சமுதாய கண்மணிகளே.... எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் மடல்
அன்பார்ந்த சமுதாய கண்மணிகளே....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நீண்ட இடைவெளிக்குப் பின், தங்களனைவரையும் இம்மடல் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி செய்து கொண்ட 2021 சட்டமன்றத் தேர்தல் தொகுதி பகிர்வு உடன்பாடு குறித்து, பல்வேறு கருத்துகளை பதிவுச் செய்து உள்ளீர்கள். அத்தனையும் நான் உள்வாங்கி கொண்டேன். நமக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டு இடங்கள் நமது அமைப்பு மற்றும் கட்சியின் பலத்திற்கு இணையாக அமையவில்லை என்ற உங்கள் ஆதங்கம் நியாயமானது. அதுவே தலைமையின் எண்ணமும் கூட. ஆனால் 2021ல் நாம் சந்திக்கும் சட்டமன்றத் தேர்தல் முன்பு நடைபெற்றது போன்ற தேர்தல் அல்ல.
தமிழகத்தில் சங்கிகளின் ஆதிக்கம் வெகுவாக வளர்ந்து விட்ட நிலையில் அவர்கள் எப்படியாவது ஆட்சி கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் சந்திக்கும் தேர்தல்.
நாம் வளர்ந்து விட கூடாது நாம் அதிகாரம் பெற்று விடக் கூடாது என்ற எண்ணம் சங்கிகளுக்கு மட்டும் அல்ல. துரோகிகளுக்கும் உண்டு. இந்த நிலையில் நாம் திமுக தலைமையுடன் முடிந்த அளவு கூடுதல் இடங்களுக்காக கடுமையாக வாதிட்டோம். ஆனால் இந்த 2 இடங்களை விட கூடுதலாக நாம் பெற இயலவில்லை. (இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று நமது சின்னத்தில் மற்றொன்று சூரியன் சின்னத்தில்). இந்த நிலையில் 2009ல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் உணர்ச்சி வசப்பட்டது போல் இப்போதும் உணர்ச்சி வசப்பட்டால் என்னவாகும் என்பதை சுயபரிசோதனை செய்து பாருங்கள். 2 சீட்டும் வேண்டாம். தார்மீக ஆதரவு மட்டும் கொடுப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் நடைபெறும் சமுதாய ரீதியான நிகழ்வுகளில் அரசியல் அதிகாரமற்ற நிலையில் நாம் மிக பலவீனமானமானவர்கள் ஆகிவிட நேரிடும்.
அரசியல் அதிகாரம் என்பது சமுதாய நலனுக்காக, என்பதால் தான் நாம் அரசியல் கட்சி தொடங்கினோம் என்பதை கவனத்தில் கொள்க. நமது இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமெனில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக நாம் உழைக்கவேண்டும். நமது அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை சங்கிமயமாக்கும் பாசிஸ்ட்களின் கனவு தகரும். இந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த இரண்டு இடங்களை அவை நமது பலத்திற்கு இணையாக இல்லையென்ற நிலையிலும், பெற்றுக் கொண்டோம்.
தவிர, முஸ்லிம்களை இந்நாட்டில் உரிமையற்றவர்களாக ஆக்க பாசிச பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றை எதிர்த்து இந்நாடே கொந்தளித்தது. கோடிக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். ஆயிரக்கணக்கான ஷாஹீன் பாக்கீகளில் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கூட, மாதக்கணக்கில் தங்கி மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.
அதனை ஒடுக்க வழியின்றி, காவல் துறை மற்றும் ராணுவத்தின் உதவியுடன் முஸ்லிம்கள் தலைநகர் டெல்லியில் வேட்டையிடப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இந்த அவலங்களுக்கு வித்திட்ட CAA சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற உதவிய அதிமுக, இக்கொடூர சட்டத்தை கொண்டு வந்த பாஜக, இதற்கு துணை நின்ற பாமக ஆகிய கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய தேர்தல் தான் ஏப்ரல் 6, 2021 தேர்தல். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் நம்மோடு தோளோடு தோள் நின்று குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு கொண்டு வந்த NPR ஐ ஏற்க மாட்டோம் என உறுதியாக அறிவித்தது திமுக என்பதையும் நாம் நினைவு கூரவேண்டும்.
எனவே, சமுதாயத்தின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றவும், தமிழகத்தை கலவரக்காடாக மாற்ற நினைக்கும் சங்பரிவார வெறுப்பு அரசியலை எதிர்ப்பதற்கும் களம் அமைக்கும் இந்த தேர்தலில், மனமாச்சரியங்களைத் தூர எறிந்துவிட்டு, உற்சாகத்துடனும் ,உத்வேகத்துடனும் களத்திற்கு வாருங்கள். நமது அணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் நிலையில் மேலும் வீரியமாக பட்டிதொட்டியெங்கும் நமது அமைப்பை கட்டமைத்து மேலும் சிறப்பாக வலுப்படுத்தி சமுதாயத்தின் உரிமைகளை தமிழக மக்களின் உரிமைகளை இன்ஷா அல்லாஹ் நிலை நாட்டுவோம்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
Tags: கட்டுரை