மணமகனுக்கு திருக்குர்ஆனை எழுதி பரிசளித்த மணமகள்... வாழ்க தம்பதியினர்! மு.தமிமுன் அன்சாரி , Ex, MIa
நிர்வாகி
0
இன்று தோப்புத்துறையில் மணமகன் B. சிக்கந்தர் பாஷா அவர்களுக்கும், மணமகள் A. ஹனியா ஜெஸ்மின் அவர்களுக்கும் நடந்திருக்கும் திருமண நிகழ்வு பலரையும் ஈர்த்திருக்கிறது.
இந்த திருமண நிகழ்வில் நான் வாழ்த்துரை வழங்கிட சம்மதித்திருந்ததால், திருமண பத்திரிக்கையிலும் என் பெயரை பிரசுரித்திருந்தார்கள்.
ஆனால் தவிர்க்க முடியாத சூழலால் நான் பங்கேற்க முடியவில்லை.
இரண்டு குடும்பத்தினரும் எனக்கு நெருக்கமானவர்கள் என்பதால் பங்கேற்க இயலாமல் போனதில் எனக்கு பெரும் வருத்தம்தான்.
இறைவனின் அருளால் திருமணம் பலரின் துவாக்களோடு: வாழ்த்துகளோடு நடைபெற்றது என்பதை டாக்டர் முஜிப் என்னிடம் தெரிவித்தார்.
இந்த திருமணத்திற்கு நான் அவசியம் வருகை தந்து வாழ்த்துரை வழங்க வேண்டும் என மணமகனின் பெற்றோர் ஜனாப்.பகுருதீன் தம்பதியினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதற்கு முக்கிய காரணம் நிக்காஹ் நிகழ்வில், மணமகள் தனது கரத்தால் முழு குர்ஆனையும் எழுதி அதை மணமகனுக்கு திருமண பரிசாக வழங்க விருப்பதால், அதை பாராட்டும் வகையில் நான் வாழ்த்திப் பேச வேண்டும் என்றார்கள்.
அந்த இனிய நிகழ்விற்கு நான் எப்படியாவது வர வேண்டும் என மஜக சகோதரர்கள் அகமதுல்லாவும், மஜிதும் வலியுறுத்தினர்.
சூழல் நெருக்கடி காரணமாக அது சாத்தியமில்லாமல் போய் விட்ட வருத்தம் என்னை வாட்டுகிறது.
நல்ல வேளையாக தோப்புத்துறை ஜாமியா பள்ளியின் இமாம் சாகுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் இது குறித்து சிறப்பாக பேசி மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம், தொலைக்காட்சி ஆக்ரமிப்புகள், பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு மத்தியில் ஒரு பெண், நேரம் ஒதுக்கி; கை வலி பாராமல் முழுக்குர்ஆனை எழுதியிருப்பது ஒரு மாபெரும் பணியாகும்.
அதுவும் பிழையின்றி, சீரான கையெழுத்தில் நேர்த்தியாக அதை தயாரித்திருப்பது அவரது அயராத விடா முயற்சியையும், வித்தியாசமான சிந்தனைகளையும் வெளிக்காட்டுகிறது.
பழங்கால கையெழுத்து பிரதிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.
நிகழ்காலத்தில் தொழில் நுட்ப வசதிகள் பல இருந்தும், ஒரு ஈடுபாடு காரணமாக தியாகப்பூர்வ பணியை மேற்கொண்ட மணமகள் A. ஹனியா ஜெஸ்ரின் அவர்களின் உழைப்பை பாராட்டி அனைவரும் பிரார்த்திக்கிறார்கள். தகவல் அறிந்தவர்களும் ஆச்சர்யம் பொங்க பாராட்டுகிறார்கள்.
இத்தருணத்தில் அருமைக்குரிய சாதனை பெண்ணை பெற்றெடுத்து, மார்க்க வழியில் வளர்த்தெடுத்த அப்துல் மாலிக் தம்பதியினரையும் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
நிறைவாக,
இந்த மணமக்களுக்கு நமது அனைவரின் வாழ்த்துக்களை கூறி பிரார்த்திப்போம்!
இறைவா..
இந்த மணமக்களுக்குஅகத்திலும், புறத்திலும் அபிவிருத்தி செய்வாயாக...
Tags: சமுதாய செய்திகள்