Breaking News

இனிய திசையில் இதயம் பேசுகிறதே! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ )

நிர்வாகி
0
உலக 'வாலெண்டின் டே' நாளான பெப்ரவரி 14 ந்தேதி அன்று அன்பை பரிமாறிக் கொள்ள இதயத்தினை அடையாளமாக தேர்ந்தெடுத்துள்ளது உங்களுக்குத் தெரியும். இரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க அறிவியல் நிபுணர் கேலன், 'இதயம் ஈரலுடன் இணைந்து வைரம் போல தோன்றுவதினை முதன் முதலில் தெரிவித்துள்ளார். வைரம் உடைந்து போனால் உருப்படியாகாது, அதேபோன்று தான் இதயமும் பழுதானால் உடல் இயங்காது. அப்படிப் பட்ட இதயத்தினை பாதுகாப்பதிற்காக உலக இதய நாள் செப்டம்பர் 29ந்தேதி கொண்டாடப் படுகிறது. அந்த இதயத்தினை எவ்வாறு பாதுகாப்பது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
உலகில் அபாயகரமான நோய் எது என்று கேட்டால் உடனே நீங்கள் கொரானா என்று தான் சொல்வீர்கள். ஆனால் உலகிலேயே அபாயகரமான நோய் இதய நோய் தான் என்று உலக சுகாதார மையம் சொல்கிறது. 2019ல் மட்டும் இதய நோயால் 90 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். அதிலும் 30 வயதிலிருந்து 70 வயதிற்குட்டபட்டவர்கள் 60 லட்சம் பேராம். அதில் சீன நாடு முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து இந்தியாவும், ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் உள்ளன. இதய நோயிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும் சமீப காலங்களில் கொரானா நோய் ஏற்பட்டு இதயத்திற்கு செல்லக்கூடிய ஆக்சிசன் குறைவாகுதலால் இதய நோயால் இறந்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆகவே தான் இதயத்தினை காப்பது ஒவ்வொருவரும் தனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் செய்யும் சிறந்தது சேவையாகும் என்றால் மிகையாகாது. இப்போது இதயத்தினை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் என்பதினை ஆராய்வோம்.
1) அமெரிக்கா சுகாதார மைய செயல்பாட்டின் அறிவுரைப் படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு பரிசோதனை செய்வது நல்லது என்று கூறுகின்றது. இந்தியாவின் Cardiology Society( இதய நோய் ஆராய்ச்சி மையம்) 2019ல் நடத்திய ஆய்வுப் படி நமது நாட்டில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தில் பாதிக்கபட்டுள்ளர் என்று கூறுகின்றது. அதில் 45 சதவீதம் கண்டுபிடிக்கமுடியாமலே போய் விடுகிறதாம். நீங்கள் கூட தெரிந்து இருப்பீர்கள், '30-35வயதில் ஒருவர் நோய் அறிகுறி இல்லாமல் இறந்து விட்டால் சொல்வீர்கள், மனுஷர் நல்லாத் தான் கல்லுமாதிரி இருந்தார் பொட்டின்று போய்ட்டாரென்று'. அப்படி இதய நோய் அறிகுறி இல்லாமலே கொன்று விடக்கூடிய ஒன்றாகும் அது ஒரு 'Silent Killer' என்று நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் Nieca Goldberg M.D சொல்கிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் Dr Joan H Tisch கூறும்போது இதய நோயால் பக்கவாதமும் ஏற்படுமென்கிறார்.
2) உடலில் ஏற்படும் 77 நோய்கள் மன அழுத்தத்தால் வரக்கூடியவை என்று அமெரிக்கா சவுத் நியூ கெமிஸ்ப்பியர் பல்கலைக் கழக மனோதத்துவ நிபுணர் நிகி மார்டினஸ் சொல்கிறார். உங்கள் வயது உயர, உயர உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன் இளமை ஒருபோதும் திரும்பக் கிடைப்பதில்லை. ஆகவே மன அழுத்தத்தினைப் போக்க தியானம், மூச்சு பயிற்சி, இறை வணக்கம் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டுமாம்.
3) உடலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது நாளங்களில் நீர்சத்து அதிகமாகுமாம். ஆகவே முதலில் கவனிக்க வேண்டியது கால்களைத் தான். கால்களில் வீக்கமும், கால்களில் உரைகள் அணியும் போது வரி, வரியாக தெரியும் . அதனை வைத்து ஒருவருடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று தெரிந்து கொண்டு டாக்டர்களை தேட வேண்டும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் Gregg Fonarow சொல்கிறார். உணவுப் பொருட்களில் அதிக அளவில் குறைக்க வேண்டியது புளிப்பும், உப்பாகும். சமயலறையில் உடனடி உபயோகத்திற்காக எலுமிச்சை பழம், வினிகர், சோடா உப்பு, சோளமாவு போன்றவை இருக்கும். அவைகளெல்லாம் அதிகமாக சேரும்போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு உடலுக்கு கேடு ஏற்படும். அத்துடன் உணவு பரிமாற, தண்ணீர், தேநீர், காபி அருந்த பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. உலகத்தில் ஏற்படும் 2 கோடியே 60 லட்சம் இதய நோய்களில் 40 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகின்றதாம். சுகர்(இனிப்பு) ஒரு உயிர் கொல்லியாம். டைப் 2 நோயாளிகளுக்கு இதய நோய் வருவது அதிகம் என்று AHA என்ற அமெரிக்கா ஹார்ட் பாவுண்டேஷன் அமைப்பு சொல்கிறது. டைப் 2 நோயாளிகள் இதய மற்றும் கிட்னி நோயால் பாதிப்புள்ளாவர் என்றும் அவர்கள் நீரழிவு நிபுணர்களை ஆலோசனை செய்வது நல்லது என்று AHA பவுண்டேசன் நிபுணர் எட்வார்ட் சொல்கிறார்.
4) மாமிச உணவு இதயத்தினை பாதிக்கின்றதா: மாமிச உணவில் புரதம் அதிகமாக உள்ளது ஆனால் காய், கறிகளில் அவ்வாறு இல்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால் அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் Erin D Michos சொல்கிறார். மீன், கரி வகைகளை விட கார்போ ஹைட்ராட் நிறைந்த சுத்தரிக்கப் பட்ட தானியம், டின்னில் பதப் படுத்தப் பட்ட பழவகைகள், சுவையான Donuts , சோடா, உருளைக் கிழங்கு, சிப்ஸ், பிரெஞ்சு பிரை என்ற வறுத்த உருளைக்கிழங்கு, நாக்கில் நீர் வரவழைக்கும் சாக்லேட், சீனி, பாலால் தயாரிக்கப் படும் பொருட்கள் அதிக அளவு இதயநோய்க்கு ஆளாவீர் என்று பேராசிரியர் எரின் கூறுகிறார்.
5) குறைமாத டெலிவரி இதயத்திற்கு நல்லதல்ல: Dutch நாட்டின் ஆய்வுப்படி 37 வாரத்திற்கு முன்பு பெண்களுக்கு குழந்தை பிறந்தால் அவர்களுக்கு இதய வால்வு சம்பந்தமான நோய் வரும் என்று சொல்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான ஈஸ்ட்ரோஜென் உடல் ஆரோக்கியத்திற்கும், எலும்பு உறுதியாகுவதிற்கும், மன அமைதிக்கும் முக்கிய தேவையாகும். பெண்களுக்கு 51 வயதினைத் தாண்டி மாதவிலக்கு நிற்கவில்லையென்றால் அவர் நிச்சயமாக இதய நோய்க்கு ஆளாகுவார்கள் என்று Okland university பேராசிரியை கவிதா சின்னையன் கூறுகிறார். இங்கிலாந்தில் உள்ள Briminhgam பல்கலைக் கழக ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுப் படி ஒரு பெண்ணுக்கு மாத விலக்கு 46 வயதிற்குள் நின்று விட்டால் அவள் இதய நோயுக்கு உட்படுவாள் என்று கூறுகிறது. அதேபோன்று தான் மாத விலக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வருமென்றால் ரத்த ஓட்ட நாளங்கள் பழுதடையலாம் என்றும், அவர்கள் மகற்பேர் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று Woman's Day பத்திரிகை செய்தி கூறுகின்றது.
