Breaking News

நாகை தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றி! மு.தமிமுன் அன்சாரி MLA.,

நிர்வாகி
0

அன்புக்குரிய நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு...

இறையருள் சூழ, மே தின நல்வாழ்த்துக்களோடு இம்மடல் மூலம் உங்களை சந்திக்கிறேன். கடந்த 2016, மே மாதம் உங்கள் ஆதரவால் வெற்றிப் பெற்று, ஐந்தாண்டு காலம் பணியாற்றிவிட்டு, இன்று மே-1ஆம் தேதியுடன் எனது பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெறுகிறது.

கடந்த ஐந்தாண்டு காலம் உங்களோடு‌ இணைந்து நான் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை! எனது சட்டமன்ற அலுவலகத்தில் வீண் கூட்டங்களை அண்டவிடாமல், மக்கள் எளிதாக அணுகும் சூழலை ஏற்படுத்தி, மக்கள் சந்திப்புகளை நடத்தி வந்தேன்.

4 அலுவலர்களை நியமித்து சாமானிய மக்கள் MLA-வை அணுகுவதில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். கோரிக்கை மனுக்கள் யாவும் கணிணி மயப்படுத்தப்பட்டு, அதன் மீதான நடவடிக்கைகள் அவ்வப்போது கடிதம் மற்றும் வாட்ஸ் அப் வழியாக மனுதாரர்களுக்கு தெரியப்படுத்தப்படும் நவீன தொடர்பு முறை இங்கு மட்டும்தான், முறையாக கையாளப்பட்டது என பலரும் பாராட்டினர்.

கடமையுணர்வோடு நான் செய்திட்ட சில பணிகளை இங்கே நினைவு கூறுகிறேன்.

🔹நாகைக்கு புதிய மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது.

🔹பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரியை வாடகை கட்டிடத்தில் இருந்து மாற்றி, ECR சாலையில் நிரந்தர கட்டிடத்தில் செயல்பட வைத்தது.

🔹திருப்பயத்தாங்குடியில் நர்சிங் கல்லூரி கொண்டு வந்தது

🔹நாகை அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை ஏற்படுத்தி, MRI ஸ்கேன் போன்ற வசதிகளுடன், புது கட்டிடங்களுடன் அதன் செயல்பாடுகளை தரம் உயர்த்தியது.

🔹நம்பியார் நகரில் மீன்பிடி இறங்குதளம் கொண்டு வந்தது

🔹நாகூர் வெட்டாற்றின் குறுக்கே பாதுகாப்பான மீன்பிடி படகு போக்குவரத்துக்கு வடக்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடு செய்தது.

🔹அரசு பள்ளிக்கூடங்களுக்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்ததுடன், பள்ளிக்கூடங்களின் தர அமைப்பை உயர்த்தி கொடுத்தது.

🔹நாகை அக்கரைக்குளம், தாமரைக்குளம் ஆகியவற்றை சீரமைத்தது.

🔹நாகையின் புராதான கொடிமரத்து பூங்காவை கட்டமைத்தது.

🔹கோட்டை வாசல் படி அருகே புதிய பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கியது.

🔹தொகுதியின் பல இடங்களில் பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்களை திறந்தது.

🔹குடிமராமத்து பணிகளில் அக்கறை எடுத்து ஆறு, ஏரி, குளம், கால்வாய்கள் தூர்வார சிறப்பு கவனம் எடுத்தது.

🔹நாகூர் தர்கா குளம் சீரமைப்பு.

🔹திருமருகலுக்கு தனி காவல் நிலையம்.

🔹நாகை மற்றும் திருமருகல் தீயணைப்பு துறைக்கு புதிய கட்டிடங்கள்.

🔹திருமருகல் அரசு மருத்துவமனைக்கு புது ஆம்புலன்ஸ் வசதி மற்றும் புதிய கட்டிட வசதிகள்.

🔹நாகூர் யாத்ரீகர்கள் தங்கிட புதிய தங்குமிடம்.

🔹16 சிறிய-பெரிய பாலங்கள் கட்டியது.

🔹திட்டச்சேரி பேரூராட்சிக்கு 1 கோடி மதிப்பில் திட்டங்களை வழங்கியது.

🔹மத்திய- மாநில அரசுகளின் திட்ட உதவிகளை பெற்று பரவலான சாலை வசதிகளை மேம்படுத்தியது.

🔹நாகை-நாகூர் மக்களின் கூடுதல் மின் தேவையை பூர்த்தி செய்ய ECR அருகே புதிய துணை மின் நிலையம் அமைத்தது.

🔹திட்டச்சேரி பேரூராட்சியின் மின் தேவையை பூர்த்தி செய்ய நரிமணத்தில் துணை மின் நிலையம் அமைத்தது.

🔹நாகை-நாகூரில் குப்பைகளை பயனுள்ள முறையில் மாற்ற நவீன முறையில் நுண்ணுயிர் உரக்கிடங்குகளை அமைத்தது.

🔹MLA நிதியின் மூலமாக பரவலாக தண்ணீர் மேல்நிலை தொட்டிகள், பேருந்து நிழலகங்கள், பள்ளிக்கூட கட்டிடங்கள், ரேஷன் கடைகள், அங்கன்வாடி கட்டிடங்கள், கலையரங்குகள் கட்டியது. என எண்ணற்ற பணிகளை செய்திருக்கிறேன்.

இதற்கு துணை நின்ற மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட அமைச்சர் திரு. O.S.மணியன், நகராட்சி ஆணையர், பேரூராட்சி அலுவலர், நாகை, திருமருகல் யூனியன் அதிகாரிகள், இதர துறை சார்ந்த அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

நாகை, நாகூர் கடற்கரைகளை மேம்படுத்த கடைசி சட்டமன்ற கூட்டத் தொடரில் கூட கடைசியாக துணை கேள்வி எழுப்பினேன். அது இப்போது ஆயத்த நிலைக்கு வந்து விரைவில் பணி தொடங்கப்பட உள்ளது.

