Breaking News

திமுக சிறுபான்மை அணி மாநாடும் முஸ்லிம்களின் விமர்சனங்களும். : DR KVS.ஹபீப் முஹம்மத்.

நிர்வாகி
0

06.01.2021 அன்று சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் திமுக சிறுபான்மையினர் அணி மாநாடு நடைபெற்றது. அதில் உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் கண்ணியத்துக்குரிய பேராசிரியர் கே எம் காதர் முஹியத்தின் அவர்களின் பேச்சு பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன .

எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால் விமர்சனம் எப்படி செய்ய வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். விமர்சனம் செய்யப்படுபவரின் வயது, கண்ணியம், அவர் வகிக்கும் பதவி, அவர் செய்த தியாகங்கள் ,அவரது முந்தைய வரலாறு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் விமர்சனம்,அறிவு விவேகம் அழகிய சொற்கள் (குர்ஆன் 16 : 125 )ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர் அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் இவை எதுவுமே கடைப்பிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.அவை விமர்சனங்கள் அல்ல. மாறாக பழிப்புரைகள், வெறுப்புரைகள், வசைபாடுதல் ஆகியவற்றின் தொகுப்பாக உள்ளன.

ஒருவரின் குறையை சுட்டிக் காட்ட விரும்பினால் அவருக்கு நேரடியாகக் கடிதம் எழுதலாம். அல்லது அவரைச் சந்திக்கலாம் .அல்லது அவர் சார்ந்திருக்கும் அமைப்பில் உள்ளவர்கள் மூலமாக அவருக்கு தெரியப்படுத்தலாம். இதனை விடுத்து பகிரங்கமாக இழிவு படுத்தும் இவர்களை வாய்மையான எண்ணம் கொண்டவர்களாக் கருதமுடியாது .

பேராசிரியர் அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயப் பணியில் இருப்பவர் .திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியராக கணிசமான ஊதியத்தை பெற்றுக்கொண்டு இருந்தவர். தேர்தலில் நிற்பதற்காக ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவர். இன்று குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருபவர். எளிமை, நேர்மை மிக்கவர். இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் வாய்க்கு வந்த படி விமர்சனம் செய்வது பண்பாடற்ற செயலாகும் .

தமிழக முஸ்லிம்களிடையே இதுபோன்ற செயல்களை அதாவது ஆலிம்கள், மார்க்க அறிஞர்கள் ,மாற்று க்கருத்து கொண்டவர்களை தரமற்று விமர்சிக்கும் போக்கை 30 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்ததில்லை. தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்ற சிந்தனை இதற்கு ஒரு காரணமாகும் .அதேபோல பண்பாடாக விமர்சனம் செய்வது எப்படி என்பதை அறியாததும் ஒரு காரணமாகும்.

இந்நிலை மாற வேண்டும். விமர்சனங்கள் கண்ணியமாக அமைய வேண்டும்.

DR KVS. ஹபீப் முஹம்மத்

Tags: செய்திகள்

Share this