6) இதய நோய் ஆண்களிருந்து பெண்களுக்கு மாறுபடும் என்று கலிபோர்னியா Cedar-Sinai Heart Institute டைரக்டர் C.Noel Bairy Marly சொல்கிறார். பெண்களுக்கு உண்டான அடைப்பு இதயத்திற்கு கொண்டு செல்லும் ரத்தம், ஆக்சிஜென் நரம்புகளில் தடைகள் ஏற்படுமாம். ஆண்களுக்கு இதயத்திலிருந்து வெளியேற்றப் படும் ரத்த வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளாக இருக்குமாம். ஆகவே பெண்களுக்கு இதயநோய் வரும்போது ரத்த அழுத்தத்தினை சோதனைகளில் கண்டு பிடிப்பது சிரமமாம். பெண்களின் இதய நோய்களுக்கு அறிகுறியாக முதுகுப் பிடிப்பு, மிகக் களைப்பு, மயக்கம், தலைவலி போன்றவைகளை வைத்து கண்டு கொள்ளலாம் என்கின்றனர். ஆண்களின் இதயத்தினை தாக்கும் முதல் எதிரியாக போதையினை உண்டாக்கும் மது வகையாகும். மேலை நாடுகளில் சொல்வர் பார்லியால் தயாரிக்கப் படும் பீர் அல்லது திராட்சையில் தயாரிக்கப் படும் ஒயின் உடலுக்கு நல்லதென்று. ஆனால் அதில் ஆல்கஹால் கலந்து விடுதலால் சிறு துளி பெரு வெள்ளம் என்பதிற்கிணங்க எந்த விதத்திலும் ஆல்கஹால் கலந்த மது வகைகள் குடிப்பது இதயத்திற்கு நல்லதல்ல.
7) ஜன்னலைத் திற காற்று வரும்: கிராமத்தில் வாழும் மக்கள் காற்றோட்டமான மரம், செடிகளிடையே ரசனையுடன் வாழ்வார்கள். நகரத்தில் கதவு, ஜன்னலை மூடிக்கொண்டு ஏசி அறையில் வாழ்பவர்களுக்கு இதய நோய் சீக்கிரமே வருமாம். பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள் ஏசி காரில் மூடிக் கொண்டு தூங்குபவர்கள் மரணம் என்று. அவ்வாறு ஏன் ஏற்படுகின்றது என்றால் காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கினால் அந்த இடத்தில் ஏற்படும் நச்சுப் புகைகள், காற்றில் மிதக்கும் கிருமிகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி போன்றவைகளின் புகையில் மூச்சு திணறி இறந்து விடுவார்கள். ஆகவே காற்றோட்டமாக வழக் கற்றுக் கொள்ளவேண்டும்.
8) இயற்கை சீற்றமும், இதய நோயும்: 2003-2004 ஆண்டுகளில் காட்ரீனா புயல் அமெரிக்கா ஆர்லின்ஸ் நகரை தாக்கியதையும், ஆசியாவில் இந்திய உள்பட பல நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியதையும் பெரும்பாலோர் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு தாக்கிய இயற்கை சீற்றத்தால் பல ஆயிரக் கணக்கான மக்கள் அதிர்ச்சியிலேயே இறந்து விட்டார்களாம். மற்றும் பலர் இதய நோயால் அவதிப் படுவதாக ஆய்வு கூறுகின்றது.
