முஸ்லிம் லீக் துணைத் தலைவர் ஷபீக்குர் ரஹ்மான் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் மௌலானா மௌலவி தளபதி ஷபீக்குர் ரஹ்மான் மன்பஈ இன்று உடல்நலக் குறைவால் கடலூர் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து கடும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
முஸ்லிம் லீகின் பிதாமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களால் “தளபதி” என்று அழைக்கப்பட்டு கடந்த 60 ஆண்டுகளைத் தாண்டி முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட அலங்கரித்து, சமீபத்தில் தனது 60 ஆண்டு பொதுவாழ்க்கை பொன்விழா கண்டவர் ஷபீக்குர் ரஹ்மான்.
சிறந்த மார்க்க அறிஞரும், அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும் திகழ்ந்த தளபதி ஷபீக்குர் ரஹ்மான், தனது கடலூர் மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் முஸ்லிம் லீக் இளைஞர்களுக்கும் ஒரு ஆசானாக, முன்மாதிரி அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். முஸ்லிம் லீகை தனது மூச்சாகக் கொண்டு செயல்பட்ட இவரது மரணம், முஸ்லிம் லீகின் நிறுவன நாளான இன்று (மார்ச் 10) நிகழ்ந்திருப்பதும் ஒரு அதிசயமே. 70 வயதைக் கடந்தும், கட்டிளங்காளைப் போன்று அரசியல் களத்தில் அவர் பயணிப்பதைக் கண்டு நான் பலமுறை வியப்புற்றுள்ளேன். அண்மையில் வெளியிடப்பட்ட அன்னாரது 60 ஆண்டு மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி மகிழ்ந்தேன். எல்லாம்வல்ல ஏக இறைவன் தளபதி ஷபீக்குர் ரஹ்மானின் பிழைகளைப் பொருத்து, அன்னாரது மறுமை வாழ்க்கையைப் பிரகாசமாக்க பிரார்த்திப்பதுடன், அன்னாரை இழந்து வாடும் முஸ்லிம் லீகினர், குடும்பத்தார், குறிப்பாக அன்னாரது மூத்த மகனார் மௌலானா அப்துர் ரஹ்மான் ரப்பானி ஆகியோருக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Tags: செய்திகள்