தமிழக முஸ்லிம்கள் கவனத்திற்கு... வெ.ஜீவகிரிதரன்
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ல் கணக்கெடுப்பு நடந்துள்ளதால் 2021-ல் கட்டாயம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
தமிழகத்தில் முன்னெப்போதும் விட இந்த ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சாதிவாரி கணக்கெடுப்பு நிகழும் என்பதே அதன் காரணம்.
1993-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கில் இட ஒதுக்கீடு எந்த நிலையிலும் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதே ஆண்டில்தான் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கு 18 சதமும், பழங்குடியினருக்கு 1 சதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதமுமாக மொத்தம் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
அத்துடன் நில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம் மூலமும், சட்டமன்றத் தீர்மானம் மூலமாகவும் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழகத்தின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதலும், அரசியல் சாசன பாதுகாப்பும் வழங்க வேண்டுமென குடியரசுத் தலைவர் மற்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியது.
குடியரசுத் தலைவர் சட்ட மசோதாவுக்கு தன் ஒப்புதலை வழங்கினார். அத்தோடு ஒன்றிய அரசும் இச்சட்டத்தை அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பட்டியலில் இணைத்து அதன் மூலம் இச்சட்டத்தை யாரும் நீதிமன்றத்தில் வழக்கிட்டு கேள்விக்குள்ளாக்காதவாறு பாதுகாத்தது. அதற்கென அரசியல் சாசனத்தை திருத்திட 76-வது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றியது.
ஆனாலும் அதற்கு முன்னரே தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை இன்றளவும் நிலுவையிலுள்ளன.
சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் கெய்க்வாட் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள 50 சத இட ஒதுக்கீட்டுக்கும் மேலாக 16 சத இட ஒதுக்கீடு மராட்டியர்களுக்கென அம்மாநில அரசால் தனியே வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசன விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கும் முரணானது எனக் கூறி உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. இதனால் தமிழ்நாட்டின் 69 சத இட ஒதுக்கீட்டுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 69 சதம் இட ஒதுக்கீடு அளித்ததற்கான நியாயத்தை உச்ச நீதிமன்றத்திலே விளக்க தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது.
எனவே இம்முறை 2021- மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி வாரி கணக்கெடுப்பாக அமையும்.
கடந்த 01.12.2020- ல் அன்றைய எடப்பாடி அரசு இதற்கென நீதியரசர்.குலசேகரன் அவர்களின் தலைமையிலான ஆணையத்தை அமைத்துள்ளது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சாத்தியப்பாடு, வழிமுறைகளை ஆய்வு செய்து இந்த ஆணையம் அறிக்கை அளிக்கும். அதைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும்.
இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன...
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு சாதி வாரியானது தானேயொழிய மத வாரியானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழக இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் முஸ்லிம்களின் தெக்கனி முஸ்லிம், தூதேகுலா, லப்பை, ராவுத்தர், மரைக்காயர், மாப்பிளா, அன்சர் ஆகிய பிரிவுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் ஒன்றிய அரசின் தமிழகத்துக்கான பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் அன்சர் பிரிவு- முஸ்லிம்களேயானாலும்- இடம் பெறவேயில்லை. மற்றவை மட்டுமே இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு 3.5 சதம் உள் ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. இது மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளின் கீழ் வரும் முஸ்லிம்களுக்கு மட்டுமேயான இட ஒதுக்கீடாகும்.
கணக்கெடுக்கின் போது இப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடாமல் வெறும் "முஸ்லிம்" எனக் குறிப்பிட்டீர்களானால் நீங்கள் இட ஒதுக்கீட்டுப் பலனைப் பெற இயலாது.
"முஸ்லிம்" என்பதை மட்டுமே குறிப்பிடுங்கள் என சிலர் தவறான வழிகாட்டுதலைத் தந்து கொண்டிருக்கின்றனர். அது இட ஒதுக்கீடு சட்டங்கள் குறித்த அறியாமையினால் இருக்கும். அல்லது முஸ்லிம்களுக்குள் சாதி இல்லை என நிறுவுவதற்காக இருக்கும். எதுவானாலும் சமூக நீதி அடிப்டையில் இட ஒதுக்கீடு கோரும் முஸ்லிம்களுக்கு இது பாதிப்பையே ஏற்படுத்தும்
இஸ்லாத்தில் சாதி இல்லை.
இஸ்லாம் மதமே இல்லை... அது ஒரு மார்க்கம் என்பதுதான் நிலைப்பாடு. ஆனாலும் இந்திய சட்டங்கள் இஸ்லாத்தை மதமாகவும், சமூகங்களையும், குலங்களையும் சாதிகளாகவே பார்க்கிறது. எனவே மதம் என்ற கேள்விக்கெதிரே "இஸ்லாம்" எனக் குறிப்பிடுவதோடு சாதி என்ற கேள்விக்கெதிரே உங்கள் சாதிப் பிரிவை - அதாவது சமூகப் பிரிவையும் தவறாமல் குறிப்பிடுங்கள். மதம் ... இஸ்லாம் சாதி .... தெக்கனி முஸ்லிம், தூதேகுலா, லப்பை, ராவுத்தர், மரைக்காயர், மாப்பிளா - இதில் உங்களுக்கானது ஏதேனும் ஒன்று. இதையே குறிப்பிடுங்கள்.
அப்போதுதான் அந்தந்த சமூகங்களுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டினைப் பெற இயலும். அது மட்டுமல்ல... தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கலைஞர் ஆட்சி தந்துள்ள 3.5 சத இட ஒதுக்கீட்டுக்கு நன்றி கூறும் அதே வேளையில், அதை குறைந்தபட்சம் 5 சதமாக உயர்த்திட வேண்டுமென்றும் நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கணக்கெடுப்பின் போது முறையாக உங்கள் சமூகப் பிரிவை குறிப்பிடும் போதுதான் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான மக்கள் தொகை
விகிதாச்சாரம் அரசுக்கும் தெரியும். நம்முடைய 5 சதவீத இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கும் அது வலு சேர்க்கும். கணக்கெடுப்பின் போது கவனமாக இருங்கள்.
-வெ.ஜீவகிரிதரன்
தமிழ்நாடு மாநிலச் செயலர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
Tags: சமுதாய செய்திகள்