9) தூக்கத்திற்கு முக்கியம் கொடுங்கள்: இளம் வயதில் இரவில் தூங்கினால் காலையில் தான் எழுவீர். ஆனால் வயது கூடக்கூட இரவு நேரத்தில் விழிப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதினையும் காண்பீர்கள். பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும்போதும், வெள்ளை படும்போதும், மாதவிலக்கு நிற்கப்போதும்போதும் தூக்கமின்மை ஏற்பட்டு அவதிப் படுவர் என்று கிளீவ்லேண்ட் பேமிலி ஹார்ட் இயக்குனரகம் டாக்டர் கிறிஸ்டின் ஜெல்லிஸ் கூறுகின்றார். அதற்கு மாற்றாக பகல் தூக்கத்தினை குறைப்பதும், அடிக்கடி காபி குடிப்பதினையும், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி விடவேண்டுமாம்.
10) ஆத்திரத்தினை அடக்கினாலும் மூத்திரத்தினை அடக்காதீர் என்ற பழமொழி உண்டு. அதற்கு காரணம் சிறுநீரை அடக்கிப் பழகினால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நாளங்கள் பாதிக்கும். தாதுப் பொருட்களின் இன்றியமையாமை: இதயம் சீராக இயங்குவதற்கு பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் தேவையான பொருட்கள். பொட்டாசியம் இயந்திர சக்தியினை செல்களுக்கு கொண்டு செல்கிறது. மாங்கனீசியம் இதய சுவர்களை பலப் படுத்துகிறது. கால்சியம் ஆண், பெண் இரு பாலாருக்கும் இதயம் சீராக செயல்பட உதவுகிறது.
11) நொறுக்குத் தீனியின் கெடுதி: வார இறுதியில் தொலைக்காட்சி, பொழுதுபோக்கு விளையாட்டு திடல்களுக்குச் செல்லுதல், சினிமா போன்றவைகளுக்கு குடும்பத்துடன் செல்லுதல் போன்றவற்றில் கிடைத்ததையெல்லாம் அளவில்லாமல் சாப்பிடுவதும், துரித உணவு உட் கொள்வதும், வயிற்றுப் பகுதி பெருத்து, உடல் எடை கூடி, அதனால் கெட்ட கொழுப்பு அதிகமாகி இதய நோயுக்கு உங்களை இழுத்துச் செல்கிறது என்று கொலம்பியா பல்கலைக் கழக ஆராய்ச்சி சொல்கிறது.
12) சூரிய வெளிச்சத்தின் பயன்: குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் நமது நாட்டிற்கு வந்து கோடை சுற்றுலா மையங்களில் திறந்த மேலுடன் சூரிய குளியல் செய்வது நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சூரிய பிரதேசத்தில் இருக்கின்ற நாமோ நகரத்தில் இருந்து கொண்டு சூரியனே பார்க்காது இருட்டிய அறையில் இருப்பது இதயத்திற்கு ஆபத்தினை வரவழைக்கும். ஏனென்றால் இதயத்திற்கு தேவையான வைட்டமின் D இயற்கையிலேயே சூரிய வெளிச்சத்தில் கிடைக்கின்றது. அதனை விட்டுவிட்டு அதனை மாத்திரைகள் மூலம் பெறுவது வீண் செலவு தானே!
13) தானம் செய்வது சாலச்சிறந்தது: பிறரது மனங்குளிர அவருக்கு உதவி செய்து அவர் மட்டுமல்ல அவர் குடும்ப உறுப்பினரும் முகத்தில் மலர்ச்சி செய்வதின் மூலம் தானம் செய்பவர் உள்ளமும் சூரியனைக் கண்டா ரோஜா மொட்டு மலர்வது போல அவர் இதயமும் மகிழ்ச்சியில் மலருமாம். ஆகவே பிறருக்கு உதவி செய்வதினை ஒரு புண்ணியமாக எண்ணாது, தன் உடலுக்கும் நல்லது என்று நினைக்க வேண்டுமல்லவா?

Tags: கட்டுரை

Share this