Breaking News

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு..!

நிர்வாகி
0
எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு தஞ்சையில் நடைபெற்றது. அக்ரோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.
முன்னதாக பொதுக்குழுவின் ஒருபகுதியாக அக்.23 அன்று தஞ்சை பி.கே. மஹாலில் மாநில பிரதிநிதிகள் சபை கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமைத் தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் அகமது நவவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையையும், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர் கட்சியின் நிதி அறிக்கையையும் தாக்கல் செய்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, துணைத் தலைவர் தெகலான் பாகவி, பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் பைஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
முன்னதாக பொதுக்குழுவில் துவக்க உரை ஆற்றிய அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, “உலகில் எந்த நாட்டிலும் அந்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களை அச்சம் கொள்வதில்லை. ஆனால், துரதிஷ்ட வசமாக இந்தியாவின் பிரதமரான மோடி உரை நிகழ்த்தினால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பெரும் அச்சப்படக்கூடிய ஒரு மோசமான சூழல் இங்கு நிலவுகிறது. காரணம் இந்த பாஜக அரசு மக்கள் நலனுக்கு எதிராக சர்வாதிகார போக்கில் அமல்படுத்தும் சட்டங்களும், திட்டங்களும் தான் அதற்கு காரணம். உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு அவலம் இல்லை. நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. அரசின் ஆதரவுடன் செயல்படும் சங்பரிவாரங்களால் முஸ்லீம்களை மட்டும் தான் அச்சப்படுகின்றனர் என்ற சூழல் இப்போது மாறிவிட்டது. கிறிஸ்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைவரும் தற்போது அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். நாட்டின் கூட்டாட்சி அமைப்பு சீர்குலைந்துள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமும் நிறைவேற்றப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு படைக்கு அதிகளவில் அதிகாரத்தை வழங்குவதன் மூலம், மேற்குவங்கம், தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களையும் தங்களின் போலீஸ் படைக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கின்றது. மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்காக சிபிஐ, என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட இன்னபிற ஏராளமான ஏஜென்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நாடு கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ளும் அதேநேரத்தில் அதனை எதிர்க்க வேண்டிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் நிலை மோசமாக உள்ளது. மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடுவதற்கு தயாரில்லாமல், பாஜக பேசும் அதே மொழிகளை மற்றொரு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு மென்மையாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். உ.பியில் பாஜக மிகப்பெரிய ராமர் சிலையை கட்டுவோம் என சொல்லும்போது, அகிலேஷ் மிகப்பெரிய பரசுராமர் சிலையை உருவாக்க முயற்சிக்கிறார். மக்களுக்கு பலனளிக்கும் மருத்துவமனைகளையோ, பல்கலைக்கழகங்களையோ கட்டுவது குறித்த வாதங்கள் இல்லாமல் போனது. நாட்டில் உள்ள முஸ்லிம்கள், ஆதிவாசிகள், தலித்துகள் குறித்து எந்தக் கட்சிகளும் பேசுவதில்லை. பிஜேபியை எதிர்கொள்ளும் ஒரே கட்சி எஸ்.டி.பி.ஐ. மட்டுமே. நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் எஸ்.டி.பி.ஐ. உடன் நிற்க வேண்டும்.
மோடி, அமித் ஷா, யோகி ஆகியோருக்கு பயந்து நாட்டில் உள்ள மத தலைவர்கள் உட்பட அனைத்து தலைவர்களும் அமைதியாக உள்ளனர். இந்த நிலைமை மாறும், அச்சமற்ற சூழல் உருவாகும்” என்று பைஸி கூறினார். இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை கட்சியின் தேர்தல் அதிகாரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அப்துல் மஜீத் தனது மேற்பார்வையில் நடத்தினார். மேலும் துணை தேர்தல் அதிகாரியாக கேரள மாநில முன்னாள் தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான அப்துல் மஜீத் ஃபைஸி செயல்பட்டார். நடைபெற்ற தேர்தலின் முடிவில் புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகளை இன்று (அக்,24) தஞ்சை பி.கே. அரங்கில் வைத்து நடைபெற்ற பொதுக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வில் காலை 11 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி அறிவிப்பு செய்தார்.
அதன்படி எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக நெல்லை முபாரக், துணைத் தலைவர்களாக எஸ்.எம்.ரஃபீக் அகமது, பி.அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்களாக எம்.நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், எஸ்.அகமது நவவி, பொருளாளராக எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்களாக டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், அம்ஜத் பாஷா, வி.எம்.அபுதாஹிர், பஷீர் சுல்தான், வழ.ராஜா முகமது, ஷஃபிக் அகமது, சுல்ஃபிகர் அலி, வழ.சஃபியா, ஃபயாஸ் அகமது, ஹஸ்ஸான் இமாம், டாக்டர். ஜமிலுன் நிஷா, முஜிபுர் ரஹ்மான், ராஜா ஹூசைன் ஆகியோர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக டாக்டர். சேக் மீரான் வேலூர், அப்துல் சத்தார் கன்னியாகுமரி, ஜாபர் அலி உஸ்மானி தென்காசி, நூர் ஜியாவுதீன் ராம்நாடு, ஜியாவுதீன் மதுரை, அபுபக்கர் சித்திக் தேனி, முபாரக் திருச்சி, புரோஜ் கடலூர், டாக்டர் ரபீக் பெரம்பலூர், அஸ்கர் பரமக்குடி, ஆதம் வடசென்னை, அசாருதீன் வடசென்னை, முஸ்தபா கோவை, லுக்மான் ஈரோடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு பெறும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும், தனியார்துறை பணிகளில் இடஒதுக்கீடு, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் மற்றும் ஆபத்து நிறைந்த அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டத்தை ரத்து வேண்டும், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டுவர வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சமவாய்ப்பு ஆணையம் ஏற்படுத்த வேண்டும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த வேண்டும், மின்னணு வாக்கு இயந்திரத்தை விடுத்து வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலங்களான பள்ளிவாசல், தேவாலயம் கட்டும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும், இளைஞர்களை போதையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் காட்டக் கூடாது, வக்ஃப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்கள் பலன் பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், மனித உரிமைக்கு எதிரான யு.ஏ.பி.ஏ. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என்.ஐ.ஏ.வை கலைக்க வேண்டும், தமிழக அகதிகள் முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையின் அடாவடி தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும், டி.என்.பி.எஸ்.சி. மீதான நம்பிக்கையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நவம்பர் 01 ‘தமிழ்நாடு நாளை’ அரசு விடுமுறை தினமாக அறிவித்து அரசே சிறப்பாக கொண்டாட வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாக்க வேண்டும், சிஏஏ, ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் போராட்ட வழக்குகளை முழுவதும் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags: செய்திகள்

Share this