக்கும் நாம் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.
நம் வீட்டின் அருகிலிருக்கும் மளிகைக் கடைகளில் பொருட்கள் வாங்காமல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கினோம். ஆனால் பொது முடக்ககளில் நம் வீட்டுப் பக்கம் இருக்கும் மளிகைக் கடைகளே நமக்கு உதவிக் கரம் நீட்டின.நம் அன்றாட தேவைகளுக்கு முகம் தெரியாத மனிதர்களிடம் பொருட்கள் வாங்காமல் நம் அருகில் இருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்கும் வழக்கங்களை மீண்டும் உயிர் பெறச் செய்வோம்.
வாழ்வு முழுவதும் பேணக்கூடிய பல விஷயங்களை நமக்கு இந்த நோய் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது... இப்படியாகத் தேள் போன்று கொரணா கொத்தினாலும் சில இடங்களில் தேன் போன்று சொட்டி மறைந்த பழைய பண்டைய மரபுவழிகளை அடையாளப்படுத்தியுள்ளது என்பதும் உண்மை. தே(ள்)ன் போல் கொ(சொ)ட்டிய கொரோனா காற்றுத் தந்த பாடங்களை மனதில் வைத்து நாம் நம்மை மாற்றிக்கொள்ளத் தயாராக வேண்டும்.
கொரோனா போன்ற தோற்று நோயை மனிதச் சமூகம் இப்போதுதான் கண்டுள்ளது.இது பலருடைய வாழ்வில் பல மாற்றங்களின் தடங்களை விட்டுச் செல்கிறது. இதை வைத்து நாம் மனம் தளர்ந்து விடக் கூடாது இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் நம் வாழ்வின் அடுத்த கட்டங்களை நோக்கிப் பயணிக்க தயாராகுவோம்.
இந்த ஆண்டில் இழந்தவைகள் இழந்ததாக இருக்கட்டும்.இனி புது மனிதர்களாக 2021 ஆம் ஆண்டில் நுழைவோம்.இனிவரும் காலங்களில் நோயில்லா ஆரோக்கியமான வாழ்வை உலக மக்கள் வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.
A.H. யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை .
கடலூர் மாவட்டம்,
தமிழ் நாடு.
தொடர்புக்கு :0556258851
Tags: கட்டுரை