நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்க! - தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பட்டியலின சமூகத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்தும், சென்னை, தாம்பரம், கோவை, மதுரை உள்ளிட்ட 11 மாநாகராட்சிகளின் மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளிலும் பட்டியல் சமூகம் மற்றும் பெண்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.
அதேபோல் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கும் பட்டியல் சமூகம் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வகையிலும் அரசாணை வெளியிடப்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பதவிகளில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தவருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பதவிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி சமூகநீதியில் தமிழகம் எப்போதும் முன்மாதிரியான மாநிலம் என்பதை பறைசாற்ற வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
மேலும், மேயர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் முறையானது குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்பதால் அங்கு மக்கள் நலன் என்பது இல்லாமல் போகும். ஆகவே, மேயர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags: செய்திகள்