எனது காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. சில பணிகளை அரசியல் நெருக்கடிகளாலும், போதிய சூழல் அமையாததாலும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. அவற்றில்..,

🔸நாகை துறைமுக மேம்பாடு

🔸நாகையில் சட்டக் கல்லூரியை அமைத்தல்

🔸நாகூரில் மகளிர் கல்லூரியை அமைத்தல்

🔸திருமருகலை தனி தாலுக்காவாக மாற்றுவது ஆகியன அதில் சிலவாகும்.

மிக முக்கியமாக நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் காரைக்கால் MARG துறைமுகத்தால் எழுந்த நிலக்கரி துகள்கள் மூலம் எழுந்த சூழலியல் பிரச்சனையை பெரும் மக்கள் திரள் போராட்டம் மூலம் வெளிப்படுத்தி, தற்போது அந்நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால் அந்த பிரச்சனை 95 சதவீதம் தீர்ந்திருக்கிறது.

கஜா புயல், நிவர் புயல், புரவி புயல்களின் போது இரவு பகலாக மக்களோடு கலந்து பணியாற்றியதை மறக்கவே முடியாது. கடந்தாண்டு கொரோனா தொற்றின் போது எதைப் பற்றியும் கவலை படாமல் தொகுதியை சுற்றி ஆய்வு மேற்கொண்ட போது தொகுதி மக்கள் அன்போடு கண்டித்ததையும் மறக்க முடியாது. இந்த நிலையில் ஒரு முக்கியமான சாதனையை குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த சட்டமன்றத்தில் அதிகமான முறை பேசிய முதல் 5 MLA-க்களில் நானும் ஒருவன். நாகையில் 15-வது சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான், இதுவரை நாகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களை விட அதிகமாக பேசிய பதிவுகள் மனநிறைவளிக்கிறது. இது தொகுதி மக்களுக்கு கிடைத்த பெருமையாகும்.

இதனால் இந்தியாவின் சிறந்த இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற விருதை பெற்றேன். இந்த விருதை தமிழகத்தில் பெற்ற முதல் MLA என்பதில் நீங்கள் யாவரும் மகிழ்ந்தீர்கள்.

இவையெல்லாம் இறைவன் அருளால் உங்கள் மூலமாக எனக்கு கிடைத்த வாய்ப்புகளாகும். சட்டமன்றத்தில் உரையாற்றுவது மட்டுமல்ல, பதாகை ஏந்துவது மூலமும், சபையின் வெளிப்புற அதிரடி நடவடிக்கைகளின் மூலமும் மக்கள் பிரச்சனையை கவனப்படுத்த முடியும் என்ற புதிய அரசியலை நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.

தந்தை பெரியார் படம் பொறித்த டி-சர்ட்டுடன் சென்று சட்ட சபையில் தமிழின-திராவிட இயக்க அவசியத்தை உணர்த்திய போது இதை தமிழகமே பாராட்டியது. அது உங்களுக்கு கிடைத்த பெருமையாகவே கருதினேன்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் அதிகாரிகளுக்கு இடையூறு செய்யாமல், சச்சரவுகளில் ஈடுபடாமல், கெட்டப்பெயர் எடுக்காமல், அதிருப்தியை பெறாமல், கண்ணியமாக பணியாற்றினேன் என பலரும் பாராட்டும் போது மன நிறைவளிக்கிறது.

அரசியல் ரீதியாக மாறுபடும் பாஜக சகோதரர்களின் நியாயமான கோரிக்கைகளையும் செய்து கொடுத்து அவர்களது பாராட்டுகளையும் பெற்று சார்பற்ற ஒருவனாகவே எனது தொகுதி பணிகளை கடந்து வந்துள்ளேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு, தலைமையயக பணிகளிலும் கவனம் செலுத்தி, தமிழகம் முழுக்க மக்கள் போராட்டங்களிலும் பங்கெடுத்து கொண்டு, மாதத்தில் சராசரியாக 15 நாட்கள் தொகுதியிலும் பணியாற்றியது என்பது சவாலான ஒரு காரியமாகும்.

அந்த வகையில் இப்பணிகளில் துணை நின்ற மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் , மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையிலான நிர்வாகிகள், அலுவலகத்தை நிர்வகித்த சம்பத், முரளி மற்றும் தம்ஜிதீன், அன்றைய அதிமுக தோழமை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக, காங்கிரஸ், CPM, CPI, மதிமுக, அம முக, விசிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டு இயக்கங்கள், வணிகர் அமைப்புகள், விவசாய பேரமைப்புகள், தொழில் சங்கங்கள், மீனவர் அமைப்புகள், ஆட்டோ - கார் ஒட்டுனர் சங்கங்கள், திராவிட- தமிழ் இயக்க தோழமைகள், உள்ளூர் சேவை சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள், ஊடகம் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் உள்ளிட்ட தொகுதியை சார்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நீதி, சகோதரத்துவ அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து மக்களின் நண்பராக செயல்பட்ட மன திருப்தியுடன் விடைப்பெறுகிறேன். இந்த நல்வாய்ப்பினை தந்த மஜக தலைமை நிர்வாகக் குழு மற்றும் முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மா அவர்களையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

என் பணி காலக்கட்டத்தில் யாருடைய மனமும் காயப்படும் படி நடந்திருந்தால் அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.

இறையருளால் எப்போதும் போன்ற துடிப்பான மக்கள் பணிகள் தொடரும்!

அன்புடன்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

01.05.2021

Tags: செய்திகள்

Share this