Breaking News

ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்..!

நிர்வாகி
0

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்.

50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம். பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான். வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்.

50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்.

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்.

60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள். இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும். அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான். உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம். பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள். வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்.

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்.

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்.

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்.

*விரோதிகளை விலக்குங்கள், பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்.

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்.

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்.

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள். பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள். மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்.

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை சகோதரர்களே. மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது..

Tags: பயனுள்ள தகவல்

Share this